Thursday, December 06, 2007

ரசிகப்ரியா...ரசிக்கும்படியா...

னகர்நாடக இசையில் "மேளகர்த்தா" சொன்னா, என்னதுன்னு சில பேர் முழிக்கலாம். நெறையப் பேருக்குத் தெரிஞ்சுருக்கும். அது ஒண்ணுமில்லை. "ஜனக" அல்லது "தாய்" இராகங்கள்ன்னு சொல்ற 72 ராகங்களைத்தான் மேளகர்த்தாங்றோம். மத்த ஆயிரக்கணக்கான ராகங்களும் இந்த மேளகர்த்தாவிலிருந்துதான் தோணித்துன்னும் சொல்றோம். மேளகர்த்தா ராகங்களோட வரிசையில் கடோசி ராகம்தான் நாம் இன்னிக்கிப் பேசப் போற, இல்ல, இல்ல, கேட்கப்போற "ரசிகப்ரியா" ராகமாகும். ரசிகப்ரியா ராகம் ஒரு "விவாதி" ராகம். அதாவது ஒவ்வொரு ராகத்துக்கும் ஆரோகணம், அவரோகணம்ன்னு ஏழு ஸ்வரங்கள் ஏறு வரிசையிலும், எறங்கு வரிசையிலும் இருக்கும். இப்படி அடுத்தடுத்தாப்ப்ல வர்ற ஸ்வரங்களுக்கிட்ட ஒரு நட்பு இருந்தால், அவை பாடுவதற்கு சுலபமா இருக்கும். அந்த மாதிரி இல்லாம, அடுத்தடுத்ததா வர்ற ஸ்வரங்களுக்கிட்ட ஒரு ஒறவோ, நட்போ இல்லாமலிருந்தா அந்த ராகங்கள் ரொம்ப நேரம் பாடறதுக்குக் கஷ்டமா இருக்கும். இந்த ராகங்களைத் தான் விவாதி ராகம்ன்னு சொல்றோம். 72 மேளகர்த்தா ராகங்கள்ல 40 ராகங்களை விவாதி ராகங்கள்ன்னும் மத்ததையெல்லா "சம்வாதி" ராகங்கள்ன்னும் சொல்றோம்.

சரி, சரி விவாதியப் பத்தி நெறைய விவாதம் பண்ணியாச்சு. இப்ப நம்ம ரசிகப்ரியாவுக்கு வருவோம். இந்த இராகத்தின் ஆரோகணம், அவரோகணம் இதோ;

ஸ ரி3 க3 ம2 ப த3 நி3 ஸா
ஸா நி3 த3 ப ம2 க3 ரி3 ஸ

ரொம்ப நேரம் பாடறத்துக்கு கொஞ்சம் கஷ்டமான ராகம் அப்படீன்னு சொன்னாலும், ரசிகப்ரியா ஒரு அழகான, ரசிக்கும்படியான ராகமாகும் (தலைப்பு வந்தாச்சு. ஓகேவா?). ஆனா, இதுலே நெறயப் பாட்டு இல்ல. இருக்கற ஒண்ணு, ரெண்டு பாட்டைத்தான் இங்கே போடலாம்னுதான் ஒரு ஐடியா.

மொதல்ல சினிமாப் பாட்லேர்ந்து ஆரம்பிக்கலாமா? "கோவில் புறா" அப்படீங்கற படத்ல வர்ற "சங்கீதமே"ங்ற இந்தப் பாட்டு, ரசிகப்ரியா ராகம்தான். ஆனா வழக்கமான சினிமாப் பாட்டு மாதிரியே, இதிலும் ஒரே ராகம்தான் முழுசும் இருக்கும்னு கேரண்டியெல்லாம் கொடுக்க முடியலை. சரி, பாட்டை இப்பக் கேட்கலாமா?



கர்நாடக சங்கீதத்லே மொதல்லே நாம் கேக்க இருக்கறது, ரவிகிரண் பாடின "ரசிகப்ரியே, ராக ரசிகப்ரியே" என்ற பாடல். அதனன இங்கே கேக்கலாம்.

ரசிகப்ரியாவின் ஆரோகணம், அவரோகணம் என்னென்னு ஏற்கெனவே பார்த்தோம். அதனை டெவலெப் செய்வது எப்படின்னும், ஜெயதேவரின் அஷ்டப்தி ஒண்ணும் இங்கே கேப்போம் இப்ப.

இப்ப அடுத்ததா கேக்கப் போறது ஒரு அழகான தில்லானா. இதைப் பாடினது யாருன்னா, மறைந்த பண்டிட்.விஸ்வேஸ்வரன்அவர்கள். நாட்டிய மேதை சித்ரா விஸ்வேஸ்வரன் அவர்களின் கணவர். இந்தத் தில்லானாவை, ஒரு முறை ஒரு ஊர்லேர்ந்து, இன்னோரு ஊருக்குக் கார்ல போகும்போது இயற்றினாராம். கர்நாடிக், ஹிந்துஸ்தானி சந்தூர், கிடார்னு எது எடுத்தாலும், ஒரு ஆர்வத்துடன் செய்த ஒரு மேதை அவர்.






சிதம்பரம் அகாடெமி ஆஃப் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸ்லேர்ந்து இந்தத் தில்லானா அடங்கின "அந்தர்த்வனி" ங்கற "சிடி"ய வெளிட்ருக்காங்க.

அடுத்ததா இப்ப நாம் பாக்கப்போறது "காவலம் ஸ்ரீகுமார்" என்ங்றவரோட பாட்டு. மனுஷன் ஜேஸுதாஸையும், பாலமுரளி கிருஷ்ணாவையும் கலந்த மாதிரி என்னமாப் பாடறார் பாருங்க. எளிமையான இருந்து கொண்டு எப்படி அலட்டாமல் பாடறார்ன்னும் பாருங்க. இவர் "கைரளி"ங்ர மலையாள டி.வி சானல் ஒண்லே அருமையான ப்ரொக்ராம் ஒண்ணு கொடுப்பார்ங்றது மட்டும்தான் இத்தன நாள் தெரிஞ்ச விஷயம். இப்பதான் புரியுது, ஸ்ரீகுமார் ஒரு பெரிய வித்வான்னு.

அப்புறம் ஒரு முக்கியமான விஷயம். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஸம்ஸ்க்ருதம், இந்த மொழிகள்லதான் கர்நாடிக் கச்சேரிலே பொதுவாக் கேட்போம். ஆனா, மலையாள மொழிலே பாடறதே இல்லியேன்னு நெனைக்கறது உண்டு. இப்போ நீங்க கேக்கப் போறது ஒரு மலையாளக் க்ருதி. "குட்டிகுஞ்சு தங்காச்சி" அப்படீங்றவர் எழுதினது.






Thursday, June 14, 2007

சிவாஜி - பஞ்ச் டயலாக்ஸ்

அந்தக் காலம் முதல் இந்தக் காலம் வரை, தமிழ் சினிமாக்களில் "பஞ்ச்" வசனங்களுக்குப் பஞ்சமேயில்ல. "சிவாஜி" மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன? ஆவலுடன் நீங்கள் எதிர்பார்க்கும் சிவாஜி பஞ்ச் டயலாக்ஸ் இதோ ..........................................................................

