Monday, August 22, 2005

அஸ்ஸாம் அனுபவங்கள்

இந்தியாவின் வடகிழக்கிலுள்ள ஏழு சகோதரிகளில் மூத்தவள்தான் அஸ்ஸாம்.
கௌஹாத்தியிலிருந்து கோலாகாட் செல்லும் வழியில் நுமாலிகார் எண்ணை
சுத்திகரிப்பு ஆலை உள்ளது. அனைத்து அஸ்ஸாம் மாண்வர்கள் சங்கமும் (AASU),
ராஜீவ் காந்தியும் செய்து கொண்ட ஒப்பந்ததின் அடிப்படையில் உருவானதால்
"ஒப்பந்த ஆலை" (Accord Refinery) என்ற பெயருமுண்டு இதற்கு. பார்
புகழும் பாரத் பெட்ரோலியம் கார்ப்போரேஷனின் கூட்டு முயற்சிதான் இந்த
நிறுவனம். இங்குதான் எங்களுக்கு ப்ரோஜெக்ட்.

ஹரியும் நானும் சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு 'ஜெட்'டில் பயணித்து,
பின்னர் அங்கிருந்து "இண்டியன் ஏர்" பிடித்து, கௌஹாத்திக்கு பயணித்து,
கோலாகாட்டிற்கு காரில் சென்றோம். கோலாகாட், கௌஹாத்தியிலிருந்து
12 மணி நேரம். எனவே அங்கு போய்ச் சேர காலை மணி ஆறு ஆகி விட்டது.
இப்பொது நுமாலிகார் செல்ல, மீண்டும் வந்த வழியே 2 மணி பயணிக்க
வேண்டும். அகால வேளை பாதுகாப்பு கருதி இந்த ஏற்பாடு.

இப்போது எங்கள் பயணம் டாக்சி மூலம். டிரைவர் பெயர் எதேனும் ஒரு "பரூவா"
வாகவோ, அல்லது "போரா" வாகவோகத்தான் இருக்க வேண்டும், என்றெண்ணிப்
பெயர் கேட்டேன். நான் நினைத்தது சரிதான். அவர் பெயர் பரூவாதான். இது
இரண்டு மணி நேரப் பயணம் என்றாலும், இந்த டாக்சியில் சொல்லத்தக்க
அம்சங்கள் பல இருந்தன. பின் சீட்டில் இருவரும் உட்கார்ந்தோம். என்னுடைய முன்
சீட்டில், அதாவது டிரைவர் சீட்டின் மறுபுறம் ஆதாரம் ஏதுவுமில்லாமல்
தொங்கிக் கொண்டிருந்த சீட்டின் அடியில், ஆறு செங்கற்கள் அடுக்கப்பட்டிருந்தன.
அந்தச் செங்கற்கள் ஏதேனும் காலில் விழுந்து விடுமோ என்றெண்ணிப் பயந்து
கொண்டிருக்கும் போது. சடேறென்று ப்ரேக் அடித்தார், டிரைவர். ப்ரேக்
அடித்தவுடன், ஏர் பேக் (air bag) போல உடனே, முன் சீட்டின் பின்
புறத்திலிருந்து நான்கைந்து ஸ்பிரிங்குகள், தேங்காய் நார் சகிதம் வந்து
எட்டிப் பார்த்து, ஹலோ என்றன. ஸ்பிரிங்குகளைக் கையால் பிடித்துக் கொண்டே
பயணத்தைத் தொடர்த்தோம்.

சிறிது நேரத்தில் மழை தூரத் தொடங்கியது. வைப்பர் என்று சொல்லப்படும்
உதிரிப் பாகம் வேலை செய்ய மறுத்ததால், இந்தப் பரூவா, இடது கையால்
ஸ்டீயரிங்கைப் பிடித்துக் கொண்டே, வண்டியை லாவகமாக ஓட்டிக் கொண்டு,
வலது கையால் ஒரு துணியை எடுத்து, கையை காரின் வெளியே விட்டு,
கண்ணாடியைத் துடைத்துத் தன் திறமைதனை வெளிப்படுத்தினார். இன்னம் சிறிது
நேரத்தில், காரின் குறுக்கே ஒர் ஆட்டு மந்தை குறுக்கிட்டது. டிரைவர்
இப்போது ஹார்ன் அடிக்கப் போகின்றார் என்று எதிர் பார்த்தோம். ஆனால்
மாறாக, அவர் டேஷ் போர்டிலிருந்து ஒரு பச்சை நிற வயரையும், வலது
புறமிருந்து ஒரு மஞ்சள் நிற வயரையும் இழுத்தார். இரண்டு முனைகளையும்
இணைத்துப் பிடித்தார். ஒரு சிறு தீப்பொறியுடன் ஹார்ன் சப்தம் அழகாகக்
கேட்க, ஆட்டு மந்தை வழி விட்டது. அந்தக் கற்காலக் காரை எண்ணிப்
புலம்பிக் கொண்டிருக்காமல், ஒரே ட்ரிப்பில் 350 ரூபாய் கறந்த பரூவா
சாகிப்பின் விடா முயற்சியையும், நம்பிக்கையையும் எண்ணி வியக்காமலிருக்க
முடியவில்லை.

