Saturday, October 24, 2015

என் பெயர் விஸ்மயா - 3 - (குறு நாவல்)
சித்தப்பா, சித்தி, மாமா, மாமி எல்லோரும் ஒரே நேரத்தில் வீட்டிற்கு வருவது அபூர்வம். அதுவும் ஞாயிற்றுக் கிழமை மாலையில் டி.வி. படங்களைப் பார்க்காமல் வந்திருக்கிறார்கள் என்றால் ஏதோ விசேஷம் கண்டிப்பாக இருக்கும்.

"வசு, ரவி என்னமோ எங்களையெல்லாம் வரச் சொல்லியிருக்கான். ஆனா, அவனைக் காணோமே! எங்கே போயிட்டான்?"

"சித்தப்பா. இப்பத்தான் ரவி போன்பண்ணினான். இன்னமும் பத்து நிமிஷத்லே வீட்லே இருப்பேன்ன்னுட்டு"

"எங்கே அவன் பைக் வாசல்லே தான் இருக்கு. பஸ்லே எல்லாம் போக மாட்டாரே நம்ம மாப்ள!"

ஒவ்வொருவராக கலாய்க்க ஆரம்பித்த ஒரு சில நிமிடங்களில் காலிங் பெல் அடித்தது. கதவைத் திறந்தால் ரவி.

"எங்கேடா போயிட்டே? பைக் வாசல்ல இருக்கு!"
"மாமா. அதெல்ல்லாம் அப்புறம் சொல்றேன். இப்ப எல்லோரும் வாசலுக்கு வாங்கோ... பாட்டி  நீயும் வா...   தாத்தா நீயும் வா. அப்புறமா பேப்பர் படிக்கலாம்... விஸு நீ முன்னாடி வா"

வாசலுக்கு வந்து பார்த்தால் சிவப்பு நிறத்தில் ஒரு மாருதி சுஸுகி.

"அடேய்! என்னடா இது? யார் கார்ரா இது?

"கொஞ்சம் வெய்ட் பண்ணு பாட்டி. சொல்றேன்."

"விஸு இப்படி இங்கே வா. கையை நீட்டு. இந்தா சாவியைப் பிடி."

"ஹிப் ஹிப் ஹுர்ரே...ஹிப் ஹிப் ஹுர்ரே. ஹிப் ஹிப் ஹுர்ரே"

வயது வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் கும்பலாகக் கத்தினார்கள்.

"இந்த மாதிரி ஒரு அண்ணா எனக்கும் இருந்திருக்கலாம்" என்றாள் கௌரி மாமி.

"அடுத்த வாரத்லேர்ந்து விஸு காலேஜுக்குப் போகப் போறா. பஸ்லெதான் போவா. ஆனா, ஒரு ஆத்திர அவசரத்துக்குன்னு ஒரு கார் இருந்தா நல்லாத்தானே இருக்கும்."

"பஸ் இல்லேன்னா ஆட்டோ இருக்கேடா" என்று இழுத்த சித்தப்பா, யாரும் அதனை ரசிக்கவில்லை என்று தெரிந்ததும் அந்தர் பல்டி அடித்தார்.

"விஸு, உனக்கு இந்த ரெட் கலர் கார் நல்ல மேட்சாக இருக்கும்"

அனந்து பெருமையாக ரவியைப் பார்த்தார்.

'என்னோட மகனை நெனைச்சா எனக்குப் பெருமையா இருக்கு. இவ்வளவு சின்ன வயசிலே யாரும் கார் வாங்கினது கெடையாது. அதுவும் கார் வாங்கி தங்கைக்குப் பிரசன்ட் பண்ணினது கிடையாது.'

"கார் சாவியை விஸுகிட்டெ கொடுத்திட்டே. ஆனா, யார் பேர்ல கார் வாங்கியிருக்கேடா?" இது நடராஜா மாமா.

"மாமா, செந்தில் ரஜினி படத்லே சொன்ன மாதிரி ஒங்களுக்கு ஞாபகம் வந்த்துடுத்தா? 'மாப்ள இவர்தாம்; ஆனா அவர் போட்டிருக்கிற சட்டை என்னோடது' அப்படீனு சொல்வேன்னு நெனச்செளா? ஆர்.சி புக் விஸ்மயா பேர்லதான் இருக்கு. விஸு…. இது ஒன்னோட கார். ஒன பேர்ல இருக்கிற சொந்தக் கார்!"

"அப்படின்னா அவ பேப்பர்லே எல்லாம் சைன் பண்ணியிருந்திருக்கனுமே? சர்ப்ரைஸா இருந்திருக்காதே!. எப்டி மேனேஜ் பண்ணினே?

"மாமா, அவதான் எல்லாப் பேப்பர்லயும் சைன் பண்ணிக் கொடுத்தா. ஆனா, அவளுக்கே அது தெரியாது"

"கரெக்ட். ஒரு மாசம் முன்னாடி ரவி ஏதேதோ பேப்பர்லே கையெழுத்து வாங்கினான். ஆனா, அது காருக்காகத்தான்னு ஒரு போதும் நெனைக்கவேல்லே."

"விஸு. காலேஜ்லேர்ந்து திரும்ப போகும்போது எங்களையும் கண்டுக்கோ. லிப்ட் கேட்டாக் கொடுப்பதானே?"

"சித்தி. எனக்கே கார் ஓட்டத் தெரியாது. நான் எங்கே ஒங்களுக்கு லிப்ட் கொடுக்கறது?"

"ஹேய் விஸு, அதுக்கும் எற்பாடு பண்ணியாச்சு. நாளைலேர்ந்து பிரம்மாஸ் டிரைவிங் ஸ்கூல்லெர்ந்து சுகந்தின்னு ஒரு லேடி வந்து உனக்குக் கார் டிரைவிங் கத்துக் கொடுப்பாள். ஒரே வாரத்லே ப்ராக்டிஸ் பண்ணிடலாம்.

"ரவி ஆட்டோ கியர்னு ஒண்ணு இருக்காமே? க்ளட்ச், கியர்னு எதுவுமே மாத்தாம அப்படியே ஈஸியா ஓட்டிண்டு போலாமாமே?"

"சே அதெல்லாம் ஒத்து வராது. பெட்ரோல் வேற எக்கச்சக்கமாக்குடிக்கும். இதுதான் உனக்கு பெஸ்ட்."

மறு நாள் காலை ஆறு மணிக்கு காலிங் பெல் அடிக்க, கதவைத் திறந்தாதாள் விஸ்மயா.

"வாங்க..வாங்க.. சுகந்தி மேடம்தானே? குட் மார்னிங்"

"இல்ல. இல்ல. சுகந்திக்கு ஒடம்பு சரியில்ல. நான் மணிமேகலை. குட் மார்னிங் மேடம்"

மணிமேகலை விஸ்மயாவை சென்ட்ரல் பாலிடெக்னிக் அருகே உள்ள மைதானதுக்குக் கூட்டிச் சென்றாள். இடம் மாறி விஸ்மயாவை டிரைவர் சீட்டில் அமரச் செய்தாள்.

"சும்மா க்ளட்சை ரிலீஸ் பண்ணி, ஆக்சிலரேட்டரை ஸ்லைட்டா பிரஸ் பண்ணுங்க."
வண்டி நகர ஆரம்பித்தது. ஆனால் செகண்ட் கியர் மாற்ற முயற்சிக்கையில் 'பொக்'கென்று நின்றது. ஒரு மணி நேரத்தில் பதினைந்து முறை வண்டி நின்றது.

"மேடம்.. ஆட்டோ கியர்னு ஒண்ணு இருக்காமே. இந்த மாதிரி கியர் எல்லாம் மாத்தும் போது  வண்டி ஆப் ஆகாதாமே. உண்மையா?"

"கரெக்ட் மேடம். ஆட்டோ கியர் சூப்பரா இருக்கும். அதுவும் நம்ள மாதிரி லேடீஸுக்கு ரொம்பவே கரெக்டாக இருக்கும். நீங்க கூட ஆட்டோ கியர் வாங்கியிருக்கலாமே. கொஞ்சம்தான் வெலை அதிகம். ஆனா இந்த மாதிரியெல்லாம் கஷ்டப்பட வேண்டியிருக்காது!"

நான் எங்கே கார் வாங்கினேன். ரவி கேட்டானா? இல்ல அப்பாதான் என்னைக் கேட்டாரா? அவருக்கும் இந்த விஷயம் தெரிஞ்ச்சுருக்குமே. அதுவும் 'சேப்பாயி' மாதிரி இப்படி ஒரு கலர். நான் வாங்கியிருந்தால் சூப்பரா கருப்புக் கலர்லே வாங்கியிருந்திருப்பேனே!

0 comments: