Saturday, August 20, 2005

ஸ்ரீராம நவமிக் கச்சேரி

"ஸார், ஆதித்யா ரொம்ப நன்னா பாடறான். அவனை இந்தவச சக்கரை அம்மன் கோயி¢லே, ஸ்ரீராம நவமிக் கச்சேரியிலே பாட கேட்டிருக்கா. சரின்னு சொல்லிட்டேன்." என்றார் பாட்டு வாத்யார்.

ஸ்ரீராம நவமிக் கச்சேரி என்று காதில் விழுந்தவுடன், நினைவு முப்பது, முப்பத்தைந்து வருடங்களுக்கு முன்பு ஓடத் தொடங்கியது. அப்பா ஒரு பன்முகத்திறன் கொண்டவர். தமிழ்ச் சங்கம், இஸ்கஸ், ரோட்டரி கிளப் என்று எல்லா ஸோஷியல் நடவடிக்கைகளிலும் ஈடுபாடு கொண்டவர். இருந்தபோதும் அவர் அதிக ஈடுபாடு கொண்டது ஸ்ரீராம நவமிக் கமிட்டியில்தான். அவர்தான் உப தலைவர். எழுபதுகளில் மேட்டுப்பாளையத்தில் ஸ்ரீராம நவமிக் கச்சேரிகளை அப்பாவும், வரதராஜ ஐயங்காரும்தான் (தலைவர்) சேர்ந்து ஆரம்பித்தனர் . முட்டைக் கோஸ்
கிலோ மூணு ரூபா, உருளைக் கிழங்கு கிலோ நாலு ரூபா, சஙகீதம் கிலோ என்ன விலை என்று கேட்கும் நகரில் இப்படி ஒரு முயற்சி எடுத்தது ஒரு துணிச்சலான விஷயம்தான்.

குருட்டு முனையில் பெருமாள் கோயில் கொண்ட அந்த அக்ரஹாரத்தில் ரோட்டை மறித்து போடப்படும் மேடையில் கச்சேரிகள் நடக்கும். இரசிகர்கள் உட்கார, மேடை முன்பாக ஜமக்காளம் விரித்திருக்கும். ஆண்கள் யாராக இருந்தாலும் அந்த ஜமக்காளத்தில்தான் உட்கார வேண்டும். அது யு.பி.எல் ஜி.எம்மாக இருந்தாலும் சரி. டேன் இண்டியா டைரக்டராக இருந்தாலும் சரி. சிறிய ஊர் என்றாலும், இரசிகர்கள் குறைவு என்றாலும் பாட வருபவர்கள் சாதாரண ஆட்கள் இல்லை. பி.வி.ராமன், பி.வி.லஷ்மண் சகோதரர்கள், மகாராஜபுரம், வோலேடி, னேதுனூரி, மதுரை சோமு, லால்குடி, உமையாள்புரம், வேலூர் ராமபத்ரன் போன்ற பெரும் புள்ளிகள்தான் வந்து பாடுவார்கள்/வாசிப்பார்கள். ஊட்டி, மைசூர் செல்ல இருக்கும்
வித்வான்களும் இடெனரரியை மாற்றி இவ்வழியே செல்வது வழக்கம்.

அப்பா, வித்வான்களை சாயங்காலமே வீட்டிற்கு அழைத்து வருவார். இட்லி, கேசரி, காபி மற்றும் அரட்டை முடிந்த பின் எட்டு மணி வாக்கில் கச்சேரிக்குச் செல்வார்கள். மற்ற ஊர்களில் தெரியவில்லை. மேட்டுமாநகரிலே நடைபெறும் இந்த இரவு நேர ஸ்ரீராம நவமிக் கச்சேரிகள்,
சாவகாசமாக சுமார் 9 மணியளவில் ஆரம்பித்து 12 அல்லது மறுநாள் காலை 1 மணி வாக்கில் முடியும்.

