சுரேஷ், பாரதி பூங்காவில் பத்தாவது சுற்றுச் சுற்றிக் கொண்டிருந்த போதும், அந்தக் கடைசி பெஞ்சில் உட்கார்ந்திருந்தவன் மொபைலில் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தான். அழுக்கான ஒரு டி-ஷர்ட். அரை நிஜார் தெரிய ஒரு லுங்கி. ஐந்து நாட்களுக்கும் மேலே ஆகியிருக்கும் அவன் குளித்து. வறுமைக்கோட்டைத் தாண்டி வர, அவனுக்குப் பல வருடங்களாகலாம். இப்படிப்பட்ட ஒருவன் மொபல் போனில் அரை மணி நேரத்திற்கு மேலாகப் பேசிக் கொண்டிருப்பது சுரேஷுக்கு ஆச்சரியத்தையும் மட்டுமல்ல, எரிச்சலையும்கூடத் தந்தது.
இந்த மாதிரி அவன் பேசிக் கொண்டிருந்தால், நிச்சயம் மாசம் ஆயிரம் ருபாய்க்குக் குறைவாக பில் வராமலிருக்காது. அவன் சம்பாதிப்பது மிஞ்சி மிஞ்சிப் போனால் ஐயாயிரம் ரூபாய் இருக்கலாம். அதில், ஆயிரம் ருபாய்க்கு மொபைலில் பேசினால் எப்படி குடும்பம் நடத்த முடியும்? அப்படி என்ன அரட்டை வேண்டிக் கிடக்கு? திருந்தாத ஜென்மங்கள்!” என்றெல்லாம் நினத்தபடி வாக்கிங்கை முடித்த சுரேஷுக்கு ஒரு ஐடியா தோன்றியது. அவனுடன் பேசிப் பார்த்தால் என்ன? “இப்படியெல்லாம் காசை வீணாக்காதே அப்பா”, என்று நைசாக எடுத்துரைத்தால்தான் என்னவென்று யோசித்தபடி அந்த லுங்கி வாலாவை நெருங்கினான்.
சுரேஷைப் பார்த்தவுடன் அவன் மையமாகச் சிரித்தான்.
“டெய்லி போன்ல பேசறீங்க போலிருக்கு.”
“ஆமாங்க”
“டெய்லி அரை மணிநேரத்துக்கும் மேலே பேசறீங்களே. நெறையக் காசு ஆவுமே. யார்கூட அப்படிப் பேசறீங்க?”
“என்னோட பொண்ணுகிட்டையும், பையன்கிட்டையும்தாங்க”
“என்னது? பொண்ணு, பையன்கிட்டேயா? அவங்க எங்க இருக்காங்க?”
“அவங்க பெங்களூர்லே படிக்கறாங்க சார். என் சம்சாராம் மூணு மாசம் முன்னாடி தவறிப் போச்சு. அதனால அவங்களைப் பள்ளிக் கூடத்திலேர்ந்து நிறுத்திரலாமான்னு நெனைச்சேன். ஆனா அவங்க அம்மா வேலை செஞ்ச எடத்து மொதலாளி அம்மாவோட மக, என் பசங்கள பெங்களூரு கூட்டிட்டுப் போய்ப் படிக்க வெக்கறேன்னு சொன்னாங்க. என்னாலையும் சரி, என் பசங்களாலையும் சரி. தினமும் ஒருத்தருகொருத்தர் தெனமும் பேசாம இருக்க முடியாது. அதுக்காக அவங்களே எனக்கும் எம் பசங்களுக்கும் மொபைல் போன் வாங்கிக் கொடுத்திருக்காங்க. ஸ்கூலுக்குப் போறத்துக்கு முன்னாடி தெனம் அரை மணிநேரம் என்னோட பேசுவாங்க. ஆனா, அவங்களோட மொபைல் பேசறது இன்னியோடக் கடைசி நாளுங்க.”
“ஏம்ப்பா? என்ன ஆச்சு?”
“மொதலாளியம்மா எனக்கும் பெங்களூர்லே வேலை வாங்கிக் கொடுத்துட்டாங்க. இன்னிக்கி ராத்திரியே நானும் பெங்களூரு போறேன். இனிமே என் பசங்களோடயே நானும் இருப்பேன் சார். போன்ல பேசத் தேவையில்லை”
- சிமுலேஷன்
2 comments:
manathai thodum sirukathai. Story is very good.,..Valli
manathai thodum vithamaga kathai erukku.Very good story...Valli
Post a Comment