நுமாலிகார் ஆலை அமைந்துள்ள இடம் ஓர் அற்புதமான ஆக்சிஜன் ஆலைக்கு நடுவே.
ஆம், தூய்மையான, சில்லென்ற காற்று சுற்றிலுமிருந்த பச்சைப் பசேலென்ற
தேயிலைத் தோட்டங்களிலிருந்து வந்து கொண்டிருந்தது. டவுன்ஷிப் இருப்பது
ஆலையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி, ஒரு குன்றின் மேலே. குன்றின்
மேலமைக்கப்பட்ட இந்த டவுன்ஷிப் அமைத்த கட்டுமானக் கம்பெனி, இந்தப்
ப்ரொஜெக்ட்டிற்காக தேசிய விருது வாங்கியுள்ளது என்று கேட்ட போது
ஆச்சரியம் ஏற்படவில்லை. அவ்வளவு அழகு. இந்த முதல் விஜயத்தில் எங்கள்
வேலை மூன்றே நாட்களில் முடிந்து விட, தற்காலிமாக "டாட்டா, பை பை"
சொல்லி விட்டுத் திரும்பி வந்தோம்.

கிட்டத்தட்ட பத்து மாதங்கள் கழிந்தபின், எடுத்துக் கொண்ட ப்ரொஜெக்ட்டை
முடிக்க இம்முறை மீண்டும் வந்தோம் அஸ்ஸாமுக்கு. இம்முறை
கொல்கத்தாவிலிருந்து, ஜோர்ஹாட்டிற்க்கு விமானம் மூலம் வந்து, பின் ஒரு
மணி நேரம் பயணித்து நுமாலிகார் அடைந்தோம். இப்பொது விருந்தினர்
விடுதியும் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. இந்தியாவிலேயெ முதன் முறையாக ஒர்
பட்டாம்பூச்சிப் பூங்காவும் அமைக்கப் பெற்றிருந்தது என்றும் கேள்விப்பட்டோம்.

விருந்தினர் விடுதி நன்றாகவே இருந்தது. கான்டீனில் சாப்பிட்டு விட்டு,
காலையில் வேலைக்குச் செல்வோம். திரும்புவதற்கு இரவு மணி ஒன்பது
ஆகிவிடும். நாங்கள் வந்த மறு நாள், விடுதி திரும்பிய போது, அறையின்
கதவில் அறிவிப்பு ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.

அந்த நோட்டீஸ் டவுன்ஷிப் மேனெஜரால் கையெழுத்திடப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது.
அதிலிருந்த வாசகம் வருமாறு.

"நேற்றிரவு காட்டு யானை ஒன்று டவுன்ஷிப்பிற்குள் வந்து விட்டதாக
நம்பப்படுகிறது. அந்தக் காட்டு யானையைப் பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு
வருகின்றன. அதுவரை, டவுன்ஷிப் வாசிகள் அனைவரும் கவனத்துடன் இருக்கும்படி
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."

இந்த அறிவிப்பைப் படித்தவுடன் ஒரே த்ரில்லாக இருந்தது. ஊருக்கும் போன்
போட்டுச்
சொன்னதுதான் விவகாரமாகிப் போய்¦விட்டது. உடனே கிளம்பி வந்து
விடும்படி இடை விடாத வேண்டுகோளும், பத்திரமாகத் திரும்பவேண்டி,
பக்கத்துத் தெரு பிள்ளையாருக்கு அபிஷேக ஏற்பாடுகளும் நடந்தன. இரண்டு
நாட்களில் யானை பிடிபட்ட்டதாகக் கூறிய பின்புதான், வீட்டில் அமைதி
ஏற்பட்டது. அஸ்ஸாம் நண்பரொருவர், "இதற்கே இவ்வளவு அலட்டிக்
கொள்கிறாயே!. மூன்று மாதம் முன்பு, புலி ஒன்று பிடிபட்டது. காட்டிலாகா
அதிகாரிகள் வந்து மீண்டும் அதனைக் கொண்டுக்
காட்டில் கொண்டு போய் விடும் வரை, குன்றின் உச்சியில் ஒர் கூண்டில்தான்
வைத்திருந்தார்கள்.