அப்பா வித்வான்களோடு கிளம்பிய பின், நாங்கள் அம்மாவுடன் கச்சேரிக்குக் கிளம்புவோம். நாங்கள் என்றால், நானும் எனது சகோதரிகள் மூவரும். அவர்கள் ஒரே சந்தோஷத்துடன் கிளம்புவார்கள். வெகு நாட்கள் கழித்துச் சந்த்திக்க இருக்கும் தோழிகளை எண்ணி. ஆனால் எனக்கு யாரும் நண்பர்கள் கிடையாது அங்கே. எனவே வேறு வழியில்லாமல், களத்திற்கு கூட்டிச்
செல்லப்படும் பலி ஆடு போ அழைத்துச் செல்லப்படுவேன். கச்சேரியின் இறுதியில் அப்பா கொடுக்கும் வோட் ஆப் தாங்க்ஸ் விஷேஷமானது. அது வெறும் நன்றியுரை மட்டுமல்லாது, ஒரு பாராட்டு விமர்சன உரையாகவும் இருக்கும். அதனைக் கேட்கவே பெரும்பாலான வித்வான்கள் இங்கு வந்து பாடுவதாக அப்பாவின் நண்பர் முத்துக் கிருஷ்ணன் கூறுவது உண்டு. மேடையின்
முன்பாக உள்ள ஜமக்காளத்தில் முதல் வரிசையில் அப்பா உட்காருவார். அம்மா மற்றும்
சகோதரிகள் மேடையின் இடது பக்கம் இருக்கும், துரை மாமா வீட்டுத் திண்ணையில் உட்கார்ந்திருப்பார்கள். நான் அங்கே போக முடியாது. பெண்டுகள் கூட்டம். எனவே அப்பா பக்கத்தில் போய் உட்காருவேன்.

பாடகர் யாராக இருந்தாலும், வாதாபி கணபதிம் பஜே என்று ஆரம்பித்தவுடன் வந்து விடும் எனக்கு முதல் கொட்டாவி. அடுத்த கொட்டாவி வரும் முன்னே, என்னை நானே டைவர்ட் பண்ணிக் கொள்ள எண்ணி, திண்ணையத் திரும்பிப் பார்ப்பேன். அவர்கள் என்னைக் கேலி செய்து ஏதோ ஒரு ஜோக் சொல்லிக் கொண்டு சிரித்துக் கொண்டிருப்பார்கள். முதல் பாட்டின் அனுபல்லவி வரை கூடத் தாங்காது எனக்கு. அப்பேர்ப்பட்ட ஔரங்கசீப், ஐயாவாள். வலது பக்கத் திண்ணையில் ஒரு புரம் சுவாமி படங்களும் விக்கிரகங்களும். மற்றொரு பக்கம் உள்ள காலித் திண்ணையில் எனக்காகவே ஜமக்காளங்கள் குமிக்கப்பட்டு, "வா, வா, வந்து தாச்சுக்கோ" என்று
கெஞ்சியபடி இருக்கும்.

ஜமக்காளங்கள் நடுவே போய் ஒரு அற்புதமான தூக்கம். நல்ல வேளை; குறட்டை ஒன்றும் பலமாக இருக்காது. சுமார் ஒரு மூணு மணி நேரம் கழித்து பாடகர், "பவமான" என்று மங்களம் பாடும்போது, தங்கையால் நான் எழுப்பப்படுவேன். "பாவமான" என்று என்னைப் பற்றித்தான் பாடுகிறாரோ என எண்ணிக் கொள்வேன். மங்களம் பாடிக் கொண்டிருக்கும்போதே, க்ருஷ்ணமூர்த்தி ஸாஸ்திரிகள், மணியடித்து கர்ப்பூர ஆரத்தி எடுத்துக் கொண்டிருப்பார். நானாவித சப்தங்களும் ஒலித்துக் கொண்டிருக்கும் அந்த அர்த்த ராத்திரியில், எங்கே இருக்கிறோம்
என்று கூடத் தெரியமல், கடுப்போ கடுப்புடன் எழுந்திருக்க வேண்டியிருக்கும்.

சொல்ல மறந்து விட்டேனே. எங்கள் வீட்டிற்கும் கச்சேரி நடக்கும் அக்ரஹாரத்திற்கும், உள்ள தூரம் எவ்வளவு என்று. சுமார் ஒண்ணரை அல்லது இரண்டு கிலோ மீட்டர் தூரம் உள்ள வீட்டிற்கு இரவு ஒரு மணி வாக்கில் நடந்து போவது என்பது எப்படி இருக்கும். ஏற்கெனவே இந்தக் கச்சேரி தண்டனை போதாதா? இப்போது நடக்க வேறு சொல்கிறார்களே. இவர்களை எப்படிப் பழி வாங்கலாம்?. நமக்குத் தெரிந்த ஒரே ஆயுதத்தை எடுத்து விட வேண்டியதுதான். நண்பர்கள் முன்னால், அப்பா, அம்மா மானத்தை வாங்கி விடலாமென்று எண்ணி, ஓவென்று அழ ஆரம்பித்து, சீன் காட்டிப் பார்ப்பேன்.

ஏதோ ஒரு உலகத்தில் இருக்கும் அவர்கள் அசர மாட்டார்கள். அவர்கள் பாட்டுக்கு, அன்றைக்கு பாடப்பட்ட பாபனாசம் சிவனின் காபாலியை விமர்சனம் செய்து கொண்டு நடந்து கொண்டேயிருப்பார்கள். மோகன ஆலாபனை என்னம்மா இருந்தது என்று புளகாங்கிததுடன் கூறுவார்கள். அருமைச் செல்வனின் முகாரி எப்படி உள்ளது என்று யாரும் கண்டு கொள்ளக் கூட மாட்டார்கள். நம் விதி இதுதான் என்று மனதிற்குள் புலம்பியபடியே வீடு வந்து சேர்வேன். நான் எப்போது பெரியவனாவேன். இந்தத் தொல்லைகள் எல்லாம் இல்லாமல், பாபுவின்
மாமா போல எப்போது தனியாகவே வீட்டில் தூங்குவேன் என்று எண்ணியபடியே
இருப்பேன்.

அனிருத் ஓடி வந்து, "அப்பா, பாட ஆரம்பிக்கலாமா" ன்னு ஆதித்யா கேக்கறான்.

ஒஎஸ். காமெராவுக்கு பேட்டரி மாத்திட்டு வந்துடறேன். ஆரம்பிக்கச் சொல்லு.

வாதாபி கணபதிம் பஜே என்று ஹம்ஸத்வனியில் ஆரம்பிக்கிறான். கூட்டத்தினர் தலையை ஆட்டி இரசிக்கின்றனர். ஆ.. அந்த மூலையிலே உட்கார்ந்திருக்கும் நீலச் சட்டை கொட்டாவி விடுகின்றானே. ஆஹா. அனுபல்லவி ஆரம்பிப்பதற்குள் கண்ணை மூடி சாமியாட ஆரம்பித்து விட்டானே. கொஞ்சம் இருங்கோ ஸார். அந்தப் பையனை எழுப்பிட்டு வந்துடரேன்.

2 comments:

dondu(#11168674346665545885) said...

இது கதையா அல்லது சொந்த அனுபவமா? எதுவாயினும் நன்றாக உள்ளது. உங்கள் பதிவைப் படிக்கும் போது சமீபத்தில் ஐம்பதுகளில் திருவல்லிக்கேணி பாண்டுரங்க மடத்தில் நடைபெற்ற ராம நவமிக் கச்சேரிகள் ஞாபகத்துக்கு வருகின்றன. எங்கள் வீடு மடத்திலிருந்து இரண்டு வீடுகளே தள்ளியிருந்ததால், மாடி வராந்தாவி;ல் அமர்ந்தபடி ஆனந்தமாகக் கேட்போம். மதுரை மணி ஐயர் அவர்கள் கச்சேரியில் கும்பல் சொல்லி மாளாது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Venkatasubramanian said...

Dear Friend
I am also from Mettupalayam. I have also attended the said Rama navami Katcheris.

I know Varadaraja Aiyangar, though I was a small boy then.

Please tell me more about you. My email id is apexpreci2000@yahoo.co.in
I presently live in Coimbatore.