Saturday, October 24, 2015

என் பெயர் விஸ்மயா - 4 - (குறு நாவல்)

என் பெயர் விஸ்மயா - 2


என் பெயர் விஸ்மயா - 3


இந்த வருஷம் தீபாவளி ரொம்ப விசேஷம். தீபாவளிக்கு ரெண்டு நாள் முன்னமே பரத் மாமா குடும்பத்துடன் அமெரிக்காவிலிருந்து வந்து சேர்ந்திருந்தார். அனதராமனும் தன தம்பி, மச்சினர் எல்லோரையும் தீபாவளிக்கு முதல் நாளே வரச் சொல்லியிருந்தார். ஒவ்வொருவராக வர, வர தீபாவளி களை கட்டத் தொடங்கி விட்டது.

"குரு, என்ன இருந்தாலும் தீபாவளி மாதிரி எந்தப் பண்டிகையும் வராதுரா. நாமெல்லாம் சின்னப் பசங்களா இருந்தப்போ, ஒரு வாரத்துக்கு முன்னாடியே தீபாவளி ஜொரெல்லாம் வந்துரும். இப்பப் பாரு, தீபாவளிக்கு ஒரே ஒரு நாள் தான் லீவு."

"தீபாவளிலேயே ஸ்பெஷல் மொத நாள்தான். ஸ்வீட்ஸ் எல்லாம் சாப்புட்டுட்டு, பட்டாசெல்லாம் வெடிச்சுட்டு, மணிக் கணக்கா ஒக்காந்து அரட்டை அடிக்கறோமே, அந்த சுகம் வரவே வராதுரா. அதிலேயும் இந்த வருஷம் பரத் வேற குடும்பத்தோட, அமெரிக்காவ்லேந்து வந்த்ருக்கான். இந்த வருஷம் சூப்பர் தீபாவளிதான்."

"ஆபீஸ்லே ஒரு நாள் லீவு விட்டாலும், நாம எல்லோரும் ரெண்டு நாள் லீவு போட்டுட்டு, வருஷா வருஷம் யாராவது ஒர்த்தர் வீட்ல தீபாவளி கொண்டாடறோமே, அது தாண்டா செம்ம."

அனந்து விடு தீபாவளியில் அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்தது. அருண் ஹாலிலேயே ஒரு பட்டாசு வைத்து, அனைவரிடமும் திட்டு வாங்கிக் கொண்டிருந்தான்.

"பை வே. விஸ்மயாவ எங்க காணோம்? அவளும் ரெண்டு நாள் லீவு போடுவாளே. ஒரு வேலை இந்த செக்யுலர் காலேஜ்ல லீவு கொடுக்கலியோ?

"பரத் அண்ணா. விஸ்மயா இப்பத்தான் போன் பண்ணினா. ஒரு பிப்டீன் மினிட்ஸ்லெ வந்துடுவாளாம்."

மணி ஆறாயிற்று. ஆறரையும் ஆயிற்று.

"என்னடா இது?. அவளுக்குப் போனைப் போடேண்டா! அவ, வீட்டில இல்லாம களையே இல்ல."

"இல்ல சித்தப்பா, மறுபடியும் அவளே போன் பண்ணிட்டா. டிராபிக் ஜாமாம். 'இன்னம் பத்து நிமிஷத்லே வீட்லே இருப்பேன்னு' சொல்லிட்டா.

கரெக்டாக மணி ஏழாக காலிங் பெல் அடித்தது.

"வா. ஹரி. வா. எல்லோருமே இப்ப வீட்லேதான் இருக்காங்க."

"ஹாய் டூயிங்" என்று சொல்லி பரத் அந்த இளைஞனை வரவேற்றார்.

"உட்காருப்பா. என் பேரு அனந்து. விஸ்ம யாவோ அப்பா."

"சார்.. என் பேரு ஹரி.."

"வெய்ட். வெய்ட். ஹரி.. நானே இன்ட்ரட்யூஸ் பண்றேன். அம்மா, அப்பா, தாத்தா, பாட்டீ, சித்தப்பா, சித்தி, மாமா, மாமி, ரவி, ஷைலூ எல்லோரும் கேட்டுக்கோங்க. இதுதான் ஹரி. எங்க காலேஜ்லே கல்சுரலுக்குப் பாட வந்தார். அப்பேல்லேர்ந்து எங்களுக்குள் பழக்கம். அவர் என்னை விரும்பினார். அதவிட நான் அவர அதிகமா விரும்பினேன். மே மாசம் ரெண்டு பெரும் கோர்ஸ் முடிக்கறோம். அதுக்கப்புறம் ஒரு ஆறு மாசத்லே கல்யாணம் பண்ணிக்கலாம்னு முடிவு பண்ணியிருக்கோம்.      

