"அமாவாசைக்கும், அப்துல் காதருக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்பது வழக்கம். அதே போல "அலெக்சாந்தருக்கும் ஆறுமுகனுக்கும் என்ன சம்பந்தம்?" என்று கேட்டால், 'இருக்கு சம்பந்தம்' என்று சொல்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள். சமீபத்தில் நாரதகான சபா மினி அரங்கில் 'நாட்டியரங்கம்' சார்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் நடனமணி ஸ்ரீலதா வினோத், "முருகன்" என்ற தலைப்பில் நாட்டியம் குறித்த லெக்-டெம் நிகழ்த்தினார். அப்போது, அலெக்சாந்தருக்கும் ஆருமுகனுக்கும் உள்ள ஒற்றுமைகள் குறித்துப் பேசினார். ஆறுமுகன் என்றால் ஆரு? சாட்சாத் நம்ம ஊர் முருகனேதான்.
1937ல் நடைபெற்ற 'ஆல் இன்டியா ஒரியன்டல் கான்ஃபரன்ஸ்'சில் திரு.கோபாலப் பிள்ளை என்பவர் மேற்கண்ட தலைப்பில் விரிவாக பேசியுள்ளாராம். அப்போது கூறப்பட்ட கருத்துக்கள் என்னவென்றால்:-
- பெர்சிய மற்றும் அரேபிய மொழிகளில், அலெக்சாந்தர், "இஸ்காந்தர்" என்று அழைக்கப்பட்டார். முருகரோ, இந்தியாவில் "ஸ்கந்தா" என்று தொழப்பட்டார். (பெயர் உச்சரிப்பு ஒற்றுமையைக் கவனிக்கவும்).
- அலெக்சாந்தர் ஒரு படைத்தலைவர். முருகப்பெருமானும் "சேனாபதி" என்றழைக்கப்பட்ட படைத்தலைவர் ஆகும்.
- அலெக்சாந்தரின் கையில் இருக்கும் ஆயுதம் லான்ஸ் எனப்படும் "வேல்" ஆகும். முருகனின் கையில் உள்ள ஆயுதம் "வேலாயுதம்" என்பது அனைவரும் அறிந்ததே.
- அலெக்சாந்தரின் போர் வாழ்க்கையில் ஒரு முக்கிய நிகழ்வு "டேரியஸ்" என்ற எதிரியை அழைத்ததாகும். முருகப் பெருமானின் முக்கிய வதம் "தாரகாசுரன்" என்ற அரக்கனை அழித்ததாகும். (பெர்சிய மொழியில் டேரியஸ் என்றாலும், வட மொழியில் தாரகா என்றாலும் "காப்பவன்" என்ற பொருள் ஒன்றே.)
- அலெக்சாந்தர் பாக்டீரியா நாட்டு இளவரசியான "ரோக்சேனா"வை மணந்தார். முருகரோ, "தேவசேனா"வை மணந்தார். (பெயர் உச்சரிப்பு ஒற்றுமையைக் கவனிக்கவும்).
- இந்தியாவின் மிகப் பெரிய பேரரசரான சந்திர குப்த மௌரியர், அலெக்சாந்தரை, தான் வணங்கும் தெய்வங்களுல் ஒன்றாக வைத்து வழிபட்டார். முருகப் பெருமானது வாகனம் மயில். மயிலின் வடமொழிப் பெயர் "மோர்" அல்லது "மௌர்யா". மௌரியர்களது அரசுச் சின்னங்களில் குறிபிடத் தகுந்தது மயிலாகும்.
- சிமுலேஷன்
7 comments:
நான் நம்புகிறேனோ இல்லையோ,
இது போல பெயர் ஆராய்ச்சிகள் படு சுவாரசியம் என்பதை ஒப்புக் கொள்கின்றேன்.
How did "Muruga" get the Name "Skandha"?
செல்வகுமார் அவர்களே,
முதன் முறையாக எனது வலைப்பதிவுக்கு வரும் உங்களை வருக, வருகவென வரவேற்கின்றேன். அடிக்கடி வர வேண்டும்.
நீங்கள் சொல்வது போல எனக்கும் இந்த ஆராய்ச்சியில் நம்பிக்கை வரவில்லை. ஆப்ரஹாம் லிங்கனுக்கும், ஜான் கென்னடிக்கும் பல ஒற்றுமைகள் தற்செயலாக அமைந்தது படித்திருக்கின்றேன். அதே போல இந்த ஒற்றுமைகளும் ஒரு தற்செயாலான விஷயமாக இருக்கலாம் என்றெண்ணுகின்றேன். எனினும் நீங்கள் சொல்வதுபோல் ஆராய்ச்சி படு சுவாரசியம் என்பதை ஒஊபுக் கொள்கிறேன்.
- சிமுலேஷன்
சிவா,
வருகைக்கு நன்றி. ஸ்கந்தனுக்கும் கந்தனுக்கும் ஒற்றுமை இருப்பதாகத் தெரிகின்றது. ஆனால் முருகன் எப்படிக் கந்தன் ஆனான் என்று தெரியவில்லை.
- சிமுலேஷன்
1. முருகனுக்குத் தமிழிலேயே கந்தன் எனும் பேரும் உண்டல்லவா?
"கார்த்திகேயா கலியுக வரதா கந்தா முருகா கருணாகரனே" என்கிற மாதிரிப் பொது மக்கட் பாட்டுகள் எத்தனையோ உள்ளன. அதன் ஸம்ஸ்க்ருத வடிவமாகக் கருதப் படுவது 'ஸ்கந்த'. காளிதாசனும் குமாரசம்பவத்தில் பயன்படுத்தும் பெயர்களில் ஒன்று அது. கந்த புராணம் தமிழிலும் ஸ்கந்த புராணம் ஸம்ஸ்க்ருதத்திலும் மிக்க தொன்மை வாய்ந்தவை. சிவன் கண்ணிலிருந்து 'நழுவி' 'ஒழுகி' வந்ததால் [ஸ்கந்தனம்] அப்பெயர் என்ற ஒரு சமத்காரமான விளக்கமும் உண்டு!
2. தாரகா என்பதற்கு வடமொழியில் காப்பவன் எனும் பொருள் கிடையாது. அந்த கோபாலப் பிள்ளை அப்படிச் சொல்லியிருக்கமாட்டார் எனத் தோன்றுகிறது. வடமொழியில் தாரா, தாரகா என்பவை விண்மீன்களில் ஒரு வகையைக்குறிக்கும்.
3.மயில் என்பது வடமொழியில் 'மயூர' ஆயிற்று. அதை இந்திக்காரன் 'மோர்' எனத் திரித்தான்.
மௌர்ய என்ற சொல் 'முராவின் வழித்தோன்றல்' என்ற விதத்தில் தோன்றிற்று. ரகுவின் வழி ராகவன், ஜனகன் பெண் ஜானகி, மிதிலைக்காரி மைதிலி, தசரதன் மகன் தாசரதி, அஞ்சனையின் மகன் ஆஞ்சனேயன் என எடுத்துக்காட்டுகள் பல.
4. அந்தக் கோபாலப் பிள்ளை சொன்னதை 'ஆராய்ச்சி' என்பது உசிதமில்லை என்பது என் கருத்து. நிறைய விஷயங்கள் ஒரு வேடிக்கை விளையாட்டுக்காகச் சொல்லப்படுபவை, சீரியஸ் கதைகளாகத் திரிந்துவிடுவதற்குப் பல சுவாரசியமான உதாரணங்கள் உண்டு! இந்து எனக்குறிப்பிடப்படும் நம் சமூகத்தில் மட்டுமே 'கடவுளர்'களையும் 'தேவர்'களையும் புராணப் பாத்திரங்களையும் வைத்து இலக்கியநயத்துக்காகவோ, சும்மா ஜோக்குக்காகவோ குட்டிக்கதைகள் சொல்வது, பழுத்த வேதாந்தியிலிருந்து பாமர 'தளித்து' வரை எல்லோர் மட்டத்திலும் எல்லாக் காலங்களிலும் காணலாம்! அட தேவாசுரர்களை விடுங்கள், நம் வரலாற்றுக்கால மகான்கள் வாழ்க்கை பற்றிக்கூட, அவர்கள் சொன்னதற்கும் செய்ததற்கும் தனக்குத் தோன்றிய அர்த்தம் கற்பித்து அதை நிஜம்போலாக்கிவிடும் கதைகள் எத்தனை! ஆகவே அந்தக் கோபாலப்பிள்ளை விஷயத்தைச் சற்று authentic ஆகச் சோதித்தறியவேண்டும் - அவர் 'ஆக்சுவலி' என்ன சொன்னார்? எங்கு சொன்னார்? யாவர் முன்னே?!
பாலு
பாலு சார்,
வருகைக்கும் நீண்ட கருத்துக்களுக்கும் மிக்க நன்றி.
கோபாலப் பிள்ளை அவர்களின் ஆராய்ச்சி குறித்த சுட்டி இங்கே.
http://murugan.org/research/gopalapillai.htm
- சிமுலேஷன்
Very Interesting..
Post a Comment