நாங்கள் அனைவரும் போய் போய்ப் பார்த்துவிட்டு வந்தோம்", என்றார். ஓரிரு
நாட்கள் கழித்துக் காரில் ஆலைக்குச் சென்று கொண்டிருந்தோம். டிரைவர் காரை
நிறுத்தி விட்டார் திடீரென்று. என்னெவென்று கேட்டதற்கு, "அங்கே பாருங்கள்.
யானைக் கூட்டமொன்று, சாலையைக் கடக்கின்றது" என்றார். யானைக் கூட்டம்
சென்ற பின் எங்கள் சவாரியைத் தொடர்ந்தோம்.

நான் முன்னமே கூறியபடி இந்த ஆலை இருப்பது, நாகரீகமே இல்லாத ஒரு
வனப்பகுதி. எனவெ, ஒவ்வொரு முறையும் இ-மெயில் பார்க்க வேண்டுமென்றால்
ஒரு மணி நேரம் பயணம் செய்து கோலாகாட் செல்ல வெண்டும். பெரும்பாலான
நாட்கள் ப்ரௌசிங் சென்டர் உரிமையாளர், "இன்டெர்நெட் நஹி ஹை; சர்வர்
டவுன் ஹை" என்று சிரித்தபடியெ கூறுவார். கடுப்போ கடுப்புடன் திரும்ப
வேண்டியிருக்கும். இன்டெர்நெட்தான் வேலை செய்யவில்லை என்றால், டெலிபோன்
நெட்வொர்க்கும் படுத்தோ படுத்தியெடுக்கும் சூழல் அது. இது போதாதென்று,
ஆசு, உல்பா, போடோ, போன்றோர் விடுக்கும் பந்த் வேறு இருக்கும். இந்த
பந்துக்கள், சாதாரணமாக, 12, 24, 36, 48 என்று 12ஆம்
வாய்ப்பாட்டையே, ஒட்டி அமையும். 12 மணி நேர பந்த் என்றால் நாம்
அதிர்ஷ்டசாலிகள். பந்தின்போது, நம்ம ஊர் போல அலம்பல் பண்ணிக்
கொண்டிருந்தால், தோட்டாவினால் உயிர் போகும் வாய்ப்ப்புகள் அதிகம்.

அஸ்ஸாமில், இவர்கள் பேசும் ஆசாமியைத் தவிர, ஹிந்தி மற்றும் பீகாரி
பேசும் மக்கள் அதிகம். டவுன்ஷிப் தவிர, மற்ற இடங்களில் வசிப்பவர்கள்
பெரும்பாலோனோர் ஏழைகளாகவே இருக்கிறார்கள். ஆனால், ஏழையோ,
பணக்காரனோ, எல்லோரும் எதேனுமொரு கலையில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
வாய்ப்பாட்டு, வாத்யம், கைவேலை என்று ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதுபோக்கு
உள்ளது.

ஒரு வாரக் கடைசியில், ஆலையின் டிரெயினிங் ஆபீசர், எங்களை, அவளுடைய
உறவினரின் தேயிலை எஸ்டேட் ஒன்றிற்கு அழைத்துச் சென்றாள். மேகங்கள்
மறைக்கும் அந்தத் தேயிலைத் தோட்டம் மிக ரம்மியமாக இருந்தது. நாங்களும்
சில னிமிடங்கள் தேயிலை பறித்தோம். தோட்டப் புத்துணர்ச்சி கொண்ட
தேனீர் அருந்துவது அந்த சூழலுக்கு ஒர் அருமையான அனுபவம். போன்சாய் மரங்கள்
போன்ற, இந்த தேயிலை செடிகள் ஒவ்வொன்றிற்கும், வயது சுமார் நூறு
இருக்கும்.
டாடா தேயிலை எஸ்ட்டெட்கள் பல இடங்களில் இருந்தன.