ஆறு மாசத்லே நீங்க எப்ப தேதி சொன்னாலும் சரி."

எல்லோரும் என்ன பேசுவது என்று தெரியாமல் திரு,திருவென்று முழித்திருக்க சித்திதான் முதல் குரல் கொடுத்தாள்.

"வஸு. நீ இப்படிப் பண்ணுவேன்னு நாங்க யாரும் எதிர்பார்க்கலை!"

"சித்தி... ஹரிக்கு எந்தக் கொறையும் கிடையாது. எம்.ஏ சோஷியல் சைன்ஸ் படிச்சுட்டிருக்கார். அலப்பி வெங்கடேசன் சார்கிட்ட பா ட்டு கத்துகீட்டு இருக்கார். டீ டோட்டலர். ஒங்களால ஹரிகிட்ட எந்த ஒரு கொறையும் கண்டு பிடிக்க முடியாது. ஆனா, நானா…. என்னோட மாப்ளையத் தேடிக்கிட்டேன்னு ஒங்களுக்கெல்லாம் கோபமாயிருக்கும். நானா இப்படி ஒரு முடிவு எடுக்காட்டி, நீங்கள்ளெல்லாம் ஒரு நல்ல பையனை எனக்காக செலெக்ட் பண்ணியிருப்பீங்க. ஆனா அவனை எனக்குப் பிடிச்சுருக்குமான்னு தெரியாது. சின்ன வயசுலேந்து எனக்காக பெஸ்ட் திங்க்ஸ்தான் செலெக்ட் பண்ணீயிருக்கீங்க. ஆனா அது ஒங்க பாய்ண்ட் ஆப் வியுலே. என்னோட பாய்ன்ட் ஆப் வியுவ்லேந்து யாருமே எப்பவுமே யோசிச்சதில்லே. அட்லீஸ்ட் எனக்கு ஏதாவது வாங்கிக் கொடுத்த பின்னாடியாவது, யாரவது, "வஸு, உனக்கு இந்தப் பாவாடை பிடிச்சிருக்கா? இந்த மொபைல் மாடல்  பிடிச்சுருக்கா?, இந்த மாடல் கார் பிடிச்ச்சுருக்கா?ன்னு ஒரு வார்த்தை, ஒரே ஒரு வார்த்தை கேட்டிருந்தாக் கூட, “ஆஹா, என்னையும் மதிச்சு ஒரு கேள்வி கேட்டாங்களேன்னு சந்தோஷப்பட்டிருப்பேன். என்னோட லைப் பார்ட்னர் விஷயத்லையும் இந்தத் தப்பு நடந்துடக் கூடாதுன்னுதான் நெனைச்சேன். அதனாலதான் இப்படி ஒரு முடிவு எடுக்க வேண்டியதாப் போச்சு"

"அனந்து. விஸ்மயான்னு பேர் வெச்சியேடா. கரெக்டா ப்ரூவ் பண்ணிட்டா?"

"ஆமாம், பாட்டீ, அண்ணா பிறந்து பத்து வருஷம் கழிச்சு ஸர்ப்ரைஸா நான் பொறந்ததால எனக்குப் 'விஸ்மயா'ன்னு பேர் வச்சதாச் சொல்லுவே. ஒவ்வொரு முறையும் எனக்கு யாராவது சர்ப்ரைஸ் கொடுக்கும் போதும் என் பேரே தான் எனக்குப் பெரிய  எதிரின்னு நினைச்சுப்பேன். ஆனா, இன்னிக்குத்தான் ஒங்களுக்கெல்லாம் ஒரு பெரிய ஸர்ப்ரைஸ் கொடுத்ததிலே என் பேரே எனக்கு இப்ப ரொம்பப் பிடிச்சுப் போச்சு."

வசுமதி அனந்துவைப் பார்த்துக் கண்ணசைக்க, அனந்து "விஸ்மயா, மாப்ளைக்கு ஸ்வீட் எடுத்துண்டு வாம்மா" என்றார்.  

0 comments: