Saturday, October 24, 2015

என் பெயர் விஸ்மயா - 2 - (குறு நாவல்)


அனந்துவுக்குப் புதுமையாக ஏதாவது பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டும். இப்போது என்ன யோசனையென்றால் 10ஆம் தேதி வருகின்ற தன்னுடைய பிறந்தநாளுக்கு எதுவும் வாங்கிக் கொள்ளாமல், வீட்டில் உள்ள எல்லோருக்கும் ஏதாவது வித்தியாசமாக வாங்கிக் கொடுத்தால் என்ன?

வசுமதிக்கு ஒரு பெங்கால் காட்டன் புடவை. ரவிக்கு ஒரு கிரிக்கெட் பேட். பாவம் ரொம்ப நாளா ஒரு சொத்த பேட்தான் வைத்துக் கொண்டிருக்கிறான். அப்பாவுக்கு ராசியிலே ஒரு ஜிப்பா. அமாவுக்கு ஒரு ரங்காச்சாரி புடவை. விஸ்மயாவுக்கு என்ன ட்ரெஸ்? நோ...நோ... இந்த முறை ட்ரெஸ் வெண்டாம். வித்தியாசமா ஏதாவது! ...கேமிரா?.... இல்ல ...  இல்ல... ஹவ் அபௌட் எ மொபைல் போன்?

ஆபீசிலிருந்து கண்ணனை ஒரு கிரிக்கெட் பேட் வாங்கிக் கொண்டு வரச் சொல்லி விட்டான் அனந்து. அம்மாவுக்கும், அப்பாவுக்கும் ராசியில் ஜிப்பாவும், அம்மாவுக்கு ரங்காச்சாரியிலே புடவையும் நொடியில் வாங்கி முடித்தான். விஸ்மயாவுக்கு மொபைல் போன் வாங்க வெண்டும். எங்கு வாங்குவது? எப்படி வாங்குவது தெரியவில்லை. டி.வி ஆட்டில் வருமே அப்படி கைக்கு அடக்கமாக, குட்டியூண்டு... அந்த விளம்பரம் எடுத்தவன் ரொம்பக் கிரியேட்டிவிட்டி உள்ள ஆள்தான். அந்த வயசாளி டேபிளில் அமந்திருக்கும் பெண் தன்னைத் தான் கூப்பிடுவதாக எண்ணி கடைசியில் பஜ்ஜி ஆவாரே! அது சூப்பர் விளம்பரம்தான். ஆனால் ப்ரொடக்ட்?.... வசதியாக இருக்குமா? க்கு அடக்கமா இருக்கு. ஆனால் காதில் வைத்தால் ஒழுங்காகக் கேக்குமாபோன் பெரிசாக பெரிசாகத்தான் நன்றாகக் கேட்கும். அனந்து அவராக இப்படி ஒரு முடிவுக்கு வந்தார்.

அன்று மாலை எக்மோர் சென்றார். அல்ஸா மாலில்  கேசட் ப்ளேயர், டால்கம் பவுடர், சோப்பு, கால்குலேட்டர், மொபைல் போன் போன்ற வெளிநாட்டுப் பொருட்கள் விற்கும் ஒரே கடை அந்தக் கடை. கால்குலேட்டர் சைஸில் இருந்த அந்த வெள்ளைக் கலர் மொபைல் போன் அவரைக் கவர்ந்தது.

"ஆஹா! இதில்தான் பட்டன்கள் எவ்வளவு பெரிசு, பெரிசா இருக்கு. வெய்ட் கொஞ்சம் அதிகம்தான். ஆனால் நெறைய நாள் உழைக்கும் போலத் தெரிகிறது. ஒரு பத்து நிமிட யோசனைக்குப் பிறகு, அந்தப் போனை எடுத்தார். கிப்ட் பேக் பண்ணச் சொன்னார். ஒரு வழியாக எல்லோருக்கும் கிப்ட் வாங்கியாச்சு.

அந்த ஞாயிற்றுக் கிழமை அனந்துவின் வீட்டில் தீபாவளி கோலாகலம். அப்பாவுக்குக் ஜிப்பா, அம்மாவுக்கு ரங்காச்சாரி புடவை, வசுமதிக்கு பெங்கால் காட்டன், ரவிக்கு கிரிக்கெட் பேட், விஸ்மயாவுக்கு மொபைல் போன்….ஒரே கிப்ட் மயம்

"அப்பா! இது ரொம்ப அநியாயம். எனக்கு மட்டும் கிரிக்கெட் பேட். விஸுவுக்கு மட்டும் மொபைல் போனா? அது எவ்வளவு? என்னோடது எவ்வளவு?"

"ரவி! அப்பாவுக்குத் தெரியாதடா? எனக்கே ஒரு மொபைல் போன் கிடையாது. அப்பாவுக்குத் தெரியும். யார், யாருக்கு எப்ப என்னென்ன வாங்கித் தரணும்னு."

வசுமது ஆறுதலுக்காகச் சொன்னாளா, இல்லை, ஆற்றாமையால் சொன்னாளா?... தெரியவில்லை.

அத்தனை பேருக்கும் மொபைல் போன் மீது ஒரே கண். இந்த வீட்டில் அனந்து மட்டும்தான் மொபைல் போன் வைத்துக் கொண்டிருந்தான். இப்ப என்னடானா பன்னண்டாங் க்ளாஸ் படிக்கிற பொண்ணுக்கு மொபைல்.!

"அவ கோச்சிங் க்ளாஸ், அது, இதுன்னு போயிட்டு வந்துண்டிருக்கா. மொபைல் போன் ஒண்ணு இருந்தா சௌகர்யமா இருக்கும்மேன்னுட்டுத்தான்."

"அப்பா. விசூவோட ஒரு ப்ரண்ட்ஸுகிட்டெயும் மொபைல் போன் கிடையாது. எல்லோரும்தான் கோச்சிங் க்ளாஸ் போறாங்க. இவளுக்கு மட்டும் என்ன மொபைல் போன்?"

"ரவி, தொண, தொணன்னு கம்ப்ளைண்ட் பண்ணாம இரு. விஸு என்ன இருந்தாலும் நம்ம வீட்டுக்குக் கடைக்குட்டிதானே! அவளுக்கு இல்லாத கிப்டா என்ன?

மறு நாள் மொபைல் போனுடன் பெருமையாகச் ஸ்கூலுக்குச் சென்றாள் விஸ்மயா. கிளாஸ் முடியும் போது அப்பா கால் பண்ணினால் நன்றாக இருக்குமே! ப்ரண்ட்ஸ் முன்னால் மொபைல் போனை எடுத்து பேசலாமே! நினைத்த மறு நிமிடம் கால் வந்தது.

மொபைல் போனை எடுத்துப் பந்தாவாகப் பேசினாள் விஸ்மயா. ப்ரண்ட்ஸ் எல்லோரும் பொறாமையாகப் பார்த்தனர்.

"என்னடி இது மொபைல் போன்? சொல்லவேயில்லை!"

"புதுசுடி. எங்கப்பா தன்னோட பர்த்டேக்கு எனக்குப் பிரசன்ட் பண்ணினது."

"அது சரி... எப்படிடீ கால்குலேட்டரிலெல்லாம் போன் பேச முடியுது?"
" ஏய்.. என்ன சொல்றே?"

"ஆமாண்டி. உன்னோட மொபைல் போனைப் பாத்தா கால்குலேட்டர் மாதிரி இருக்கு. உண்மையாவே சொல்லு! இது மொபைல் போன் தானா?"

"ஏய், என்ன வெளயாடறியா? இது நிஜ மொபைல் போன் தான்."

"ச்சீ. மொபைல் போன்னா, உள்ளங்கைக்குள்ள அடங்கற மாதிரி இருக்க வேண்டாம். அந்த டி.வி ஆட்லே வர்ற மாதிரி."


"ஆமாம். வித்யா சொல்றதும் கரெக்ட்தான். அந்த மாதிரி குட்டியூண்டு, க்யுட்டாத்தானே மொபைல் போன் வேணும்னு ஆசைப்பட்டேன். அப்பா ஏன் எங்கிட்டே ஒரு வார்த்தை கூடக் கேக்கலை. கடைக்குக் கூட்டிக் கொண்டு போக வேண்டாம். அட்லீஸ்ட் ஒரு வார்த்தை எந்த மாடல் போன் வேணும்னு கேட்டிருக்கலாமே!"

என் பெயர் விஸ்மயா - 3


என் பெயர் விஸ்மயா - 4

0 comments: