Friday, February 24, 2006

அமெரிக்க அனுபவங்கள்-01



ஆபீசர்ஸ் ஆப் அமெரிக்கா
------------------------
அமெரிக்காவில் பொதுவாகப் போலீஸை, ஆபீசர்ஸ் என்று குறிக்கிறார்கள். இங்கு அவர்கள் அனவருக்கும் நல்ல மரியாதை உள்ளது. அவர்களும் அதற்குத் தக்கபடி, மக்களின் தோழனாகவும், குற்றம் செய்பவருக்குக் கிலியாகவும் இருக்கிறார்கள். இப்பேர்ப்பட்ட ஆபீசர்ஸ் ஆப் அமெரிக்காவுடன், எனக்கும் எனது நண்பர்களுக்கும் ஏற்பட்ட சில அனுபவங்கள்.

நரேஷ், ராஜன், ராமன் மற்றும் நான் நால்வரும் அப்போது நியூஜெர்சியிலுள்ள, டிரைடென்டிற்கு ஒரு ப்ரோஜெக்டிற்காகச் சென்றிருந்தோம். மதிய உணவிற்காக, மான்மோத் மாலுக்குச் செல்வது
வழக்கம். போய் வர கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகிவிடும். அப்போது எங்களிடம் காரெல்லாம் கிடையாது. எனவே நாங்கள் ஒரு குறுக்கு வழி கண்டு பிடித்து வைத்து எளிதில் போய் வந்து கொண்டிருந்தோம். ஆனால், ஜார்ஜ் எங்களைக் கூப்பிட்டு எச்சரித்தார். " னீங்கள் போகும் வழியிலே garage campaus** (residetial vehicle?) உள்ளது. அங்குள்ள மக்கள் மோசமானவர்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக் இருக்க வேண்டும்," என்றார் (**இதன் சரியான பெயர் ஞாபகம் வரவில்லை. பெரிய கன்டெயினர் போல போர்ட்டபிள் வீடுகள் முப்பது, நாப்பது இருக்கும் ஒர் இடம். இதில் குடியிருப்போர் பெரும்பாலானோர் வசதிக் குறைவானவர்கள். சண்டை மற்றும் அடி, தடிக்குப் போகத் தயங்காதோர்) நாங்கள் இரண்டு வாரமாக, அந்த வழியிலேயே போய் வருகிறோமே, ஒரு பிரச்னையும் வரவில்லையே1" என்று எண்ணி, ஜார்ஜ் கூறிய அறிவுரையை அலட்சியம் செய்து விட்டோம்.

ஒரு நாள் இந்த காரேஜ் குடியிருப்பின் வழியே வந்து கொண்டிருக்கும் போது, அங்குள்ள ஒரு குட்டிப் பையன் விளையாடிக் கொண்டிருந்தான். அவன் எங்களைப் பார்த்து. " நீங்கள் எங்கிருந்து வருகிறிர்கள்?, என்றான். அவனுடன் பேசும் ஆவலில், நாங்கள்,"இந்தியா" என்று உடனே பதில் சொன்னோம். அவன் எங்களை செவ்விந்தியர்கள் என்றெண்ணி, "அப்படியானால் உங்கள் வில், அம்பு முதலானவை எங்கே?அவற்றைக் காட்ட முடியுமா?", என்றான். உடனே எங்களிலொருவர், "மான்மோத் மால் அருகே, ஸ்னீக்கர்ஸ் ஸ்டேடியம் உள்ளது. அங்கே அவை கிடைக்கும்." என்றார். அந்தப் பையன் அப்போது போய் விட்டான். நாங்களும் எங்கள் வேலையப் பார்க்கச் சென்று விட்டோம்.

மறுனாள் மதியம், மான்மோத் மாலிலிருந்து வந்து கொண்டிருக்கும் போது, ஒரு பெண்மணி, எங்களைப் பின் தொடர்ந்து வந்தாள். இது ஏதோ விபரீதம் என்றெண்ணி, எட்டி நடை போட்டோம். உடனே, அந்த்தப் பெண்மணியுடன், இரண்டு, மூன்று பேர் சேர்ந்து எங்களைப் பின் தொடர ஆரம்பித்தனர். "எங்கள் பையனுக்கு வில், அம்பு போன்ற ஆயுதங்கள் வாங்கித் தருவதாகச் சொன்னீர்களா?," என்று ஏதோதோ உளறிக் கொண்டே வந்தனர்கள் அவர்கள். என்ன சொன்னார்கள் என்று அவ்வளவாகப் புரியவில்லை. ஆனால், அந்த அமெரிக்கச் சிறுவன், எங்களைப் பற்றி அவன் குடும்பத்தாரிடம் ஏதோ நன்றாகப் போட்டுக் கொடுத்திருக்கிறான்
என்று மட்டும் புரிந்தது.

ஆனால் நாங்கள் எங்களைத் தொடர்ந்த நாலு பேரையும் பொருட்படுத்தாமல், பேசாமல் அலுவலகத்தை நோக்கி நடந்தோம். இன்னமும் நாலைந்து நிமிடங்கள் நடந்தால் அலுவலகம் வந்து விடும் என்ற தெம்பில். அலுவலகத்திற்கு வந்து சேர்ந்து விட்டால் நிம்மதி என்றெண்ணியிருந்த்த எங்களுக்கு ஒர் அதிர்ச்சி. அலுவலக் வாசலில், பளீர் பளீர் என்று காரில், சிவப்பு மற்றும் நீல நிற எச்சரிக்கை விளக்குகள் எரிய அமெரிகாவின் ஆபீசர்கள். எங்களைத் தொடர்ந்து வந்த அந்தப் பெண்மணிதான், அதற்குள் போன் செய்து போலீஸை வரவழைத்திருக்கிறாள். ஒரு சிறுவனைக் கடத்த முயன்றதாகப் புகார் வந்திருப்பதாக போலீஸ் ஆபீசர்கள், டிரைடன்ட் தலைவரிடம் சொன்னார்கள். பின்னர், தலை வந்து, "இவர்கள்
இந்தியாவிலிருந்து வந்துள்ள என்ஜினியர்கள். எங்கள் அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள். கடத்தல் போன்ற வேலைகளிலெல்லாம் ஈடுபட, இந்த தயிர்சாத கோஷ்டிகளுக்குத் தெரியாது", என்று சமாதானம் சொன்னார். சமாதானமடைந்த போலீசாரும், பயந்தாக்கொள்ளிக் குடும்பத்தினரும், இடத்தை விட்டு அகன்றனர்.

அன்றிலிருந்து, யாரிடமும் அனாவசியமாக வாயைக் கொடுத்து, மாட்டிக் கொள்ளக் கூடாது என்ற முடிவு செய்தோம்.

...தொடரும்.

Thursday, February 23, 2006

ஜப்பான் அனுபவங்கள்



"இகேபுகரோ"விலுள்ள "விங்ஸ்" ஹோட்டலில் அறை பதிவு செய்யப்பட்டுள்ளது. நரிடா விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து, ஷட்டில் பஸ் பிடித்து வந்து விடுங்கள்" என்ற செய்தியும், இகேபுகரோ வரை படமும் இமெயிலில் அனுப்பியிருந்தார், நககோமி ஸான். சரிதான், இதொ வந்து விடும் என்று எண்ணி பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தால், சுமார் இரண்டு மணி நேரப் பயணம். வரும் வழியெங்கும் சிக்கலான மேம்பாலங்கள். ஒவ்வொன்றும் ராட்சத சங்கிலிகள் கொண்டு பிணைக்கப்ப்ட்டிருந்தன. அடிக்கடி வரும் நில நடுக்கத்தால் சேதம் ஏற்படாமலிருக்க இந்த ஏற்பாடாம்.