"வயலுக்கு வந்தாயா? விதை விதைத்தாயா? நாற்று நட்டாயா? எங்கள் குலப் பெண்களுக்கு மஞ்சள் அரைத்துக் கொடுத்தாயா? சீ! மானங்கெட்டவனே!"

- வீரபாண்டிய கட்டபொம்மன்

"கோயிலில் கலகம் செய்தேன். உண்மைதான் கோயில்கூடாது என்பதற்காக அல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக் கூடாது என்பதற்காகத்தான்"

- பராசக்தி

"கேள்வியை நீ கேட்கிறாயா? அல்லது நான் கேட்கட்டுமா?

- திருவிளையாடல்

"கை வீசம்மா, கை வீசு; கடைக்குப் போகலாம் கை வீசு"

- பாசமலர்

"நீ முந்திண்டா நோக்கு...; நான் முந்திண்டா நேக்கு..."

- வியட்நாம் வீடு

"வேற ஒண்ணும் இல்லடி. கிளிக்கு றெக்க மொளச்சுடுது. ஆத்தவிட்டு பறந்து போய்டுத்து.

- கௌரவம்

by சிமுலேஷன்

Thursday, June 07, 2007

அண்ணலின் ஆணையேந்தி...


பல்லவி

அண்ணலின் ஆணையேந்தி
அன்னை ஜானகியைத் தேடி
அலைகடல் கடந்தாய் அன்றே
அஞ்சனைத் தவப் புதல்வா!

அனுபல்லவி

அசோகவனம் அழித்தாய்
அக்சனை அங்கே மாய்த்தாய்
இலங்கையை கடைந்தெரிந்தாய்
இடர்களைக் களைந்தெரிந்தாய்
இத்தனை செயல் புரிந்தும்
இறுமாப்பே இல்லையானாய்
எத்தனை எட்டினாலும் ஐய
நின் நிகருமுண்டோ

சரணம்

ஒப்பிலா வலிமை பெற்றாய்
ஓதுவோம் உந்தன் நாமம்


இராகம்: கல்யாண வசந்தம்
தாளம்: ஆதி

பாடியவர்: ஆதித்யா
மிருதங்கம்: குரு. நெய்வேலி கணேஷ்


Tuesday, February 06, 2007

புனைபெயர்களும் புதிரும்...

புனைபெயரில் எழுதி வந்துள்ள பலரின் உண்மையான பெயர் என்னெவென்று தெரிந்து கொள்ளும் ஆவல் நம்மில் பலருக்கும் இருக்கலாம். சிலருக்கு அவர்கள் யாரென்பது தெரிந்திருக்கலாம். பலருக்குத் தெரியாமலிருக்கலாம்.
தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்குக் சொல்லலாமே.


**** வண்ணத்தில் இருக்கும் பெயர்களுக்கு பின்னூட்ட்டங்கள் மூலம் விடைகள் வந்துவிட்டன.

01. அகஸ்தியன்
02. அகிலன்
03. அசோகமித்திரன்
04. அம்பை
05. ஆதவன்
06. இந்திரா பார்த்தசாரதி
07. ஏ.கே.செட்டியார்
08. கல்கி
09. கல்யாண்ஜி
10. கண்ணதாசன்
11. கடுகு
12. கர்நாடகம்
13. கரிச்சான் குஞ்சு
14. காந்தன்
15. சாவி
16. சாண்டில்யன்
17. சிட்டி
18. சுபா
19. சுஜாதா
20. செம்பியன்
21. சோ
22. ஜெகச்சிற்பியன்
23. ஸ்ரீ வேணுகோபாலன்
24. ஜீவா
25. ஸ்டெல்லா புரூஸ்
26. தமிழ்வாணன்
27. தாமரை மணாளன்
28. துமிலன்
29. தேவன்
30. பசுவய்யா
31. பரணீதரன்
32. பரந்தாமன்
33. பாக்கியம் ராமஸ்வாமி
34. புதுமைப் பித்தன்
35. புஷ்பா தங்கதுரை
36. பூவண்ணன்
37. பொன் வண்ணன்
38. ஞானி
39. ரகமி
40. ராண்டார்கை
41. ராஜெஷ் குமார்
42. மகரம்
43. மதன்
44. மனுஷ்ய புத்திரன்
45. மாயாவி
46. மெரினா
47. மௌனி
48. லஷ்மி
49. நாடோடி
50. வல்லிக் கண்ணன்
51. வண்ணதாசன்
52. வாதூலன்
53. வாண்டு மாமா
54. வாலி
55. விடையவன்

விடைகளும், விடுபட்டவைகளும் வரவேற்கப்படுகின்றன.


- சிமுலேஷன்

Saturday, January 27, 2007

ஒடிசி குவிஸ் 2007 (2)

1. சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்காட்லாண்டைச் சேர்ந்த இருவர், துவக்கி இன்றும் சென்னையில் வெற்றிகரமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற நிறுவனம் எது? (காலத்தை வென்று செயல்படுவதும் சாதனையல்லவா?)

2. 1914ல் மேக்ஸ் வான் லா மற்றும் ஜேம்ஸ் ப்ஃராங்க் என்ற இரு விஞ்ஞானிகள் எக்ஸ் கதிர்கள் குறித்த அவர்களது ஆராய்ச்சிக்காக நோபல் பரிசு பெற்றார்கள். தங்க மெடல் பெற்ற இருவருக்கும் சில வருடங்கள் கழித்து, நோபல் சொசைட்டி தங்கப் பதக்கங்களை மீண்டும் வழங்கியது ஏன்? (கரையாத மனமும் உண்டோ?)

3. 1980ஆம் ஆண்டு கனடா நாட்டில் நடைபெற்ற 'நேஷனல் ஹாக்கி லீக்' போட்டிகளின் போது தற்செயலாகக் கண்டுபிடிக்கப்பட்டது. 2000ஆம் ஆண்டு சிட்னியில் நடைபெற்ற ஒலிம்பிக்கில் 110,000 கலந்துகொண்டு ஒரு புதிய சாதனை செய்தார்கள். அது என்ன? (அலை பாயுதே கண்ணா)

4. சென்னை ம்யூசிக் அகாடெமி வழங்கும் 'சங்கீதக் கலாநிதி' விருதினை 1946 மற்றும் 1967 ஆண்டுகளில், பெற்றவர்களிடையே உள்ள ஒற்றுமை என்ன? (ஹேப்பி பர்த் டே தியாகு)

5. ரே ஹாருன் என்னும் கார் பந்தய வீரர், 1911ஆம் ஆண்டு தனது காரில் ஒரு சிறிய மாற்றம் செய்த காரணத்தினால், பந்தயத்தில் முதலாவதாக வர முடிந்தது. அதன்பின் எல்லாக் கார்களிலும் ஏற்பட்ட அந்த மாற்றம்தான் என்ன? (1953ல் சிவாஜியுடன் பண்டரி பாய்)

- சிமுலேஷன்

ஒடிசி குவிஸ் 2007

நேற்றைய தினம் சென்னை ம்யூசிக் அகாடெமியில், "ஒடிசி குவிஸ்" நடை பெற்றது. 'ஒடிசி' சென்னையில் உள்ள ஒரு புகழ்பெற்ற புத்த்கக் நிறுவனம். இந்த நிறுவனம் ஆண்டுதோறும, பெரிய குவிஸ் நிகழ்ச்சிகளை நடத்திப் பல பரிசுகளையும் வழங்குகின்றது. நேற்றைய நிகழ்ச்சியில் வழங்கப்பட்ட பரிசுகளின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் இந்திய ரூபாயாகும். சில மாதிரிக் கேள்விகள் இங்கே. உங்களுக்கு விடை தெரிந்தால் சொல்லுங்கள்.