அஸ்ஸாம் பற்றிக் கூறிவிட்டு, காஸிரங்கா வன சரணாலயம் பற்றிக்
கூறாமலிருக்கக் கூடாது. ஆனால் கூறவும் முடியாது என்னால். ஏனென்றால்
நான்தான், அங்கு செல்லவேயில்லயே. நேரமின்மையால் இங்கு செல்ல முடியாதது
எனக்குப் பெரிய வருத்தமே. இயற்கைச் சூழலில், யானைச் சவாரி செய்வதும்,
காண்டாமிருகங்களைப் பார்ப்பதும் அரிதான நிகழ்ச்சியல்லவா. இதே மாதிரி
வாய்ப்பு தவற விட்ட வரிசையில் புகழ்பெற்ற "காமாக்கியா" ஆலயத்தையும்
சேர்த்து கொள்ளுங்கள்.

காண்டாமிருகம்தான் பார்க்க முடியவில்லை. குறைந்தது காண்டாமிருக வடிவம்
கொண்ட ஏதெனும் ஒரு நினைவுப் பொருளாவது வாங்கிச் செல்ல வேண்டும் என்று
தீர்மானித்தோம். வழக்கமாக கார் ஓட்டி வரும் அஜீத் அன்று வரவில்லை.
வேறொரு ஒரு டாக்சி பிடித்து, 40 கிலோமீட்டர் பயணம் செய்து,
கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் ஒர் இடத்திற்குச் சென்றோம். மரத்திலான
காண்டாமிருக பொம்மை எல்லொர் கவனத்தையும் கவர்ந்தது. கிட்டத்தட்ட ஐந்து
அல்லது ஆறு கிலோ எடை கொண்ட அந்த கைவினப் பொருளின் விலை ஆயிரம்
ரூபாயாம். ஆனால் பேரம் பேசி ஐனூறு ரூபாய்க்கு
வாங்கி விட்டோம். ஐனூறு ரூபாய்க்கு இது எப்படி சாத்தியமென்று, எங்கள்
முதுகை நாங்களே தட்டிக் கொண்டோம். மறுநாள் வேலைக்கு வந்த அஜீத், இந்த
காண்டாமிருக பொம்மை, தனது வீட்டினருகே இருனூறு ரூபாய்க்குக் கிடைக்கும்
என்றான். மேலும், காண்டாமிருகம், களையாக இல்லை என்றும், மூஞ்சி, நாய்
முகம் போல உள்ளது என்றும் வெறுப்பேற்றினான். இவனக் கூட்டிக் கொண்டு போய்
வாங்கவில்லை, என்று இவனுக்கு 'ஜே' என்று ஸ்ரீகாந்த் சொன்ன போது அனைவரும்
அதனை ஆமோதித்தோம்.

இந்த அஸ்ஸாம் மக்களின் staple food, அரிசி மற்றும் பருப்பு ஆகும்.
ஆனால், பாலும், பால் சார்ந்த பொருட்களான தயிர், மோர், வெண்ணை,
நெய் போன்றவை கிடைப்பதில்லை. காபி, டீ போடக்கூட பால் பவுடர்தான்
உபயோகிக்கின்றனர். காரணம் தெரியவில்லை. பச்சைக் கடுகு கொண்டு
செய்யப்படும் சட்னி பிரபலம். அதனைச் சாப்பிட்ட பிறகுதான், மன்னிக்கவும்,
சாப்பிட முயற்சி செய்த
பின்புதான், "கடுகு சிறுத்தாலும் காரம் போகாது" எண்ற்ற பழமொழியின்
அர்த்தம் புரிந்தது.

இரண்டு மாதங்கள் தங்கிய போதும், அஸ்ஸாம் என்பது இப்படித்தான் என்று
என்னால் கூற முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட சிறு சிறு அனுபவங்களை மட்டுமே
தொகுத்துக் கூறியுள்ளேன்.

1 comments:

ramachandranusha(உஷா) said...

86-87ல் அசாம் பொங்கைய்காவில் இருந்த இனிய நினைவுகள் ஞாபகம் வந்து விட்டது. அப்பொழுதே போடோ பிரச்சனை ஆரம்பித்ததால், ஸ்பிக்கில் சேர்ந்து .... அதெல்லாம் பழைய கதைகள். கீழ் அசாமில் வங்காள தேசத்தினர் ஊடுருவல் அதிகம்.
வங்காள மொழியின் தாக்கமும் அதிகம்.