Monday, September 12, 2011

கொலு வைப்பது எப்படி? - 03

முன்னேற்பாடுகள் – கொலு வைக்குமிடம்
முதன்முறையாகக் கொலு வைக்க இருப்பவர்கள், கொலு வைக்கும் இடத்தினைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும். கொலு கிழக்குப் பார்த்து இருப்பது நல்லது என்றாலும், அபார்ட்மெண்ட்களில் எந்த இடம் வசதியோ அப்படித் தேர்வு செய்து கொள்ளலாம்.  முதலில் இந்த இடத்தையும், இந்த அறையியும், ஜன்னல்களையும்  ஒட்டடை அடித்து சுத்தம் செய்து கொள்ள வேண்டும். விருந்தினர்கள் வரும் இந்த அறையிலுள்ள ஃபேன் முதலானவற்றை சோப் பவுடர் கொண்டு சுத்தம் செய்து பளிச்சென துடைக்கலாம்.  ட்யூப் லைட் மற்றும் அலங்கார விளக்குகளையும் அவற்றின் ஷேடுகளையும் கழற்றி சுத்தம் செய்ய வேண்டும். திரச்சீலைகள் இருந்தால், அவற்றையும் கழட்டித் துவைத்து அயர்ன் செய்து மாட்டலாம்.  கொலு வைக்கும் இடத்திற்கு மேல் தோரணங்கள் கட்டத் தோதாக, சீலிங்க்கிலிருந்து அரை அடி தூரத்தில் நான்கு புறங்களிலும் ஆணி அடித்து அவற்றின் குறுக்கு நெடுக்காக துருப் பிடிக்காத இருப்புக் கம்பிகளை கட்டி வைக்கலாம். இந்தக் கம்பிகள் தோரணங்கள் கட்டத் தோதாக இருக்கும்.

கொலுப்படிகள் வைக்கும் இடத்திற்கு மேலாக துணியால் ஒரு கூடாரம் அமைத்தால் எடுப்பாக இருக்கும். இதனை விதானம் அல்லது அஸ்மான்கிரி என்று சொல்லுவார்கள். இவை கிரி ட்ரேடர்ஸ் அல்லது காதி கிராமோத்யோக் பவன் போன்ற கடைகளில் கிடைக்கும். இவை விலை அதிகம் என்று எண்ணினீர்கள் என்றால் உங்கள் வீட்டிலுள்ள புதிதான, பயன்படுத்தாத பெட்-ஸ்பிரெட்டைக் கூடப் பயன்படுத்தலாம். இதனை கொலுப்படியின் மேலே கூடாரம் போலக் கட்ட வேண்டும். அங்கே மின் விசிறி இருந்தால் அதனக் கழட்டிவிட்டு, ஆஸ்மானகிரி துணியில் ஒரு சிறிய துளையிட்டு அதனைக் கம்பிகளில் கட்டி விட்டுப் பின்னர் மின் விசிறியினை மாட்டலாம். இந்தத் தோரணத்திற்கு அழகூட்ட ரசகுண்டுகள், சமிக்கி வேலைப்பாடுகள் அமைந்த தெர்மோகோல் பதக்கங்கள் ஆகியவற்றை ஆங்காங்கே மாடி வைக்கலாம்.  இதற்குப் பின்னர் சுவற்றில் ப்ரேம் செய்யப்பட்ட துணியில் வரையப்பட்ட ஓவியங்களையும் மாட்டி வைக்கலாம். கொலு வைக்குமிடத்தை நன்கு பெருக்கி, மெழுகி கோலமிடலாம்.

பொம்மைகளை பரணிலிருந்து பத்திரமாக இறக்கி ஒவ்வொரு பொம்மையாக எடுத்து துணி கொண்டு தூசி தட்ட வேண்டும். இதற்கு ஒரு பட்டை பெயிண்டிங் பிரஷ்ஷினையும் உபயோகப்படுத்தலாம். பீங்கான் பொம்மைகளை சோப் கொண்டு அலம்பலாம். பொம்மைகள் சிறிய அளவில் உடந்திருந்தால் பெவிகால், குவிக்-பிக்ஸ் அணை கொண்டு சரி செய்யலாம். பொம்மைகளின் வர்ணங்கள் மங்கி இருந்தால், பொம்மைகளின் தேவைக்கெற்ப 'எனாமல் பெயிண்டோ' அல்லது 'வாட்டர் கலரோ' கொண்டு வண்ணம் தீட்டலாம். முடியவில்லயென்றால், குறைந்த பட்சம், 'கோல்டன் கலர் பெயிண்ட்' வாங்கி வந்து பொம்மைகளின் கிரீடம், மற்றும் இதர ஆபரணங்களுக்கு மட்டும் தங்க நிறத்தில் வர்ணம் தீட்டி விட்டாலே போதுமானது. அவை புதிய பொம்மைகள் போல ஜொலிக்கும்.


நல்ல பொம்மை உடைந்து விட்டது, ஆனால் நம்மால் சரி செய்ய முடியாது என்று எண்ணும் பட்சத்தில் பொம்மை ரிப்பேர் செய்பவர்களிடம் கொடுத்துச் சரி செய்யலாம். மயிலாப்பூர் சித்திரக் குளம் அருகே பொம்மைகளை சரி செய்து வர்ணம் தீட்டி, புதிய பொம்மை போலவே செய்வதற்கென்று ஒரு பிரத்யேகக் கடை உள்ளது. பரமசிவம் என்பவர் இந்தத் தொழிலைப் பல வருடங்களாகாச் செய்து வருகின்றார். இந்த மாதிரிக் கடைகள் ஒரு சிலவே இருப்பதால், பொம்மைகளை ரிப்பேர் செய்ய நீங்கள் முந்திக் கொள்ள வேண்டியிருக்கும்.


தொடரும்…
- சிமுலேஷன்

கொலு வைப்பது எப்படி? - 02

முன்னேற்பாடுகள் – வாங்க வேண்டியவை
நாம் கொலு வைக்க வேண்டும் என்று தீர்மானம் செய்த பிறகு அதற்குத் தேவையான ஏற்பாடுகளை எவ்வளவுக்கெவ்வளவு முன்னதாகக் செய்து கொள்கின்றோமோ அவ்வளவுக்கவ்வளவு நல்லது. எந்த மாதிரி கொலு, எவ்வளவு பெரிய கொலு, எங்கே கொலு வைக்கப் பாகின்றோம் போன்ற விஷயங்களை முன்னதாகவே தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். இவற்றிக்குத் தேவையான பொருட்கள் என்னென்னவென்றும் பட்டியலிட்டுக் கொண்டு பத்துப் பதினைந்து நாட்கள் முன்பாகவே அவற்றை வாங்கி வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது நவராத்திரி துவங்குவதற்கு முந்தைய சனி அல்லது ஞாயிற்றுக் கிழமைகளைல் இவற்றை வாங்கி வைத்து கொள்வதும் மற்றைய ஏற்பாடுகளை செய்து வைத்துக் கொள்வதும் நல்லது.

கொலுப்படிகள்
பாரம்பரியமாகக் கொலு வப்பவர்கள் வீடுகளில் கொலுப்படிகள் இருக்கும். மரத்தினாலோ அல்லது இரும்பினாலோ இந்தப் படிகள் செய்யப்பட்டிருக்கும். இவை போன்ற படிகள் இல்லாதவர்கள் வீட்டில் உள்ள பலகைகள், பெஞ்சுக்கள், மேஜைகள், புத்தகங்கள் உதவி கொண்டு படி கட்டுவார்கள். புதிதாகக் கொலு வைக்க இருப்பவர்கள், இவ்வாறு கஷ்டப்படாமல், புதிதாகக் கொலுப்படிகள் வாங்கிக் கொள்வது நல்லது. மரத்தில் வேண்டுமென்றால் ஆசாரியிடம் ஆர்டர் கொடுத்து செய்யச் சொல்ல வேண்டும். ஆனால் மரப்படிகளைக் கையாள்வது கடினம். மேலும் விலையும் அதிகம்.