01. மேலே உள்ள படத்தில் இருப்பவர் யார்? இந்தப் படத்தின் சிறப்பு என்ன?


02. இந்தக் கொடியினை நூறு ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்றியவர் யார்?



03. இந்த விலங்கின் பெயர் என்ன? எந்த அமைப்ப, இந்த விலங்கினை தனது சின்னமாகக் (Logo) கொண்டுள்ளது?


04. இந்த வரைபடத்தில் உள்ள நாட்டிற்கும், நாம் சாப்பிடும் ஒரு உணவுப் பொருளுக்கும் தொடர்பு உண்டு. அது என்ன?



05. இந்தப் படத்தில் உள்ள கட்டிடத்திற்கும்


இந்தப் படத்தில் உள்ள கட்டிடத்திற்கும் உள்ள ஒற்றுமை என்ன?

- சிமுலேஷன்

Thursday, January 25, 2007

பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப் பரிந்து



பால்நினைத் தூட்டும் தாயினுஞ்சாலப்
பரிந்துநீ பாவியே னுடைய

ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உலப்பிலா ஆனந்த மாய

தேனினைச் சொரிந்து புறம்புறந்திரிந்த
செல்வமே சிவபெருமானே

யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ தினியே.


மாணிக்கவாசகரின் திருவாசகம்

பிடித்த பத்து - முத்திக்கலப்புரைத்தல்

(திருத்தோணிபுரத்தில் அருளியது - எழுசீர் ஆசிரிய விருத்தம்)



இராகம்: பாகேஸ்ரீ
பாடியவர்: ஆதித்யா

Friday, January 05, 2007

பாட்டுக் கேட்கப் போனார்...படம் வரைந்து வந்தார்

இசை விழாக்களுக்குச் செல்லும் பலரும், கச்சேரிகளைக் கேட்பது மட்டுமின்றி, அரட்டை அடிப்பது, கேன்டீனில் ரவுண்டு கட்டுவது போன்ற இன்ன பிறவும் செய்வதுண்டு. ஆனால், ஆள்வார்ப்பேட்டை சீத்தம்மா காலனியைச் சேர்ந்த, ஓய்வு பெற்ற தணிக்கை அதிகாரியும், வருமானவரி ஆலோசகருமான வி.சுப்பிரமணியன், புதுமையான பொழுதுபோக்கு ஒன்றினை வைத்துள்ளார்.

கச்சேரிகளுக்கு செல்லும் போது, வெற்றுத்தாள்களும், வண்ணப் பென்சில்களும் கொண்ட ஒரு 'கிட்'டினை எடுத்துச் செல்கிறார். வசதியான ஒரு இடத்தில் உட்கார்ந்து கொண்டு, பாட்டுக்களை இரசித்துக் கொண்டே, இசைக் கலைஞர்களை வரைந்து தள்ளுகின்றார். கச்சேரி முடிவதற்குள்ளாகவே, வண்ணமும் அடித்து, முடிவில் அந்தந்த இசைக் கலைஞர்களிடம், தான் வரைந்த படத்தினைக் காண்பித்து ஆட்டோகிராஃபும் வாங்கி விடுகின்றார். இதனால் எல்லா இசைக் கலைஞர்களிடமும், இவருக்கு நன்கு பரிச்சயமுண்டு. இந்த வருட இசை விழாவில் இவர் வரைந்த சில படங்களை இங்கே காணலாம்.


01. ப்ரவசனக் கலைஞர் விசாகா ஹரி

02. ஓ.எஸ்.அருண் மற்றும் குழுவினர்

03a. மஹதி
03b. கர்னாடிகா சகோதரர்கள் சசிகிரண் & கணேஷ்

04. சாருலதா மணி
05. காயத்ரி கிரீஷ்

06. சரஸ்வதி வாக்கியேயக்காரா டிரஸ்ட் நிறுவனர் என்.வி.எஸ்

07. சங்கீதக் கலாநிதி டி.என்.கிருஷ்ணன்

08a. ஐஷ்வரியா வித்யா ரகுநாத்
08b. வி.சங்கர நாராயணன்

09. மதுரை சுந்தர்

10a. ஆர்.பாலசுப்ரமணியன்
10b. டி.கே.கோவிந்தராவ்

11. புல்லாங்குழல் என்.ரமணி மற்றும் குழுவினர்

12. சவிதா நரசிம்மன்

13. சுகுணா புருஷோத்தமன்


14. சிக்கில் குருசரண்

இவரது 'அனைவரையும் கவரும் ஹரிதாஸ் பஜன்' படத்தினைக் காண இங்கே சொடுக்கவும்.

- சிமுலேஷன்

Thursday, December 21, 2006

இராகங்களை இனங் கண்டுகொள்ளுதல் எப்படி?

இராகங்களை இனங் கண்டுகொள்ளுதல் எப்படி? (How to identify Ragas?) என்ற தலைப்பிலே சென்ற சனியன்று (16.12.2006) ஒரு பயிற்சிப் பட்டறை, மயிலை ராகசுதா ஹாலில் நடைபெற்றது, நடத்தியவர்கள் டாக்டர்.சுந்தர் மற்றும் சூரியபிரகாஷ். டாக்டர்.சுந்தர் ஒர் எலும்புச் சிகிச்சை மருத்துவர். சூர்யப் ப்ரகாஷ் அவர்கள் ரிசர்வ் வங்கிகியிலே பணி புரிபவர். காதுக்கினிய இசைக் கச்சேரிகள் பல தந்து, வளர்ந்து வரும் ஒரு இசைக் கலைஞர். டாகடர்.சுந்தரும் தனது ஒய்வு நேரங்களில் இசைக் கச்சேரிகள் செய்வதனுடன், சூர்யப்ரகஷுடன் சேர்ந்து இசை குறித்தான விழிப்பு நிகழ்ச்சிகள் பல நடத்தி வருகின்றார். சரி. மேலே குறிப்பிட்ட இந்தப் பட்டறையிலிருந்த்து சில துளிகளைப் பார்ப்போம்.

இராகம் என்பது கேட்பவருக்கு இனிமையான ஒலியெழுப்பக் கூடிய ஸ்வரங்களின் வரிசையாகும். மேலும் இராகம் என்பது இந்திய இசையின் ஒரு தனித்தன்மையுமாகும். ஒவ்வொரு இராகத்திற்கும் ஒரு சிறப்புத் தன்மை உண்டு. ஒவ்வொரு இராகத்திலும் ஐந்து, ஆறு அல்லது ஏழு ஸ்வரங்கள் இருக்கும். ஐந்து ஸ்வரங்கள் கொண்ட ராகங்கள் ஔடவ ராகங்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஆறு ஸ்வரங்கள் கொண்ட இராகங்களுக்கு ஷாடவ ராகம் என்ற பெயர் உண்டு. எல்லா ஏழு ஸ்வரங்களையும் கொண்டுள்ள ராகங்கள் சம்பூர்ண ராகங்கள் என்றழைக்கப்படுகின்றன. ஒரு ராகத்தின் ஆரோகனத்திலோ அவரோகனத்திலோ ஸ்வரங்கள் சரியான வரிசையில் இல்லையென்றால் இது வக்ர ராகம் என்று அழைக்கப்படும். கர்நாடக இசையில், ஏழு ஸ்வரங்களையும் சரியான வரிசையில் கொண்டுள்ள 72 ராகங்கள் இருக்கின்றன. இவற்றிற்கு மேளகர்த்த ராகங்கள் என்ற பெயர் உண்டு. இந்த மேளகர்த்தா இராகங்களிலிருந்து ஸ்வரங்களை சிறிது மாற்றக் கிடைக்கும் எண்ண்ற்ற இராகங்கள் ஜன்ய இராகங்கள் எனப்படும்.


"இப்படிப்பட்ட குணங்கள் கொண்ட இராகங்களை ஒரு கச்சேரியில் இனங் கண்டு கொள்ள வேண்டிய தேவை என்ன? பின்னர் எப்படி இனங் கண்டு கொள்ளுவது?" என்பது பற்றிய இந்தப் பட்டறை சுமார் இரண்டரை மணி நேரம் நடந்தது. சென்னையெங்கும் பல்வேறு இசைக் கச்சேரிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த சமயத்தில், ஒரு விவாதப் பட்டறைக்கு, கிட்டத் தட்ட 200 பேர் கொள்ளக் கூடிய ஒரு அரங்கம், நிரம்பி வழிந்ததென்றால், இரசிகர்கள் வெறும் பாட்டை மட்டும் இரசிக்க விரும்புவதில்லை. மென்மேலும் அறிய ஆவலுடன் இருக்கின்றார்கள் என்பதும் புரிந்தது.

முதன் முதலில் இசை நிகழ்ச்சி செல்லும் ஒருவர், அங்கு பாடப்படும் பாடல்களைச் சும்மா கேட்டுவிட்டு வருகின்றார். இரண்டு மூன்று முறை ஒரே பாடலைக் கேட்ட அவருக்கு, அந்தப் பாடல் மனதில் பதிகின்றது. பின்னர் அந்தப் பாடலின் அழகை இரசிக்க ஆரம்பிக்கிறார். புரிந்த மொழியாக இருந்தால், பொருளழகை இரசிக்கின்றார். அடுத்ததாகப் பொருள் புரிந்தாலும், புரியாவிட்டாலும், இராகத்தின் அழகினை இரசிக்கவும் செய்கின்றார்.

அடுத்த கட்டமாக, "இது என்ன இராகம்?', என்றெல்லாம் ஆராய்ச்சி செய்ய ஆவல் ஏற்படுவது மனித இயல்பு. பின்னர் அந்த இரகத்தினை மனதில் நன்கு பதிய வைத்துக் கொள்கின்றார். அடுத்த முறை, வேறொரு நிகழ்ச்சியில், அதே இராகத்தில் வேறொரு பாடல் பாடப்படும்போது, "இது நமக்குத் தெரிந்த இந்த இராகம்தானே. சரியாகக் கண்டு பிடித்து விட்டோமே", என்று தனக்குத்தானே ஷொட்டு கொடுத்துக் கொள்கிறார்.

அடுத்த கட்டமாக, தனக்குத் தெரிந்த நண்பர்களுடன், இதனை அலசி, விவாதம் செய்யும் அளவுக்கு, தேறி விடுகின்றார். ஆக மொத்தம், இது ஒரு தேடுதல் பயணத்தில் ஒரு கட்டமாகும். இந்தக் கண்டு பிடித்தலை எப்படிச் செய்யலாமென்றால், வழிகள் வருமாறு:-

1.தெரிந்ததிலிருந்து தெரியாதற்கு: தெரிந்த பாடல்களின் இராகங்களை, மனதிலிருத்திப் , பின்னர் அதனைக் குறிப்பாக வைத்து, மற்ற பாடல்களின் இராகங்களைக் கண்டு பிடிப்பது. இதனைப் பெரும்பாலோனோர் செய்கின்றனர். உதாரணமாக, "என்ன தவம் செய்தனை யசோதா" என்ற எளிமையான பாடல் "காப்பி" இராகத்தில் அமைந்தது என்று மனதில் பதியவைத்துக் கொண்டால், அடுத்த முறை, "ஜகதோதாரணா" என்று யாராவது ஆரம்பிக்க, உடனே, காப்பி மனதில் பளிச்சிட்டுப் "பேஷ், பேஷ், இந்தக் காப்பியும் ரொம்ப நன்னாயிருக்கே" என்று சொல்லத் தோன்றும்.

2. திரைப்படப் பாடல்கள் மூலம் ***: அடுத்தபடியாக, திரைப்படப் பாடல்களை ரெஃபரன்ஸாக எடுத்துக் கொள்வது. இதுவும் பலரும் கடைப்பிடிக்கும் ஒரு நுட்பம்தான். விரும்பினாலும், விரும்பாவிட்டாலும், நமது காதுகளில் விழுவது, திரைப்படப் பாடல்கள்தான். அவற்றின் தரத்தினைப் பற்றிப் புலம்பிக் கொண்டிருப்பதனை விட்டு, அந்தப் பாடல்களிலுள்ள, இராகங்களை மனதில் பிடிக்க முயற்சிக்கலாம். உதாரணமாக, "முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே", "பூமாலை வாங்கி வந்தான், பூக்கள் இல்லையே", பாடல்கள், "கானடா" இரகத்தில் அமைந்தவை", என்று நண்பர் சொல்வதை மனதில் இருத்திப் பதிய வைத்துக் கொண்டால், அடுத்த முறை, யாரேனும், "மாமாவசதா" என்று ஆரம்பிக்க, "ஆஹா, நமக்குத் தெரிந்த கானடாதானே இது" என்று ஒரு உற்சாகம் பிறக்கும்.

3. ஸ்வரஸ்தானங்கள் மற்றும் 'பிடி'களிலிருந்து: ஒவ்வொரு இராகங்களுக்கும் ஐந்துக்கும் மேற்பட்ட ஸ்வரங்கள் உள்ளன. இதில் சில ஸ்வரங்கள், ஜீவஸ்வரஙள் எனப்படும் ஆதார ஸ்வரங்களாகும். அதே போல, ஒவ்வொரு புகழ் பெற்ற இராகங்களுக்கும், பாரம்பரியமாகப் பாடும் ஒரு 'பிடி' என்றுண்டு. ஒவ்வொரு இராகத்திற்கும் இந்த ஜீவஸ்வரங்கள் என்னென்னவென்றும், சரியான பிடி என்னவென்றும் தெரிந்து வைத்துக் கொண்டால், அந்த ஸ்வரங்களை, குறிப்பிட்ட பிடியில் பாடகர் உச்சரித்த மறு நிமிடமே, அல்லது இசைக் கலைஞர் தனது, இசைக் கருவியில் இசைத்த மறு நிமிடமே, இது இன்ன இராகம் என்றுணர முடியும். உதாரணமாக, "கரி கா ஸா நி ரி கா" என்ற ஸவரங்களில் 'நி" யை அசைத்து கமகத்துடன் பாடத் துவங்க, இது கல்யாணி என்று புரியும். கல்யாணியை இந்த ஸ்வரங்களை வைத்து மாற்றி மாற்றிப் பாடினாலும், ஆரம்பத்தில் "கரி கா ஸா நி ரி கா" என்று குறிப்பிட்டுப் பிடிப்பது அதற்கே உண்டான சிறப்பு (Charecteristics of Kalynani). ஒவ்வொரு இரகத்துக்குமுண்டான இந்த சிறப்புப் பிடிகளை மனதிற் கொள்வதும், இராகங்களைக் கண்டு பிடிக்கும் வழிகளில் ஒன்றாகும். இந்த நுட்பம் சிறிது கடினமேயென்றாலும், அனுபவத்தில் கொள்ள எளிதாகும்.

4. இராக முத்திரைகள் மூலம்: பெரும்பாலான வாக்கேயக்காரர்கள், தங்களது பாடல்களில், அவரவர் முத்திரைகள் வைத்திருப்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம். உதாரணமாக, முத்துஸ்வாமி தீட்சிதர், தனது பாடல்களில், எதேனும் ஒரு இடத்திலாவது, "குருகுஹ" என்ற பதம் வருமாறு பார்த்துக் கொள்வார். பாபநாசம் சிவன் அவர்கள், "இராமதாச" என்ற முத்திரை வத்திருப்பார். இதே போல, பல பாடல்களில், இராகத்தின் பெயர்கூட முத்திரையாக வைக்கப்பட்டிடுருக்கும். பாடலைக் கூர்ந்து கவனித்தால், இந்த இராக முத்திரையினைக் கண்டு பிடித்து, இந்தப் பாடல் இன்ன இராகம் என்று கூறி விடலாம். உதாரணமாக, "மஹா கணபதிம்" என்ற பாடலில் வரும், "மஹா காவ்ய நாடகாதிப்ரியம்" என்ற தொடரில் வரும் "நாட" என்ற பதத்தினைக் கொண்டு, இது "நாட்டை" என்று கண்டு பிடிக்கலாம். இந்த நுட்பமும் அவ்வளவு எளிதல்ல. ஏனென்றால் எல்லாப் பாடல்களிலும், இராக முத்திரை நிச்சயம் இருக்குமென்று சொல்லிவ்ட்ட முடியாது.

5. அனுபவபூர்வமாக: எந்த ஒரு கலைக்கும், குறுக்கு வழி கிடையாது. மேற்கண்ட வழிகள் பல இருந்தாலும், அனுபவபூர்வமாக இராகங்களைக் கண்டுணர்தலுக்கு இணையாக எதுவும் கிடையாது. கேட்கக் கேட்கக் கேள்வி ஞானம் பிறக்கும். கேள்வி ஞானம் பிறக்க, எந்தவொரு முயற்சியுமின்றி, இராகங்களை எளிதில் அடையாளம் கண்டு பிடிக்க முடியும்.

இந்த உரைகளுக்குப் பிறகு, கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர்.சுந்தரும், சூர்யப்ரகாஷும் மாறி மாறி விடையளித்தனர். "ஸ்வரங்களின் பெர்முடேஷன் காம்பினேஷங்களின் அடிப்படையிலே பிறப்பது எண்ணற்ற இராகம் என்றால், எல்லா இராகங்களும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளனவா, அல்லது கண்டு பிடிக்கப்படாத்த இராகங்களும் உள்ளனவா? வேறு வகையில் சொல்ல வேண்டுமென்றால், இராகங்களை உருவாக்குவது (Invention) என்பது முடியுமா? அல்லது கண்டு பிடித்தலே (Discovery)சாத்தியமா?" என்று கேள்வி கேட்டென். ஸ்வர்ங்களைக் கலக்கி ஒரு இராகத்தினை உருவாக்கி அதற்கு நமது பெயரை வைத்து அழைத்தல் சாத்தியமே என்றும், ஆனால், அந்த இராகம் நிலைத்து இருப்பது என்பது, பாடுபவர் மற்றும் கேட்பவரின் மனதைக் கவர்ந்தால் மட்டுமே என்றும் பதிலளிக்கப்பட்டது.

"அடுத்த்படியாக, இராகங்களுக்கு மருத்துவ குணம் உண்டா?" என்ற கேள்விக்கு, சூர்யப் ப்ரகாஷ், உண்டு என்ற தொனியில் பதிலளித்தார். கூட்டத்திலிருந்து ஒருவர் எழுந்து. "தனக்கு ஒரு கச்சேரியில், கரகரப்ரியா இராகம் கேட்டவுடன், ஸ்பாண்டிலிடிஸ் என்ற நோய் குண்மாகிவிட்டது," என்று டுமீல் விட்டார். ஆனால், டாக்டர்.சுந்தர் அவர்கள், இந்தகைய முடிவுகள் எந்த முறையில் ஆராய்ச்சி செய்யப்படுகின்றன என்பது கேள்விக்குறியது" என்றார். சூரியப்ரகாஷ், "பாடுபவர் தான் பாடும் பாடலினால் ஒருவருக்கு நோயினைக் குண்மாக்க முடுகின்றதோ இல்லையோ, இரத்தக் கொதிப்பு எளிதில் வர வைக்க முடியும்", என்று கூற, கூட்டத்தினர் அந்த நகைச்சுவையினை இரசித்தனர்.

*** திரையிசையின் மூலம் இராகங்களைக் கண்டுபிடிப்பது குறித்த எனது முந்தைய பதிவுகள்:

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 01 - கானடா

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 02 - கல்யாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 03 - கீரவாணி

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 04 - மோகனம்

தமிழ்த் திரையிசையில் இராகங்கள் - 05 - மாயாமாளவ கௌளை

- சிமுலேஷன்

Tuesday, December 19, 2006

ரவுசு




ஐ.டிகம்பெனிக்களில், செய்யும் வேலையில் தொய்வு ஏற்பட்டுடுவிடக் கூடாது என்பதற்காக, சில் பல திட்டங்கள் உண்டு. அதிலொன்று, மாத்தில் ஒரு நாள் ஊழியர்களைப் பாரம்பரிய உடையில் வரச் சொல்வது.

இன்ஃபோஸிஸ் நிறுவனத்தில் பணி புரியும் ஒரு புராஜக்ட் மானேஜர் வந்த் கோலம்தான் இது.

குறும்புப் போட்டிக்கு கூட்டுத் தயாரிப்பு

தேன்கூடு+தமிழோவியம் "குறும்பு" போட்டிக்கு, டாபிகலாக ஏதேனும் படைக்க எண்ணம். ஆனால், இது ஒரு கூட்டுத் தயாரிப்பு; படங்கள் உதவி மட்டுமே என்னிடமிருந்து; குறும்பான கமெண்ட் கொடுத்துக் கலக்கப் போவது நீங்கள்தான். எங்கே உங்கள் குறும்புக் கமெண்டுகளை பின்னுட்டமாக இடுங்கள் பார்க்கலாம்.

- சிமுலேஷன்

1.
2.

3.

4.

5.

6.

7.

8.

9.

10.

11.

12.

13.

ரெடி..... ஒன்...ட்டூ...த்ரீ.... ஸ்டார்ட்....

Thursday, December 14, 2006

புகைப்படப் புதிர்-05 - இந்திய இசைக் கருவிகள்

இசை விழா நடக்கும் இந்நாட்களில் இசைக் கருவிகளை வைத்து ஒரு புதிர்.



01. தயிரைக் கடைந்த சர்தார்.

02. எத்தனை முகமெனெ எண்ணினால் போயிற்று.

03. கொத்தமங்கலத்தில் பாணம் விடமுடியுமா?

04. மூஞ்சிக்கும் வீணைக்கும் என்ன முடிச்சு?

05. சூரியகாந்தியில் பீட்டர் விட்ட பாடல்.

06. ஆமாஞ்சாமிகளின் ராஜ்ஜியம்.


07. இதில் சுநாதவினோதினி இராகம் வாசிப்பது சுலபமோ?


08. காஷ்மீர்ப்பெண்ணே. எக்ச்யூஸ் மீ. நீங்க எந்த காலேஜ்?

09. ஒய்.ஜி.எம்மின் மர்மத் தொடர்.




10. ஸ்வரங்களே மண்டலமானால்...

- சிமுலேஷன்


Thursday, December 07, 2006

தமிழிசை - ஒரு மீள் பதிவு

சுமார் பத்துப் பதினைந்து வயதிருக்குமென்று நினைக்கின்றேன். குடும்பத்துடன் பழனி சென்றிருந்தோம். இரவு நேரத்தில் சுவாமி தரிசனம். சுவாமியைப் பள்ளி கொண்டு செல்லும் நிகழ்ச்சி. அப்போது யாரோயொருவர் வந்து என் அப்பாவிடம்,."நீங்களும் கலந்து கொள்ள வருகின்றீர்களா?" என்று கேட்டார். அவரும் சம்மதித்தார். குடும்பத்துடன் அனவரும் சுவாமியின் பின்னே உட்பிரகாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தோம். அப்போது ஒர் ஓதுவார் காம்போதியில் ஒர் விருத்தம் பாடினார் பாருங்கள். 'மடையில் வாழை பாய' என்று நினைக்கிறேன். அந்த இரவில் சுருதி சுத்தமாகவும், மொழி சுத்தமாகவும் காதில் வந்து விழுந்த காம்போதியை இன்னமும் மறக்க முடியவில்லை. அதுவே தமிழிசை பற்றிய எனது முதல் அனுபவம். அதன்பின் எத்தனையோ தமிழ்ப் பாடல்களைக் கேட்டிருக்கின்றேன். ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் கவர்ந்துள்ளன. மனதைக் கவர்ந்த தமிழிசையை பதிவு செய்யும் எண்ணத்திலேதான் இந்தக் கட்டுரை. தமிழிசை என்று நான் சொன்னலும், அது தமிழிசைக் கச்சேரியைப் பற்றியே பெருமளவு இருக்கும். நான் ஒர் இசைவாணன்(musician) அல்ல; ஒர் இசை பற்றிய விபரங்கள் (musicology) அறியும் ஓர் ஆர்வலன் மட்டுமே. அந்தக் கோணத்திலேயே இந்தக் கட்டுரையினை எழுதியுள்ளேன்.

தொல்காப்பியர், சீத்தலைச்சாத்தனார், இளங்கோவடிகள், காரைக்காலம்மையார், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சேக்கிழார், அகத்தியர், திருமூலர் உள்ளிட்ட பதினெண் சித்தர்கள், பட்டினத்தார், ஆண்டாள் உள்ளிட்ட பனிரெண்டு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள், அருணகிரி நாதர், குமரகுருபரர், தாயுமானவர், முத்துதாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசலக் கவிராயர், கவி குஞ்சர பாரதியார், கோபால கிருஷ்ண பாரதியார், மாயூரம் வேத நாயகம் பிள்ளை, அண்ணாமலை ரெட்டியார், இராமலிங்க அடிகளார், சுப்பிரமணிய பாரதியார், பாரதி தாசன், ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகள், இலட்சுமணப் பிள்ளை, பொன்னையா பிள்ளை, பாபனாசம் சிவன், தண்டபாணி தேசிகர், பெரியசாமித் தூரன் போன்ற எண்ணற்ற மாமனிதர்கள் தமிழிசைக்கு தங்கள் பங்கை ஆற்றியிருக்கிறார்கள். இருந்த போதும், வெகு காலத்திற்கு முந்தியவை என்பதாலும், மெட்டுப் போடாத காரணத்தாலும், போட்ட மெட்டைப் பரப்பப் போதிய சீடர்கள் இல்லாத காரணத்தாலும், ஏற்கெனவே சில பாடல்கள் மேடையிலே தமக்கென்று ஒர் இடத்தை பெற்றுவிட்ட காரணத்தாலும், மேலே குறிப்பிட்ட இந்த அருந்தமிழர்களின் பாடல்கள் அனைத்துமே, மேடைக் கச்சேரிகளிலே புகழ் பெறவில்லை.

"தமிழிசை பெரும்பாலும் தமிழ் தெரிந்தவர்களைக் கவர்கிறது; ஏன்?' என்று கேட்டால் விடை எளிது. மொழி புரிகின்றது. பொருள் புரிகின்றது. எனவே பாடலின் பொருளுடன் ஒன்றிப் பாடலை இரசிக்க முடிகின்றது. மொழி புரிகின்றது என்று சொன்னவுடனே, பாடல்களின் வரிகள் எளிமையானவையாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று புரிகின்றது அல்லவா? வரிகள் மட்டும் எளிமையாக இருந்தால் போதுமா? மெட்டும் மனதைக் கவர வேண்டுமல்லவா? இவையனைத்தும் கொண்டு தனது பாடல்களால், தமிழிசையுலகை ஆண்டவர்களில் பெரும்பங்கு வகித்தவர், தமிழ்த் தியாகைய்யர் என்றழைக்கப்பட்ட பாபனாசம் சிவன் அவர்கள்தான். அவரது பல்வேறு பாடல்கள் எல்லொரையும் கவர்ந்தவை. அவரது பெயர் பெற்ற சில பாடல்கள் வருமாறு:-

கருணாநிதியே தாயே - பௌளி
நம்பிக் கெட்டவர் எவரெய்யா - ஹிந்தோளம்
தேவி நீயே துணை - கீரவாணி
என்ன தவம் செய்தனை - காபி
பதுமநாபன் மருகா - நாகஸ்வராவளி
கா வா வா கந்தா வா வா - வராளி
நானொரு விளையாட்டு பொம்மையா - நவரஸகன்னடா
காபாலி, கருணை நிலவு பொழி - மோகனம்
கற்பகமே, கண் பாராய் - மத்யமாவதி

இதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல், மோகனத்தில் அமைந்துள்ள 'காபாலி, கருணை நிலவு பொழி' யாகும். இது வரை கேட்காதவர்கள் இதனைக் கேட்டுப் பார்க்க வேண்டும். சரணத்தில், சந்தத்துடன் மயிலைநாதன் பல்லக்கில் பவனி வரும் காட்சியை கண்முன்னே தத்ரூபமாகக் கொண்டு வந்து நிறுத்துகிறார் பாருங்கள். சொல்லழகிலும், பொருளழகிலும் சிறந்த பாடல் இது என்றால் மிகையாகாது. அடுத்தபடியாக, 'என்ன தவம் செய்தனை' என்ற பாடல். இந்தப் பாடலைக் கேட்ட யாராவது அந்தக் குட்டிக் கண்ணனை மனதில் கொண்டு வந்து நிறுத்திப் பாராமல் இருந்ததுண்டா?

ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் அவர்கள் தமிழ்ப்பாடல்கள் பல இயற்றி மக்கள் மனதைக் கவர்ந்தவர். கானடா இராகத்தில், 'அலை பாயுதே கண்ணா', சிம்மேந்திரமத்யமத்தில், 'அசைந்தாடும் மயிலொன்று காண' மற்றும் மத்யமாவதியில்,' ஆடாது அசங்காது வா கண்ணா' போன்ற பலரும் விரும்பும் பாடல்களை அவர் பாடியுள்ளார். இந்தப் பாடல்களில் எதனைக் கச்சேரியில் பாடினாலும், இரசிகர்கள் உற்சாகத்துடன் எழுந்து கேட்பது நிச்சயம்.

அடுத்தபடியாக மேடைக் கச்சேரிகளிலே புகழ் பெற்று மக்கள் மனதைக் கவர்ந்த பாடல்களென்றால் அவை பெரியசாமித்தூரன் அவர்களது பாடல்களாகும். ஸாவேரியில் 'முருகா, முருகா', ப்ருந்தாவன ஸாரங்காவில், 'கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்' ஆகிய பாடல்கள் புகழ் பெற்றவையாகும். கேட்கக் கேட்கத் திகட்டாதவையாகும். பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான, சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தின் உடனுறை தேவியாம் திரிபுரசுந்தரி மேல் பாடப்பெற்ற, சுத்தஸாவேரியில் அமைந்த, 'தாயே திரிபுர சுந்தரி', பெரியசாமித்தூரன் அவர்களின் ஒரு அழகான பாடலாகும். இந்தப் பாடலை இந்த ஆலயத்திலேயே, யாரேனும் பாடக் கேட்பது என்பது ஒரு தனி மகிழ்ச்சியாகும்.

இராஜாஜியின் 'குறை ஒன்றுமில்லை; மறை மூர்த்தி கண்ணா', தற்காலத்தில் அனைவரும் விரும்பும் ஒரு பாடலாகும். ஆண்டவனை வேண்டும்போது, எதுவும் கேட்கத் தேவையில்லை; குறையொன்றுமில்லை என்று மனமுருக வேண்டினால் மட்டும் போதும் என்ற கருத்தே இங்கு அனவரையும் பெரிதும் கவர்கின்றது.

சேதுமாதவராவ் என்பார் 'சாந்தி நிலவ வேண்டும்" என்ற பாடலை இயற்றி, டி.கே.பட்டம்மாள் அவர்களை பாடுமாறு வேண்டிய போது, அவர்கள்தம் குரலிலே வந்த இந்தப் பாடலின் வெற்றிக்குக் காரணம் என்னெவென்று யாரேனும் யோசித்ததுண்டா? வார்த்தைகளின் எளிமையும், மெட்டின் கவர்ச்சியும், திலங் இராகத்தின் இனிமையும் சேர்ந்த ஒர் அருமையான சேர்க்கையே, வெற்றிக்குக் காரணம் என்று தோன்றுகின்றது.

நீங்கள் நினைக்கலாம். ஏன் புகழ் பெற்ற கவிஞர்களது பாடல்கள், இசைக் கச்சேரிகளிலே பிரபலம் அடையவில்லையென்று. ஏனென்றால் அவர்கள் கவிஞர்கள்; அவர்கள் எழுதியவை கவிதைகள் மட்டுமே. கவிதைகளுக்கும், பாடல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். கவிதைகளிலேயே எத்தனையோ வகைகள் உண்டு. பொருளை இரசிப்பதற்காக சில; உணர்ச்சியைத் தூண்ட சில; சந்தத்தை இரசிப்பதற்காக சில. எனவேதான், பாடலாக்கும் எண்ணத்தில் இயற்றப்படாத எந்தக் கவிதையையும் எளிதில் பாடலாக்க முடிவதில்லை.
பாடல்களில் பிரபலமானவை என்று எடுத்துக் கொண்டால் அவை பெரும்பாலும் வாக்கியேயக்காரக்கள் எனப்படும் 'பாடலும் எழுதி, அதனைப் பாடவும் தெரிந்த' பாடகர்கள் எழுதிய பாடல்கள்தான். ஏனென்றால் அவர்களுக்கு அந்தப் பாடலை எப்படிப் பாடினால் நன்றாக இருக்கும் என்றறிந்து அதற்குத் தக்கவாறு மெட்டமைத்திருப்பார்கள். ஆனால் கவிஞர்களுக்கோ அல்லது புலவர்களுக்கோ, இசை குறித்த அறிவு இல்லாமலிருந்திருப்பின், அதனைப் பாடல் எனப்படும் ஸாஹித்யமாக மாற்றத் தெரிந்திருக்காது. மற்றபடி இசை தெரிந்தவர்கள் அதற்கு மெட்டுப் போட்டுப் பிரபலப்படுத்துவது என்பது முடியும். ஆனால் கடின உழைப்பின் மூலம் நல்லதோர் மெட்டுப் போட்டு, புகழ் வாய்ந்த பிரபலம் மூலம் மக்களிடம் எடுத்துச் செல்வதன் மூலமே இது சாத்தியமாகக் கூடும். அவ்வாறு செய்யாமல், ஏன் இந்தக் கவிஞரது பாடலை (கவிதையை!) கச்சேரிகளில் பாடுவதில்லை என்று கேள்வி கேட்டுக் கொண்டேயிருப்பதால் பலன் ஏதும் கிட்டாது.

அரியக்குடி இராமானுஜையங்கார் அவர்களே, கச்சசேரி பத்ததி என்ற ஒன்றினை உருவாக்கியவர் என்பது சங்கீத விபரங்கள் தெரிந்த அனவரும் அறிந்தவொன்றே. பலரும் தனிப்பாடல்கள் போல பாடி வந்த காலத்தில், அவரே, முதலில் வர்ணம், பிறகு கிருதிகள், இறுதியில் தில்லானா போன்ற ஒர் ஒழுங்குடன் பாடினால் கேட்பவருக்கு இனிமையாக இருக்கும் என்று கண்டுபிடித்து கச்சேரி பத்ததி என்ற ஒன்றினை உருவாக்கியவர். எனவே, தமிழில் பாடினாலும், இந்த வரிசையில் பாடினால் மட்டுமே நன்றாக இருக்கும். இது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். கேட்க வருபர்களுக்கு 'வெரைட்டி' என்று சொல்லப்படும், ஒர் கலவை தேவை. இதனைச் சரியாகப் புரிந்து கொண்டு, சரியான கலவை கொடுப்பவர்களே வெற்றி பெருகிறார்கள். அது தமிழிசையாக இருந்தாலும் சரி; அல்லது வேறு எந்த இசையாக இருந்தாலும் சரி.

சரி. இறுதியாகத் தமிழிசை வளர வேண்டுமென்றால் செய்ய வேண்டியது என்னெவெண்று பார்க்கலாம்.

இசை நிகழ்ச்சி கேட்பவர்கள் செய்ய வேண்டியது

இசை (music) என்பது ஒர் கலை (art); கர்னாடக இசை மேடைக் கச்சேரி (concert) என்பது ஒர் நுண்கலை (fine-art). முதலாவதை எல்லோராலும் இரசிக்க முடியும். இரண்டாவதனை ஒரளவு விவரம் தெரிந்தவர்கள் மட்டுமே இரசிக்க முடியும். இசைக் கச்சேரிகளில் ஆலாபனை, ஸ்வரப்ரயோகங்கள், நிரவல் என்று பல்வேறு அம்சங்கள் உள்ளன். இவற்றையெல்லாம் இரசிக்க வேண்டுமென்றால், இரசிகர்கள் முதலில் தங்களது கேள்வி ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இசையார்வமுள்ள எவருக்கும் இது முடியும். ஒவ்வொரு முறை கச்சேரிக்குப் போகும் போதும், அன்னியப்பட்டுப் போகாமல் புதியதாக ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டு வர வேண்டும்.

தமிழிசையை கேட்பதற்கு முன்பாக, எந்த மொழிப்பாடலாக இருந்தாலும், இரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கேள்வி ஞானம் எனப்படும் இரசனை அப்போதுதான் வளரும். தமிழில் பாடினாலும், 'எது ஸுஸ்வரமாக ஒலிக்கிறது' என்றும் 'எது அபஸ்வரமாக ஒலிக்கிறது' என்றும் காது கண்டு பிடிக்க, இந்தக் கேள்வி ஞானம் மிகவும் அவசியமாகும். தமிழிசையை இரசிக்க, தமிழின்பால் இருக்கும் பற்றினைவிட, இசையின்பால் இருக்கும் பற்று சற்றே அதிகமாக இருக்க வேண்டும்.

கேட்ட இசையினை, ஒத்த இரசனையுடைய நண்பர்களுடன் விவாதித்து குறிப்பிட்ட பாடலின் அழகை இரசிக்க வேண்டும். மேலும் பத்திரிகைகளிலும் வரும் சங்கீத விமர்சனங்களயும் படிக்க வேண்டும்.

தமிழிசை என்றாலும் தனக்கு எது தேவை என்று தெரிந்து அந்த சபை (forum) சென்று இரசிக்க வேண்டும். உதாரணமாக, திருப்புகழ் சபைதனிலே சென்று, கீர்த்தனைகள் தேடக் கூடாது. தேவாரம் ஓதப்படும் இடத்தில், பாசுரங்களை எதிர்பார்க்கக் கூடாது. பாடகர் அவர் கற்று வந்து கொடுக்கும் இசைக் கச்சேரிகளிலே, "ஏன் இந்தக் கவிஞரது பாடல் பாடப்படவில்லை?' என்று விவாதம் செய்யாமல், அவர்தம் இசையினை அலசக் கற்றுக் கொள்ள வேண்டும்.

பாடுபவர்கள் கவனிக்க வேண்டியது:

பாட்டு கற்றுக் கொள்ளும்போதே, ஆசிரியரிடம், தமிழ்ப் பாடல்களை விரும்பிக் கற்க வேண்டும். இல்லயெனில், ஒலி நாடாக்கள் துணை கொண்டு கற்றுக் கொள்ள வேண்டும். யாரும் வற்புறுத்தாமல் தானே வலிய வந்து, தமிழ்ப்பாடல்கள் பாட வேண்டும். இவ்வாறு பாடும்போது, தமிழ்நாட்டின் இரசிகர்களுக்கும் தங்களுக்குமுள்ள இடைவெளி பெரிதும் குறைந்து வரும் என்பதனை உணர வேண்டும். ஏற்கெனெவே கூறியபடி அனவரையும் கவரும்படியான மெட்டில், சொல்லழகும், பொருளழகும் கொண்ட எளிமையான பாடல்களைத் தேர்வு செய்து பாட வேண்டும். புதிதாக ஒரு புகழ் பெற்ற கவிஞரின் ஒரு பாடலுக்கு மெட்டுப் போட்டு அரங்கேற்றும் எண்ணம் இருந்தால், மெனக்கெட்டு உழைத்து அதனை வெற்றிப் பாடலாக்கும் முயற்சியில் இறங்கிய பின்னரே, அதனை மேடையேற்ற வேண்டும். அதனை விடுத்து அரை குறை முயற்சியுடன் இறங்கினால், அது அந்த புகழ் பெற்ற கவிஞரை அவமதிப்பது போலாகும்.
மொழி தெரிந்த தமிழ் இரசிகர்கள் முன்பு, தமிழிலே பாட இருப்பதனால், ஒரு முறைக்கு இரண்டு முறை, அட்சரங்களை சரி பார்த்து, சொல், பொருள் ஏதும் மாறிவிடாமல் பாட வேண்டும்.

நிகழ்ச்சி அமைப்பாளர்கள் செய்ய வேண்டியது:

நிகழ்ச்சி அமைப்பளர்களுக்கு தமிழ் பொழிப் பற்றிருந்தால் மட்டும் போதாது. இசையின்பால் உண்மையான ஆர்வமும், ஓரளவு இசையறிவும் தேவை. இசையறிவு இல்லாமல், ஆர்வம் மட்டும் இருக்கும் பட்சத்தில், இசை ஞானம் கொண்ட நண்பர்களைச் சேர்த்து கொள்ளலாம்.
பாடகர்களிடம், நிகழ்ச்சியில் குறைந்த பட்சம் இத்தனை தமிழ்ப்பாடல்கள் பாட வேண்டும் என்ற கோரிக்கை வைக்க, இவர்களே சரியான உந்து சக்தி. இவர்கள் கோரிக்கை வைக்கும் பட்சத்தில், பாடகர்கள் கண்டிப்பாக, தமிழ்ப்பாடல்கள் பாட முயற்சி செய்வார்கள். அப்போது, புதியதாய் தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைக்கும் முயற்சியும், அதன் தாக்கத்தால் இசைக் கச்சேரிகளிலே, தமிழ்ப் பாடல்களின் எண்ணிக்கை பெருகும் நிகழ்தகவும் (probability) அதிகமாகக் கூடும்.


பள்ளிகளிலே இசை ஒரு கட்டாயப் பாடமாக இல்லாத காரணத்தினால், தமிழிசைப் போட்டிகள் அடிக்கடி நடத்த வேண்டும். போட்டியில் வெற்றியாளருக்கு கொடுக்கப்படும் பரிசுகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலே அமைய வேண்டும். மாவட்ட அளவினிலே கூடப் போட்டிகள் நடத்தலாம். இதில் பங்கு பெறுவது என்பதனை மாணாக்கர்கள் ஒரு கௌரவமாகக் கருதும்படி, அதற்கான உயர்வு நிகழ்சிகளில் (promotion programs) ஈடுபட, வர்த்தக நிறுவனங்களின் துணையை நாட வேண்டும். இப்படியெல்லாம் முழுமுனைப்புடன் ஈடுபட்டால், வருங்காலத் தலைமுறையினர், தமிழில் பாடுவதனைப் பெருமையாகக் கருதுவர்.

- சிமுலேஷன்