எனவே எளிதில் கழட்டி மாட்டக் கூடிய ஸ்டீல் ஸ்லாட்டட் ஆங்கிள்களால் அமைந்த இரும்ப்புப் படியே சிறந்தது. இவை ஹார்ட்வேர் கடைகளிலும், பாத்திரக் கடைகளிலும் கிடைக்கும். எண்ணிக்கை குறைந்த படிகள் வைப்பவர்களும்,   குறைவான பொம்மைகள் வைப்பவர்களும், மெல்லிய தகடுகள் கொண்ட் விலை குறைந்த படிகளை வாங்கிக் கொள்ளலாம். ஆனால் இந்த மெல்லிய தகடுகள் மூலம் அதிகப்படியான படிகள் வைத்தால் அவற்றின் மீது நாம் ஏறி பொம்மகளை வைக்கும் போது இந்த மெல்ல்லிய தகடுகள கண்டிப்பாக வளைந்து விடும். எனவே நிறைய கனமான பொம்மைகளை வைக்க எண்ணினாலோ, அல்லது அதிகப் படிகள் வைக்க எண்ணினாலோ, சற்றெ அதிக ‘கேஜ்’ உள்ள தடிமனான தகடுகள் கொண்ட ஸ்லாட்டட் ஆங்கிள் படிகள் வாங்குவது நல்லது. இஅவை சற்றே விலை கூட இருந்தாலும் நீண்ட காலப் பயன்பாட்டிற்கு நல்லது.


தற்போது ப்ளாஸ்ட்டிக்கிலும் கொலுப் படிகள் கிடைக்கின்றன. இவை எவ்வளவு வலுவானவை என்பது தெரியவில்லை. ஆனால், எளிதில் பூட்டி மாட்ட்டவும், கழட்டிக் கையாள்வதற்கும் வசதியானவையாக இருக்கலாம். அடிக்கடி வேலை மாற்றல் காரணமாக வீடு மாறுபவர்களுக்கு இவை தோதாக இருக்கும்.

பொம்மைகள்



புதிதாகக் கொலு வைப்பவர்கள் கண்டிப்பாக பொம்மைகள் வாங்க வேண்டும். ஏற்கெனவே கொலு வைப்பவர்கள் கூட வருடா வருடம் புதிது, புதிதாகப் பொம்மகள் வாங்க ஆசைப்படுவார்கள். இப்போது எந்த மாதிரி கொலு வைக்கப் போகின்றோம், அதற்கு எப்படிப்பட்ட பொம்மைகள் வேண்டுமென்றும் தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். ஒரு படியில் வைக்கப்படும் பொம்மைகள், ஏறுமாறான உயரங்களில் இல்லாமல் இருந்தால் பார்வைக்கு அழகாக இருக்காது. எனவே எந்த அளவில் பொம்மைகள் வாங்க வேண்டுமென்று நன்கு திட்டமிட்டுக் கொள்ள வேண்டும்.



சென்னை போன்ற நகரங்களிம் கொலுப் பொம்மைகள் வாங்கப் பல இடங்கள் உள்ளன. முக்கியமாக மயிலாப்பூரில் உள்ள வடக்கு மாடவீதி, மற்றும் குறளகம், காதி கிராமோத்யோக பவன், பூம்புகார் கைவினை பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் பொம்மைகள் வாங்கலாம். மற்றும் சில தனிநபர்கள் தங்கள் வீடுகளில் நவராத்திரி காலங்களில் கல்கத்தா பொம்மைகள் மற்றும் பண்ருட்டி பொம்மைகளை விற்பனை செய்கின்றார்கள். கடை வாடகை போன்ற இதர செலவுகள் இல்லாததால் இவர்களிடம் கடைகளை விட சற்றுக் குறைந்த  விலையில் பொம்மைகளை எதிர்பார்க்கலாம். தற்காலத்தில் மண் பொம்மைகள் தவிர, பேப்பர் மேஷ் பொம்மைகள் நேர்த்தியான அங்க அமைப்புகளுடனும், கண்ணைக் கவரும் வண்ணங்களுடனும், கையாள்வத்ற்கு எளிதாக எடை குறைவாகவும் கிடைக்கின்றன.  சில பொம்மைகள் பஞ்சலோக சிலைகள் போலவே உள்ளன. பார்த்தால் உலோகத்திலான சிலைகளுக்கும் அவற்றிற்கும் வித்தியாசமே தெரியாது. வெளிநாட்டில் உள்ளவர்கள் வாங்கும் வண்ணம் ஆன்-லைனில் பொம்மைகள் வாங்குவதற்கும் தற்காலத்தில் வசதிகள் உள்ளன.

தோரணங்கள் மற்றும் அலங்காரப் பொருட்கள்


மற்ற பண்டிகைகள் போல மாவிலைத் தோரணம், பனையோலத் தோரணம்  ஆகியவற்றிக் கட்டினாலும், கொலுவிற்கு மேலும் பல அலங்காரங்கள செய்ய வேண்டும். அதற்காக ப்ளாஸ்டிக் மாவிலைத் தோரணங்கள், வீட்டு வாசலில் கட்ட அலங்காரத் தோரணங்கள், கொலு இருக்கும் அறையை அலங்கரிக்க தொம்பைகள், கலர் காகிதத் தோரணங்கள, ஜரிகை, சமிக்கி வேலைப்பாடு கொண்ட தோரணங்கள் ஆகியவையும் தேவைப்படலாம். உங்கள் வீட்டிற்கு என்ன தேவையோ, உங்கள் கொலுவிற்கு எவை அழகாகப் பொருந்தி வருமோ அவற்றை மட்டும் வாங்கிக் கொள்ளலாம். அனாவசியமாக வாங்கிக் குவித்துக் குப்பை சேர்க்கக் கூடாது.

பரிசுப் பொருட்கள் மற்றும் இன்ன பிற
கொலுவிற்கு வரும் விருந்தினர்களுக்கு அந்தக் காலத்தில் வெத்தில, பாக்கு, தேங்காய், மஞ்சள் தவிர சோப்பு, சீப்பு, கண்ணாடி, ரவிக்கைத் துணி போன்ற பொருட்களைப் பரிசாகத் தருபது வழக்கம். ஆனால் இந்தக் காலத்தில் பெரும்பாலானோர்க்கு இவையெல்லாம் தேவைப்படாது. எனவே இப்போது பலரும் விருந்தினர்களுக்கு உபயோகமான பொருட்களை தருகின்றனர். இந்த வகையில் இன்றைய நாட்களில் ப்ளாஸ்டிக் டப்பா, தட்டு, கூடை, எவர்சில்வர் தட்டு, கிண்ணம், பூக்கூடை, கைப்பை, காதணிகள், வேலைப்பாடமைந்த பர்ஸ் எனப் பலவகை பொருட்களையும் பரிசாக அளிக்கின்றனர். எனவே என்ன பொருட்களை எவ்வளவு வாங்க வேண்டுமோ அவற்றைத் திட்டமிட்டுப் பட்டியலிட்டு முன்னதாகவே வாங்கி வைத்துக் கொண்டால் நேர விரயத்தினைத் தவிர்க்கலாம்.

பரிசுப் பொருட்கள தவிர, சுண்டல் முதலானவற்றைப் பேக் பண்ணிக் கொடுக்க பாலிதீன் பை (ஜிப்லாக்), அல்லது அலுமினியும் ஃபாயிலால் செய்யப்பட்ட டப்பாக்கள் இவையும்  தேவையான அளவுக்கு வாங்கி வைத்துக் கொள்ள வேண்டியிருக்கும். நவராத்திரி சமயத்தில் வந்திருக்கும் ஸ்பெஷல் கடைகளிலோ அல்லது மயிலாப்பூர், பாரிமுனை பகுதிகளில் அமைந்துள்ள கடைகளிலோ இவற்றை வாங்கலாம்.
தொடரும்…
- சிமுலேஷன்

கொலு வைப்பது எப்படி? - 01


நவராத்திரிப் பண்டிகை நம் நாடு முழுவதும் கொண்டாடப்படும் பண்டிகைக்களில் ஒன்று. குறிப்பாக இந்தப் பண்டிகை வங்காளம், மைசூர் மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது. மைசூர் போன்ற நகரங்களில் “தசரா” என்ற பெயரில் அரசாங்கத்தின் ஆதரவுடன் பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்படும். இந்தப் பண்டிகையின்போது தமிழகத்தில் பலரும் பொம்மைக் கொலு வைப்பது வழக்கம். இதே போல ஜப்பான் நாட்டினரும் பொம்மைகளை வைத்து விழா எடுப்பதாக அறியப்படுகின்றது.

நவராத்திரிப் பண்டிகைக்கும்  மற்ற பண்டிகைக்களுக்கும் பெரிய வேறுபாடுகள் உள்ளன். மற்ற பண்டிககள் ஒன்று அல்லது இரண்டு நாடகள்தான் கொண்டாடப்ப்டும். ஆனால் நவராத்திரியோ ஒன்பது அல்லது பத்து நாட்கள தொடர்ச்சியாக விமரிசையாக கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகும். மற்ற பண்டிகைகளில் ஆண்கள் அல்லது பெண்கள் மட்டுமே பெரும் பங்கு வகிக்கும் வாய்ப்பு உள்ளது. ஆனால் நவராத்திரிப் பண்டிகையில் குடும்பத்தில் உள்ள ஆண்கள். பெண்கள், குழந்தைகள் என அனைவருமே பங்கு கொள்ளூம் வாய்ப்பு உள்ளது.

அந்தக் காலத்தில் நவராத்திரிப் பண்டிகையானது பதினான்கு நாட்கள் கூட விமரிசையாகக் கொண்டாடப்படும். வீடு நிறையக் கொலு வைத்து ஊரில் உள்ள அனைவரையும் தாம்பூலம் வாங்கிக் கொள்ள அழைப்பார்கள். மைசூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற சமஸ்தானங்களில் நவராத்திரி பிரம்மாண்டமான முறையில் கொண்டாடப்பட்டு வந்தன. பொதுவாகக் கலைகள் எங்கு கொண்டாடப்பட்டதோ அங்கெல்லாம் நவராத்திரிக்குப் பெரும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. கொலு வைப்பதில் வீட்டுப் பெண்களும் ஆண்களும் மும்முரமாக இருக்க, கொலுவுக்கு அக்கப் பக்கத்தில் இருப்பவர்களை அழைக்க வீட்டில் உள்ள சிறுவர்கள், சிறுமியர்கள் செல்வார்கள். அவர்கள் கிருஷ்ணர், ராதை போன்ற வேடமிட்டுச் சென்று அழைப்பதும் வழக்கம்.

பாரம்பரியமாகக் கொலு வைப்பவர்கள் தங்கள் முன்னோர்களின் வழியிலேயே கொலு வைப்பார்கள. அப்படியல்லாமல் சிலருக்கு புதிதாகக் கொலு வைக்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுவதுண்டு. ஆனால் சாஸ்திரம், சம்பிரதாயம் அனுமதியளிக்குமோ என்று குழம்புவார்கள். ஒரு நல்ல விஷயத்தைத் துவக்குவத்தில் தயக்கமே தேவையில்லை. இது தவிர, தற்காலத்தில் பெரும்பாலான பெண்களும் வேலைக்குச் செல்லும் நிலையில், கொலு வைப்பது என்பது சற்று சிக்கல் நிறைந்தது தான். ஆனால் மனம் இருந்தால் மார்க்கமுண்டு. சரியான திட்டமிடலுடன், குடும்பத்தினரின் ஒத்துழப்பும் கிடைக்கக் கொலு வைப்பது என்பது எளிதான வேலையாகும். அதற்கான எளிய முயற்சியே இந்தப் பதிவுத் தொடராகும்.

தொடரும்…
- சிமுலேஷன்
-


Sunday, September 11, 2011

6961 - சுஜாதா - நூல் விமர்சனம்


இன்றைக்குச் சரியாக 50 வருடங்கள் முன்பு கணையாழியில் வெளிவந்த சுஜாதாவின் கதை 6961. அதாவது வெளிவந்த வருடமான 1961ஐத்  தலைகீழாகத் திருப்பிப் போட்டால் வரும் எண் இது. ஆனால் தனது புகழையோ, கணையாழியின் சர்க்குலேஷனைனையோ இந்தக் கதை தலைகீழாகத் திருப்பிப் போடப்போவதில்லை என்ற அபார நம்பிக்கை சுஜாதாவுக்கு.   இந்தக் கதையையும், கல்கி இதழில் வெளிவந்த "ரோஜா" என்ற கதையையும், தினமணிக் கதிரில் வெளிவந்த "ஜோதி" என்ற கதையையும் விசா பப்ளிகேஷன்ஸ் தொகுத்து வெளியிட்ட சிறுகதைத் தொகுப்பின் முன்னுரையில் பட்டவர்த்தனமாகக் கூறியுள்ளார் இதனை.

ரசனையற்ற ராஜேஷிடன் பந்தம் ஏற்பட, சலிப்பூட்டும் மணவாழ்க்கையில் ஈடுபடும் விமலாவின் மனப்போராட்டத்தினை வருணித்து, அந்த மனப் போராட்டத்திற்கு ஆதாரமாக நடந்த ஒரு நிகழ்ச்சினையே கதைக்குத் தலைப்பாகவும் வைத்துள்ளார் சுஜாதா.  இந்த ஆதார நிகழ்ச்சியினை உற்றுக் கவனித்தால் அது, சுஜாதாவின் "அடிமைகள்" என்ற நாடகத்தில் ஏற்படும் முக்கிய சம்பவத்துடன் ஒத்திருப்பதனைக் கவனிக்கலாம்.  தமிழ்க் கதை படிக்கும் வாசகர்களுக்கு, வட இந்தியக் கதாபாத்திரங்களை வைத்து எழுதப்பட்ட கதை, ஒரு போதும் சோர்வை ஏற்படுத்தாமலும் அன்னியப்படுத்தாமலும் எழுதப்பட்டதில் சுஜாதாவின் திறமை நன்கு பளிச்சிடுகின்றது. 50களில் எழுதப்பட்டு கதை என்பதை மட்டும் நினைவுபடுத்திக் கொண்டே படித்தால், "அப்போதும், இப்போதும், எப்போதும் வாத்யார், வாத்யார்தான்", என்பதை வாய்விட்டுக் கூறிக் கொண்டேயிருக்கலாம்.

முன்பே கூறியது போல இதே தொகுப்பில் இடம் பெற்றுள்ள மற்ற இரு கதைகள் "ரோஜா" மற்றும் :ஜோதி". ரோஜா கதையில் ஒரு அப்பாவிப் பெண் , அரசியல் வியாதியான மிருகத்திடம் பலியாகிறாள். பலிஆனது யார் (லட்சுமி)? பலி வாங்கியது யார் (துரை)? என்று முதல் அத்தியாயத்திலேயே ஆசிரியர் கூறிவிட,  இப்போது கதையினை எப்படி நகார்த்திச் செல்லப் போகின்றார் என்பதுதான் வாசகர்களுக்கு விருந்து.

அடுத்து வரும் ஜோதியில் மீண்டுமொரு பெண் பலியாகின்றாள். இம்முறை குற்றவாளி யார் என்று புரிந்தாலூம் தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை.    நமக்கு மட்டுமல்ல. இன்ஸ்பெக்க்டருக்கும் கூடத்தான். க்ளைமேக்ஸை அறிய ஆவல் கொண்டு பக்கத்தை புரட்ட, அடுத்த கதை ஆரம்பித்து விட நாம் பல்பு வாங்க்குகின்றோம்.

இந்தத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள கதைகள் மூன்றிலுமே உள்ள பொது அம்சம், அப்பாவிப் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவதுதான். அந்த்க் கால கட்டத்தில் இந்த வகைக் கதைகள் மூலம் சுஜாதா பரபரப்பாகப் பேசப்பட்டிருப்பார். Poetic Justice எனப்படும் 'கவித்துவாமான நீதி' வேண்டும் என்று எல்லோரும் எதிர்பார்த்தாலும், நடைமுறை வாழ்க்கையில்  அப்படி ஒன்றும் நல்லவர்கள்  எப்போதும் வாழ்ந்ததாகவும், கெட்டவர்கள் எப்போதும் வீழ்ந்ததாகவும் சரித்திரம் இல்லையே! எனவே நல்லவர்கள், கெட்டவர்கள் என இரு சாராருமே  வாழ்வதும், வீழ்வதும் சகஜமே என்ற நடைமுறை யதார்த்தினை உணர்த்துகின்றன இந்த மூன்று கதைகளுமே.

கதை:            6961
ஆசிரியர்:  சுஜாதா
பதிப்பு:         விசா பப்ளிகேஎஷன்ஸ், 1989-2004
பக்கங்கள்: 120
விலை:        Rs.52

- சிமுலேஷன்

Friday, September 09, 2011

தேவன் நினைவு சொற்பொழிவு - இந்திரா பார்த்தசாரதி - அசோகமித்திரன்

செப்டம்பர் 8ஆம் தேதியன்று சென்னை தாஜ் கன்னிமரா ஹோட்டலில் 'மெட்ராஸ் புக் க்ளப்'பின் ஆதரவில் நடைபெற்ற "தேவன் அறக்கட்டளை தொடர் சொற்பொழிவின்" முதல் கட்டமாக இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுத்தாளர் தேவன் அவர்களை நினவு கூறும் வண்ணம் ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார். மேலும் அசோகமித்திரன் அவர்களும் கலந்து கொண்டு பேசினார். ஸ்ருதி இதழின் ஆசிரியர் ராம் நாராயண் முன்னுரை கொடுத்து இவர்களை அறிமுகம் செய்தார். இவற்றின் ஆடியோத் தொகுப்புக்கள் இங்கே:-



    Get this widget |     Track details  | eSnips Social DNA    



    Get this widget |     Track details  | eSnips Social DNA    


- சிமுலேஷன்

Sunday, September 04, 2011

வண்ணநிலவனும் திராவிட மாயையும்

http://simulationpadaippugal.blogspot.com/2011/02/blog-post_19.html

"நகர்ந்து செல்லும் நாட்கள்" என்ற தலைப்பில் கல்கி வார இதழில் 'வண்ணநிலவன்' அவர்கள் கடந்த 6 இதழ்களாக பல்வேறு தலைப்புகளில் எழுதி வருகின்றார். இந்த இதழில் 'சுப்பு' அவர்களின் "திராவிட மாயை" என்ற புத்தகம் பற்றி எழுதியுள்ளார்.

இந்தப் புத்தகம் குறித்த எனது ஆயாசத்தினை இந்தப் பதிவில் தெரிவிதிருந்தேன். வண்ணநிலவன் கருத்துக்களும் இதையே சுட்டுகின்றது.

- சிமுலேஷன்

Wednesday, August 10, 2011

தி.ஜானகிராமன் நாவல்களில் பெண்கள் - ஒரு விமர்சனம்



Get this widget | Track details | eSnips Social DNA

தி.ஜானகிராமன் நாவல்களில் பெண்கள்
என்ற தலைப்பில் எனது அம்மா கோவை வானொலி நிலையத்தில் வழங்கிய ஒரு படைப்பு. (ஒலிபரப்பானது 1984 ஆம் ஆண்டாக இருக்கலாமென்று நினைக்கின்றேன்).

- சிமுலேஷன்




Sunday, July 31, 2011

ஃபலூடா பக்கங்கள்-03



இந்த வாரம் நிறையக் கேள்விகள் மனதில் தோன்றிவிட்டன. ஃபலூடா பக்கங்க்களைப் படிக்கும் யாராவது பதிலளித்தால் தேவலை

தமிழ்நாட்டுப் ப்ளாட்டினம் என்ன ஆச்சு?



கிட்டத்தட்ட ஒரு வருடம் முன்பு, "ஜியாக்ரபிகல் ஸர்வே ஆஃப் இண்டியா" அமைப்பு தனது ஆய்வுகளின் முடிவில், தமிழ்நாட்டில் கோவை மேட்டுப்பாளையத்திலும், மற்றும் நாமக்கல்லிலும் தங்கத்தினையும் விட விலை அதிகமான உலோகமான பிளாட்டினப் படிவுகள் எக்கச்சக்கமாக இருப்பதாகத் தெரிவித்தார்களே! அது என்ன ஆச்சு? அதனை வெட்டியெடுப்பதற்க்காக ஏதேனும் திட்டங்கள் போடப்பட்டதா? மேலதிகத் தகவல்கள் தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.

கடற்கரையில் பலூன் சுடுதல்


வெகுநாட்கள் கழித்து பெசண்ட் நகர் பீச் சென்றிருந்தோம். மக்கள் தேங்கா, மாங்கா, பட்டாணி சுண்டல் சாப்பிட்டுவிட்டு, துப்பாக்கியினால் கலர், கலராகப் பலூன்களை குறி பார்த்து சுட்டுக் கொண்டிருந்தனர்.

என் பையன் கேட்டான், "அப்பா, இந்தத் துப்பாக்கி குண்டுகள் யார் மீதாவது தவறாகப் பட்டுவிட்டால் என்ன ஆகும்? "அவை குண்டுகள் இல்லை. காரீய ரவைகள்" என்று சொன்னேன்.

ரவைகள் பட்டு யாரும் சாகாவிட்டாலும், அவை குறி தவறி, வேகத்துடன் வந்து யாராவது கண்ணில் பட்டால் அதோ கதிதானே? சுற்றிலும் தடுப்புக்கள் ஏதுமில்லாத இந்தத் துப்பாக்கி விளையாட்டுக்கு எப்படி அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது? ஒரு வேளை இந்த மாதிரி எந்த சம்பவமும் நடக்கவில்லையோ?

மயிலாப்பூர் காக்கைகள்

நாங்கள் குடியிருக்கும் பகுதியில் நிறைய மரங்கள் உள்ளன. அதனால் நிறையப் பறவைகளும் உள்ளன. அதிகாலையில் இவை காச்சூ, மூச்சென்று கத்தி எல்லோரையும் எழுப்பிவிட்டு விடும். ஆனால், ஏழு மணிக்கு மேலே ஒரு பறவையையும் பார்க்க முடியாது. அவை இரை தேடக் கிளம்பிவிடும் போல. பின்னர் மாலை 6-7 மணி வாக்கில் மீண்டும் இவைகளின் சப்தம் கேட்கும். என்னுடைய கேள்விகள்:--

இந்த பறவைகள் இரை தேட தினமும் எவ்வளவு தூரம் செல்லும்?   மயிலாப்பூரிலுள்ள காக்கைகள், மாம்பலம் வரை செல்லுமா? அல்லது மாங்காடு வரைசெல்லுமா? ஒவ்வொரு நாளும் ஒரே திசையில் பறக்குமா? அல்லது தினமும் வெவ்வேறு திசைகளில் பறக்குமா? தினமும் இரை கிடக்குமா? இல்லை, சில நாட்கள் பட்டினியும் கிடக்குமா? பட்டினி  கிடந்து சாகவும் நேரிடுமா?

- சிமுலேஷன்

Tuesday, July 19, 2011

அபூர்வ ராகங்கள் அமெரிக்க வானோலியில்

நண்பர் ஸ்ரீகாந்த் ஸ்ரீநிவாசா (ஸ்ரீ ஸ்ரீ) அமெரிக்காவில் ஸான் பிரான்ஸிஸ்கோ வளைகுடா பகுதியிலுள்ள தமிழர்களிடையே பிரபலமானவர். இட்ஸ்டிஃப் (Itsdiff) என்ற ரேடியோ ப்ரோக்ராமை வாராவாரம் புதன்கிழமை காலை ஆறு மணியிலிருந்து ஒன்பது மணி வரை நடத்துபவர்.

ஸ்ரீ ஸ்ரீயும் நானும் சேர்ந்து இன்று "தமிழ்த் திரையிசையில் அபூர்வ ராகங்கள்" என்ற நிகழ்ச்சியினை நடத்துகின்றோம். விபரங்கள் வருமாறு:-

July 9th 7. 30 am PST (8 PM IST) Very special program

Aboorva Raagangal in Tamil Film Music -Live

(இந்திய நேரப்படி புதன் இரவு – 8:00 )

Tamizh Radio - http://www.tamizhradio.com/


visit www.itsdiff.com for the weekly radio program archives - KZSU Stanford Radio 90.1 FM

Tune in to 90.1 FM or listen live via internet on Wed 6 - 9 am http://kzsulive.stanford.edu/
- சிமுலேஷன்

Saturday, July 16, 2011

பாப்கார்ன் கனவுகள் - ம.வே.சிவக்குமார் - நூல் விமர்சனம்



ம.வே.சிவக்குமாரின் புகழ்பெற்ற படைப்புக்களில் "வேடந்தாங்கல்", "அப்பாவும் சில ரிக்ஷாக்காரர்களும்", "வாத்யார்" போன்றவை புகழ் பெற்றவை.  வாத்யார் பற்றி ஏற்கெனவே இந்தப் பதிவில் குறிப்பிட்டிருந்தேன். இதே வரிசையில் இடம் பெற்ற இன்னமொரு கதை "பாப்கார்ன் கனவுகள்". வேடந்தாங்கலைப் போலவே இதுவும் ஒரு நல்ல தலைப்பு. பாப்கார்ன் எங்கு சாப்பிடுவோம்? சினிமாத் தியேட்டர்களில்தானே? ஆம். இக்கதை "கனவுத் தொழிற்சாலையான" சினிமா உலகைக் களமாகக் கொண்டது. கல்கியில் தொடர்கதையாக வந்த "பாப்கார்ன் கனவுகள்' கதையினை, பூர்ணம் விசூவநாதன் அவர்கள் குழுவில் இருந்த குருகுலம் தியேட்டர்ஸ் எம்.பி.மூர்த்தி 95ல் நாடகமாக போட்டார்.

வங்கியில் வேலை பார்க்கும், சாதாரண நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த மிடில் கிளாஸ் மாதவனான லட்சுமிநாராயணன்தான் கதாநாயகன். வங்கியில் நாடகம் போட்டுப் பொழுது போக்கிக் கொண்டிருக்கும் நாயகன், அடுத்த கட்டமாக சினிமா உலகிற்குள் கதாநாயகனாக நுழைய முயற்சிக்கின்றான். பொறுப்பில்ல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கும் இவனை சுற்றதார் தண்ணீர் தெளித்து விடுகிறார்கள். இவனை   ஒரு நல்ல வழிக்குக் கொண்டு வந்து கரை சேர்க்கவேண்டுமென்று, "பாங்க் எக்ஸாம்" புத்தகமெல்லாம் வாங்கிக் கொண்டு வந்து பிரம்மப் பிரயத்தனம் எடுக்கும் மாமனாரை "தட்சன்" ரேஞ்சுக்குப் பார்க்கின்றான். ஆனால் மனைவி விஜயலக்ஷுமிக்குக் கணவனது நடவடிக்கைகள் எதுவுமே தப்பாகத் தெரியவில்லை.  அதுவே லக்ஷ்மி நாரயணனுக்குத் தெம்பு தருகின்றது. நாடகம்,சினிமா என்று பைத்தியமாகவே அலைகின்றான்.

பாங்க் உத்தியோகத்தில் இருந்து, நாடகம், சீரியல், சினிமா என்று உயிரை விடத் தயாராயிருந்த ம.வே.சிவக்குமாரின் சொந்த அனுபங்களே, பாப்கார்ன் கனவுகளில்  பாதிக்கு மேலே இருந்திருக்கும் என்று நிச்சயமாகச் சொல்லலாம். அவரது மற்றைய கதைகள் போலவே நிகழ்காலத்திலேயே (லக்ஷ்மிநாரயணன் பதில் சொல்கின்றான்; பைக்கில் ஏறி செல்லுகின்றான் போன்று) எழுதப்பட்ட  கதை முதல்முறை அவரது கதையினை வாசிப்பவருக்குப் புதிராக இருக்கலாம்.

வேலை வெட்டி இல்லாமல், பொறுப்பிலாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்களை யாரேனும் பார்த்தால், "ஏதேனும் ஒரு இடத்தில் இவன் ஒழுங்காக வேலை செய்ய மாட்டானா?" என்று எல்லோரும் எரிச்சலடைவது இயற்கை. ஆனால், அப்படியெல்லாம், ஓவர் பில்டப் கொடுத்து, கிளிஷேயாக ஆக்காமல், நல்ல அரசாங்க வங்கியில், பொறுப்பான  வேலையில் இருக்கும் ஒருவன்கூட தனது நடவடிக்கைகளால், படிப்பவரது எரிச்சலைச் சம்பாதிக்க முடிகின்றது என்றால், அதுவே ஆசிரியர் மவேசியின் வெற்றி.

'பாப்கார்ன் கனவுகள்" - கொறித்துப் பார்க்கலாம்.

கதை - பாப்கார்ன் கனவுகள்
ஆசிரியர் - ம.வே.சிவக்குமார்
பதிப்பு - அல்லையன்ஸ் கம்பெனி - 2007
பக்கங்கள் - 176
விலை - Rs. 55/-

- சிமுலேஷன்

Thursday, July 14, 2011

இந்திய இசை மற்றும் நடனம் - குறுக்கெழுத்துப் புதிர்


"சமுத்ரா" ஜூன் மாத  இதழில் வெளியான இந்திய இசை மற்றும் நடனம்" குறித்தான எனது குறுக்கெழுத்துப் புதிர்.

- சிமுலேஷன்

ஃபலூடா பக்கங்கள்-02


காங்கிரஸின் செய்தித் தொடர்பாளர் ஜயந்தி நடராஜன் மத்திய அமைச்சாராகிவிட்டார். மிகவும் நல்ல விஷயம். இனிமேல் செய்தித் தொடர்பாளர் என்ற பெயரில் டி.வி.விவாதங்களில் கலந்து கொண்டு வழ,வழ,கொழ,கொழவென்று பேசி எரிச்சல் மூட்ட மாட்டார் என்று நம்புவோம்.


பா.ஜ.,வின் செய்தித் தொடர்பாளர் நிர்மலா சீத்தாராமன், டிவி விவாதங்களில், கலந்து கொண்டு, காரசாரமாகவும், அதே நேரத்தில் கண்ணியமாகவும் விவாதம் செய்பவர்.  தமிழகத்தைச் சார்ந்த நிர்மலா சீத்தாராமனின் கணவர், ஆந்திராவைச் சார்ந்தவர். தற்போதைய பரபரப்பான டில்லி அரசியல் சூழ்நிலையில், நிர்மலா ஐந்து நாட்கள் விடுமுறையில் ஆந்திரா சென்றுள்ளார். இந்த சமயத்தில் ஏன் இந்த திடீர் ஆந்திர பயணம்' என்றால், "அவசர வேலை' என்கிறார். அந்த அவசர வேலை, ஆவக்காய் ஊறுகாய் போடுவது தான்.


மாங்காய் சீசனில் வீட்டிலுள்ள பெண்கள் அனைவரும் சேர்ந்து, ஆவக்காய் ஊறுகாய் போடுவது வழக்கமாம். அவர்களுடைய சொந்தக்காரர்கள் எத்தனை பேர் இருக்கின்றனரோ, அவர்கள் அனைவருக்கும் சேர்த்து, ஊறுகாய் போடுவது வழக்கம். எனவே, வீட்டு பெண்கள் எங்கு இருந்தாலும், என்ன வேலையில் இருந்தாலும், அனைத்தையும் விட்டு விட்டு, மாங்காய் சீசனில் சொந்த ஊருக்கு வந்து விடுகின்றனர். சுத்த பத்தமான நிலையில் ஆவக்காய் ஊறுகாய் போடுகின்றனர். இதில், நிர்மலா சீத்தாராமனும் சேர்ந்து கொள்கிறார்.


ஒவ்வொரு முறையும் ஒரு ரயில் விபத்துக்கள் நேரும்போதும் முன்னாள் பிரதமரும், முன்னாள் ரயில்வே அமைச்சருமான லால் பஹதூர் ஸாஸ்திரி அவர்கலின் பெயரை யாரும் குறிப்பிட மறந்ததில்லை. 1956ல் முஜாபூரில் நடந்த விபத்தில் 112 பேர் உயிரிழந்த்த போது ராஜினாமா செய்கின்றார். பிரதமர் நேரு அவரது ராஜினாமவை ஒப்புக் கொள்ள மறுக்கின்றார். ஆனால் 3 மாதங்கள் கழித்து அரியலூரில் நடந்த விபத்தில் 144 பேர் இறக்க, விபத்துக்குத் தார்மிகப் பொறுப்பேற்று மீண்டும் ராஜினாமா செய்ய, இம்முறை பிரதமர் ஏற்றுக் கொள்கின்றார். லால் பஹதூர் ஸாஸ்திரியின் இந்த அரிய செயலை எல்லோரும் வியந்தோதும்போது, எனக்குள் தோன்றும் எண்ணமேன்னவேன்றால், "இந்த ராஜினாமாவால் யாருக்கு என்ன லாபம்? தனது ஒரு தவறான உத்தரவால் பெரும் இழப்பு ஏற்பட்டிரூந்தால் ராஜினாமா செய்வது நியாயம். விபத்துக்குத் தான் நேரடி காரணமாக இல்லாத போது ராஜினாமா செய்வது என்ன நியாயம்? அதுவும் ஒரு குழப்பமான, பிரச்னையான சூழ்நிலையில் "என்னை விட்டுவிடுங்கள். நான் போகிறேன்" என்று சொல்வது சரியா? இந்தச் சூழ்நிலையில் புதிதாகப் பொறுப்பேற்கின்றவரின் நிலைமையை எண்ணிப் பார்க்க வேண்டாமா? ஸாஸ்திரியின் செயல் சரியாவேன்று பின்னூட்டத்தில் கூறுங்கள்.


போன வாரம் நாரதகான சபாவில் "அப்புசாமி-சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை"யின் சார்பில் இயக்குநர் மௌளிக்குப் பாராட்டு விழா நடந்தது. இந்த 2 மணி நேர விழாவில் பாக்கியம் ராமசாமி, கிரேசி மோகன், கு.ஞானசம்பந்தன், டி.வி.வரதராஜன் ஆகியோர் பேச்சுக்களைக் கேட்டு  சிரித்து, சிரித்து வயிறு வலித்தது என்றால் அது பொய்யில்லை.

மௌளி சிறுவனாக இருந்த்த போது அவரது மாமா, பொருட்காட்சிக்குக் கூட்டிச் சென்றாராம். மாமா, ஒரு கையில் சிறுவன் மௌளியையும், மற்றொரு கையில் தனது பெண் மஹாலட்சுமியையும் பிடித்துக் கொண்டு செல்கின்றார். இருவருக்கும் பலூன் வாங்கிக் கொடுக்கின்றார். மஹாலட்சுமி, மௌளியைவிட ஓரிரு வயது சிறியவளாக இருப்பதால், சிறுவன் மௌளியே இரண்டு பலூன்களையும் பிடித்தபடி நடந்து வருகின்றான், இந்தச் சமயத்தில்  அவன் கையில் இருந்த ஒரு பலூன் கை தவறிப் பறந்து செல்ல, மௌளி கூறுகின்றான்.

 "மாமா, மாமா, மஹாலட்சுமியோட பலூன் பறந்து போச்சு...!"




இந்தியாவின் தேசியப் பறவையான மயிலினை யாரும் கொல்லக் கூடது எனகிறது சட்டம். ஆனால் இந்த மயில்களால் பெருத்த பயிர் சேதம் ஏற்படுவதால், கோபிச்செட்டிபாளையம் போன்ற பகுதிகளில் விஷம் வைத்துச் சாகடிக்கப்படுகின்றனவாம். மயில்கள் விவசாயிகளால் இவ்வாறு விஷம் வைத்துச் சாகடிக்கப்படுவது சகஜம்தான் என்றும், தற்போது ஒருவர் கைது செய்யப்பட்டதாலேயே விஷயம் பெரிதுபடுத்தப்படுவதாகவுல கூறப்படிகின்றது. பயிர் சேதத்தைத் தவிர மயில்களின் இனப்பெருக்கத்தால், பாம்புகளின் எண்ணிக்கையும் குறைந்துவிட்டதாம். பாம்புகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டதால், எலிகளின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டதாம். மயில்களுடன் சேர்ந்து கொண்டு, எலிகளும் வேறு பயிரகளுக்குப் பெருத்த சேதம் விளைவிக்கிறதாம். சென்னை போன்ற நகரங்களில் சிட்டுக் குருவிகளையே காண முடிவதில்லை என்று எல்லா ஊடகங்களிலும் கூறப்படுகின்றது. ஆனால், குயிலினங்கள் அதிகமாகி விட்டதோவென்று எண்ணுகின்றேன். யாராவது கவனித்தீர்களா? காலை 4 மணிக்கே குயில்கள் கூவி எழுப்பிவிடுவது போதாதென்று நடுப்பகலில் கூட இவை கத்திக் கொண்டிருக்கின்றன. என்ன காரணமென்று தெரியவில்லை.

2010 அக்டோபர் மாதம் இங்கிலாந்திலுள்ள Cambridge University Pressக்கு 35,174 புத்தகங்களுக்காக £1.275 மில்லியன் பெருமானமுள்ள ஆர்டர் கிடைத்துள்ளது. இந்த நிறுவந்த்தின் வரலாற்றிலேயே இதுதான் பெரிய ஆர்டராம். இன்வாய்ஸ் மட்டுமே 2,794 பக்கங்கள் உள்ளது. இந்த ஆர்டர் கொடுத்தது கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூல் நிலையமாகும்.




- சிமுலேஷன்

Sunday, July 03, 2011

அபூர்வ ராகங்கள்-07 - ரதிபதிப்ரியா - Rathipathipriya

ரதிபதிப்ரியா என்ற ராகமானது நடபைரவி ராகத்தின் ஜன்யமாகும். இதன் ஆரோகணம், அவரோகணம் வருமாறு:-

ஆரோகணம்:     S R2 G2 P N2 S

அவரோகணம்: S N2 P G2 R2 S

வெங்கடகிரியப்பா என்பவர் இந்த ராகத்தினை அறிமுகப்படுத்தியதாகத் தெரிகின்றது. இந்த ராகம், ஆலாபனை செய்யும் வண்ணம் அமைந்த ஒரு பெரிய ராகமாக இல்லாததால் இன்றும் அபூர்வமாகவே கையாளப்பட்டு வருகின்றது.

கனம் கிருஷ்ண ஐயர் இயற்றி, எம்.எம்.தண்டபாணி தேசிகர் பாடிய "ஜகஜனனீ" என்ற பாடல் ரதிபதிப்ரியா ராகத்தில் அமைந்த்த ஒரு முக்கியமான பாடலாகும். அந்தக் காலத்தில் சங்கீதம் தெரிந்தவர்களில், இந்தப் பாடலைத் தெரியாத தமிழர்களே இல்லை என்று சொல்லலாம். இந்தப் பாடலை ஸ்ரீராம் கங்காதரன் பாடுவதை இப்போது பார்க்கலாம்.



இதே ராகத்தில், இதே மெட்டினில், "சிவகவி" படத்தில் தியாகராஜ பாகவதர் பாடும் "மனம் கனிந்தே" என்ற பாடலை இங்கே கேளுங்கள்.



MMDயைய்ம், MKTயையும் விட்டால் நேராக இளையராஜா காலத்திற்குத்தான் வரவேண்டும், மீண்டும் ஒரு முறை ரதிபதிப்ரியாவினைக் கேட்க. ஆமாம். சிந்துபைரவியில் வரும் "ஆனந்த நடனம்" என்ற ஒரு சிறிய பாடல் இந்த ராகத்தில் அமைந்துள்ளது.



கல்கி அவர்கள் இயற்றி, எம்.எஸ் அவர்கள் பாடிய புகழ்பெற்ற பாடல், "காற்றினிலே வரும் கீதம்", மீரா படாத்தில் இடம் பெற்றது. இந்தப் பாடல் ரதிபதிப்ரியா ராகத்தில் அமைந்துள்ளது என்று பெரும்பாலானோர் சொல்லுகின்றனர். சிலர் "இல்லை. இதில் அன்னிய ஸ்வர்ன்ங்கள் வருகின்றன. இது சிந்துபைரவியின் ஒரு வெர்ஷன்ட்தான்",  என்று சொல்லுகின்றனர். கேட்டுத்தான் பார்ப்போமே.



கர்நாடக இசையினில் ஏதும் கீர்த்தனைகள் இல்லாவிட்டாலும், எனது பேவரைட் ட்ரையோ (கடம் கார்த்திக், எம்பார் கண்ணன், கீபோர்ட் சத்தியா) இந்த ரதிபதிப்ரியா போன்ற அபூர்வ ராகங்களில் ஆலாபனை செய்யத் தயங்கியதே இல்லை. அதில் ஒன்றினை இப்போது கேட்போம்.






மற்றைய அபூர்வ ராகங்கள் குறித்த எனது பதிவினை இங்கே பார்க்க்கலாம்/கேட்கலாம்.

- சிமுலேஷன்

ஃபலூடா பக்கங்கள்-01



பறவைகளுக்கும் தாகம் உண்டு

போட் கிளப் ரோடு அருகே ஆர்ச் பிஷப் மத்தியாஸ் அவின்யூ என்ற நிழற்சாலையில் ஒரு மரத்தினடியில் ப்ளூ கிராஸ் அமைப்பினர் வெயில் காலத்தில் பறவைகளுக்கென்று ஒரு நீர்த் தொட்டி வைத்துள்ளனர். என்ன ஒரு கரிசனமான ஒரு காரியம்.




தென்னந் தோப்பு தேவதையும் கேட்பரி நிறுவனமும்

ஒரு காலத்தில் தூர்தர்ஷனில் வரும் "வயலும் வாழ்வும்; நிகழ்ச்சியினை பெரிதும் விரும்பிப் பார்ப்பேன். அரிய பல விஷயங்கள் சுவையாக இருக்கும். அதே போலத் தற்போது மக்கள் டி.வியில் மலரும் பூமி என்ற பகுதியில் "தென்னந் தோப்பு தேவதை" என்ற நிகழ்ச்சி ஒளீபரப்பாகின்றது. இதன் ஸ்பான்ஸர் யாரென்றால் Cadbury நிறுவனத்தினர். Cadbury நிருவந்துக்கும் க்கும் இந்த விவசாயம் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிக்கும் என்ன சம்பந்தம் என்று நினைத்தால்,  இந்த வீடியோவில் இருக்கின்றது விடை.





ஞானி அங்கீகரித்த ஆபாசம்




சமீபத்தில் ஒரு எழுத்தாளர் புத்தகம் ஒன்றினைப் பரிசளித்தார். என் மேல் என்ன கடுப்போ தெரியவில்ல. "விருந்து"என்ற தலைப்பு கொண்ட நாவலை எழுதியவர் அலிடாலியா ராஜாமணி, ப்ரியாராஜ் என்ற பெயர்களில் எழுதி வரும் கட்டளை வெங்கட்ராமன் ராஜாமணி என்ற நபர்.   'கதை எப்படி?' என்று ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் "உவ்வே" ரகம். ஒரு குறிப்பிட்ட சாதியினர் மீது வன்மம் கொண்டு எழுதப்பட்ட கதையென்றால் மிகையில்லை. இதில் நான் மிகவும் நொந்த விஷயம் என்னவென்றால், இந்த நாவலை மிகவும் சிலாகித்து "ஞாநி" முன்னுரை எழுதியிருப்பதுதான். ஞாநியின் மீதிருந்த மதிப்பு தடாலென்று இறங்கியது.

பற்கள் தேய்ந்த காரணம்

பல் மருத்துவரைப் பார்க்கச் சென்ற போது, "மேல்வரிசைப் பல்லின் விளிம்பு மட்டும் சற்றே தெய்ந்த்திருகின்றதே! ஒரு வேளை கால்ஷியப் பற்றாக் குறையாக இருக்குமோ?" என்றேன்.

"நகம் கடிக்கும் பழக்கம் உண்டோ" என்றார் டாக்டர்.

"அட. ஆமா."

- சிமுலேஷன்

Saturday, July 02, 2011

வாக்கிங் செல்லும் வயதானவர்களே! ஜாக்கிரதை!

முந்தாநேற்று, விடியற்காலையில் வாக்கிங் போவது என்று தீர்மானித்து, இரண்டாமவன் அனிருத்தும், நானும் ஆறு மணியளவில் (!) வீட்டைவிட்டு இறங்கினோம். நடக்கத் தொடங்கியவுடன், எதிர் வரிசையில் நடந்து வந்து கொண்டிருந்த வயதான ஒரு தம்பதியினரைப் பார்த்தோம். அந்த வயதான மாமி நல்லபடியாக நடந்து வந்து கொண்டிருந்த போதிலும், மாமா சற்றுத் தயங்கித் தயங்கியே நடந்து வந்தார். ஒரு கட்டத்தில் அவர் அப்படியே சிலை போல நின்று கொண்டிருந்தார். ‘Something wrong, ஏதோ சரில்லை’, என்று பட்சி சொன்னதால், ரோட்டைக் கடந்து, அவர்களிடம் சென்றேன். அவருக்கு சர்க்கரை வியாதி உள்ளதா என்றும், தலை சுற்றுகிறதாவென்றும் கேட்டுவிட்டு, வீட்டிலிருந்து சர்க்கரை கலந்த தண்ணீரோ அல்லது வெறும் தண்ணீரோ கொண்டு வந்து கொடுக்கட்டுமாவென்றும் கேட்டேன். அந்த மாமி, கூச்சப்பட்டுக் கொண்டு அதெல்லாம் வேண்டாமென்றும், ஒரு ஆட்டோ கிடைத்தால் நல்லபடியாக வீட்டுக்குச் சென்று விடுவோமென்றும் கூறினார். சரியென்று அவர்களுக்கு ஆட்டோ கூப்பிட முயற்சித்துக் கொண்டிருக்கும் போதே, அந்த உயரமான மாமா தடாலென்று கீழே விழுந்தார். ஆனால் அவர், தலையைச் சற்றே தூக்கிக் கொண்டதால் பின் மண்டையில் அடி ஏதும் படவில்லை. ஸ்டாண்டிலிருந்த ஆட்டோக்காரர் உடனே வர, மாமாவை ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு, மாமியையும் ஏறிக் கொள்ளச் சொல்லி காளியப்பா மருத்துவமனைக்கு செல்லலாமென்று சொல்ல, மாமியோ வீட்டுக்குப் போய் பணம், மொபை போன் இன்ன பிற சாமன்களை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றார். இப்படி நாங்கள பேசிக் கொண்டிருக்கும்போதே, மாமா மயக்கநிலை அடைந்து, நாங்கள் பேசும் எந்த வார்த்தைக்கும் எதிர்வினை காட்டாது இருந்தார். மாமி மிகவும் பயந்து விட்டார். ‘மொபைல் என்னிடம் உள்ளது, போன் செய்து கொள்ளலாம், பணமும் என்னிடம் உள்ளது. நேரத்தை வீணடிக்க வேண்டம்’ என்று சொல்லி ஒரிரு நிமிடங்களில் காளியப்பா மருத்துவமனையினை அடைந்தோம். எனது பையனை நேராக மருத்துவமனைக்கு வரச் சொல்லி விட்டேன். மாமாவை ஓ.பி.யில் அட்மிட் செய்துவிட்டு, எனது பையனிடம் அவர்களின் பக்கத்து வீட்டுக்காரர்களின் டெலிபோன் நம்பர் வாங்கி டயல் செய்யச் சொன்னேன். பக்கத்து வீட்டுக்காரர் ஒருவர் உடனே உதவிக்கு வந்தார். இதனிடையே ட்யூட்டி டாக்டர் அவரை பரிசோதித்து விட்டு, இரத்த நாளங்களில் ப்ளாக் உள்ளது என்றும், அவற்றை அகற்ற உடனடி ஆபரேஷன் செய்ய வேண்டுமென்றும் சொன்னார். இவர் ஏற்கெனவே இருதய நோயாளி. அதனால் அவரது குடும்ப டாக்டரிடம் காட்ட வேண்டுமென்று எண்ணுகின்றார். மேலும் தான் பொதுத் துறை நிற்வனமொன்றில் ஜி.எம் ஆகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவராததால் விஜயா மருந்த்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்கிறார். வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல உடம்பு ஒத்துழைக்குமாவென்று தெரியவில்லை. மாமி தனது வீடு பக்கத்தில்ததன் உள்ளது என்றும், தெரிந்தவர்களிடம் விபரம் சோல்லி விட்டும், பணம், மொபைல் இன்ன பிற ஐட்டங்களை எடுத்துக் கொண்டு வந்து விடுவதாகவும் விரைந்தார். இப்போது ட்யூட்டி டாக்டர் என்னிடம் வந்து, “நீங்கள் எந்த மருத்துவமனைக்கு வேண்டுமானாலும் செல்லுங்கள். எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. ஆனால் அவரை உடனே ஒரு இருதய அறுவை சிகிச்சை நிபுணர் (Vascular Surgeon) வந்து பரிசோதிக்க வேண்டும். கவனமாகக் கேளுங்கள். இருதய அறுவை சிகிச்சை நிபுணர்தான் வரவேண்டும். சாதாரண இருதய நிபுணர் (Cardilogist) பத்தாது” என்று சொல்லுகின்றார். நான் என்ன சொல்லுவது? என்ன முடிவு எடுப்பது? அவரை யார் என்றே எனக்குத் தெரியாது. பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரித்ததில் அவர் மகன பெங்களூரில் இருக்கின்றான் என்றும், பெண் கனடா நாட்டில் இருக்கின்றாள் என்றும் சொன்னார். ஒரு சில நிமிடங்கள் என்ன செய்வது என்று புரியாமல் தவித்து விட்டேன். அடுத்த பத்து நிமடங்களில் மாமி, தனது நண்பர்கள் சிலருடன் மருத்துவமனைக்கு வந்து சேர்ந்தார். அவர்களுக்கு வேண்டியவர்கள் வந்து சேர்ந்ததாலும், எனக்கும் அலவலகத்திற்குக் கிளம்ப வேண்டியிருந்ததாலும், நான் விடை பெற்றுக் கொண்டேன். மாமி கைகளைப் பற்றி கொண்டு அழுதே விட்டார். “தெய்வம் போல வந்தீர்கள் என்றெல்லாம் சொல்லத் தொடங்கி விட்டார். எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது.



அன்று மாலை மாமியிடமிருந்து போன் வந்தது. தங்களது குடும்ப இருதய நிபுணர் வந்து பார்த்து, அவரது அனுமதியின் பேரில் மாமாவை விஜயா மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றதாகவும், அவர் அபாய நிலயில் தற்போது இல்லையென்று, ஆனால் ஸ்கேன் போன்ற ஆய்வுகள் செய்வதற்காக ஒரிரு நாட்கள் அங்கே இருக்கப் போவதாகவும் கூறினார். மிக்க மகிழ்ச்சியாக இருந்தது. இந்த அனுபவ்த்திற்குப் பிறகு விடியற்காலையில் வாக்கிங் செல்வபர்களுக்குக், குறிப்பாக வயதானவர்களுக்கு இந்தப் பதிவின் மூலமாக் ஒரிரு அறிவுரைகள் சொல்ல விரும்புகின்றேன்.



- ஆள் நடமாட்டம் உள்ள தெருக்களிலேயே வாக்கிங் செல்லுங்கள். ஆள் அரவமற்ற தெருக்களில் செல்லாதீர்கள். ஒரு வேளை உங்களுக்கு மயக்கம் போன்ற பிரச்னைகள் வரும்போது, உதவிக்கு யாரும் கிடைக்க மாட்டார்கள்.

- “வீட்டுக்குப் பக்கத்தில்தானே வாக்கிங் செல்கிறோம், எதற்கு சுமை?” என்றெண்ணி, மொபைல் போன் இல்லாமல் வெளியே செல்லாதீர்கள். அதிலும் ICE (In Case of Emergency) என்ற பெயரில்) அவசர, ஆபத்துக் காலத்தில் தொடர்பு கொள்ள வேண்டிய நபர்களின் பெயரை கட்டாயம் சேமித்து வையுங்கள்.

- அருகில் சென்றாலும் நூறு ரூபாயேனும் இல்லாமல் வெளியே செல்லாதீர்கள். அவசரத்திற்கு ஆட்டோவில் செல்ல வேண்டி வரலாம்.

- ஆபத்துக்கு உதவ எத்தனையோ பேர் இருந்தாலும், வெட்கப்பட்டுக் கொண்டு பெரும்பாலோனோர் அதனை ஏற்றுக் கொள்ள முன்வருவதில்லை. ஆபத்து நேரத்தில் அடுத்தவர் உதவியினை ஏற்றுக் கொள்வதில் தவறு ஏதுமில்லை.

- சர்க்கரை வியாதி உள்ளவர்ளுக்கு, சர்க்கரையின் அளவு குறையும் போது தலை சுற்றல், மயக்கம் வரலாம். ஒரு சாக்லேட்டோ, கேண்டியே பாக்கெட்டில் வைத்திருப்பது நலம்.

- இருதய நோயாளியாக இருக்கும் பட்சத்தில், ஆபத்து நேரத்தில் என்ன மருந்து குடிக்க வேண்டுமென்றும், வீட்டு முகவரியும் கொண்ட ஒரு அட்டையினை மேல் சட்டைப் பையில் வைத்திருப்பது மிகவிம் நல்லது.

- சிமுலேஷன்