விங்ஸ் ஹொட்ட்டலில் அனியாயத்திற்குச் சின்ன அறை. ஆனால், அந்தச் சின்ன அறையிலேயே, டி.வி, ப்ரிட்ஜ் முதலானவைகள் இருந்தன. சந்துரு போன்ற நண்பர்கள் வந்தால், உடம்புக்கு ஒரு அறையும், கால்களுக்கு ஒரு அறையும் தேவைப்படும். இதற்கு ஒர் இரவுக்கு சுமார் 70 டாலர்கள். நண்பர் ராய் சொனனார்; கேப்ஸ்யூல் ரூம்களும் இங்கே 30 டாலருக்குக் கிடைக்கும். இவை பெரும்பாலும், குடித்துவிட்டு, இரயிலைத் தவறவிட்ட கோஷ்டிகள் தங்குவதற்கான இடமாகும். இந்த கேப்ஸ்யூல் ரூம்கள், சாதாரண அறைகளே அல்ல. சவப் பெட்டிகளை ஒன்றன் மேல் ஒன்று அடுக்கி வைத்தாற்ப் போல் இருக்குமாம். தங்க வேண்டிய நபர் தனது உடைமைகளை, லாக்கரில் வைத்து விட்டு, இந்த சவப் பெட்டி போன்ற கேப்ஸ்யூலில் ஏறிப் படுத்துக் கொள்ள வேண்டுமாம். மறுனாள் காலை எழுந்து, வீட்டிற்கோ அல்லது அலுவலகத்திற்கோ செல்வார்களாம்.

இகேபுகரோ, நல்ல பெரிய ஸ்டேஷன்.எஜமானுக்காகக் காத்திருந்து, காத்திருந்து இறந்த நாய் ஒன்றிற்கு, இரயில் நிலையத்திலேயே பொதுமக்கள் சிலை ஒன்று செய்து வைத்த கதை ஒன்று, சின்ன வயதிலே படித்திருபீர்களே!. அது இங்குதான். தானியங்கி இயந்திரத்தில் காசை அள்ளிப் போட்டு, டிக்கெட் வாங்கி, கதவிலே செருக, தானாகவே வழிவிடும் அமைப்பு எல்லா நாடுகளிலும் இருப்பது போலத்தான். ஆனால், டிக்கெட் மட்டும் கருப்பு நிறத்தில், பளபளப்பாக இருக்கிறதே, என்றெண்ணி, நண்பரிடம் விசாரித்தேன். இந்த டிக்கெட்டுகள் அனைத்தும், முட்டையின் ஒடுகளிலிருந்து தயாரிக்கக்ப்படுகின்றது என்று சொன்னார். எதற்கு என்று புரியவில்லை.

ஒரு முறை வாங்கிய டிக்கெட் என்றால், இயந்திரம் அதனை வாங்கி முழுங்கி விட்டு, வழி விடும். சீஸன் டிக்கெட் என்றால் வழிவிட்டு, டிக்கெட்டை மறு கேட்டில் திரும்பக் கொடுக்கும். சரவணன், ஒரு முறை பயன்படுத்த்ப்படும் டிக்கெட்டை வாங்கிவிட்டு, வெளி கேட்டில் மீண்டும் டிக்கெட் பெற்றுக் கொண்டார். எங்களுக்கோ ஆச்சரியம். இது எப்படி முடியுமென்று. அப்போது ஒரு ஜப்பானியர் ஒடி வந்து, "அது என்னோட சீஸன் டிக்கெட்" என்று கத்தியபடியே வந்து தனது டிக்கெட்டைக் கேட்டார். அப்போதுதான் புரிந்தது. சரவணன், மின்னல் வேகத்தில், தனக்குப் பின்னால் வந்த்த் ஜப்பானியரின் சீஸன் டிக்கெட்டைத் தவறுதாலக எடுத்து வந்து விட்டாரென்று.

டிரெயினில் கூட்டமென்றால் அப்படி ஒரு மாம்பாலக் கூட்டம். ஒர் ஒழுங்கோடு, டிரெயினில் இறங்குபவர்களுக்கு வழி விட்டு, வாயிலில் இரு புறமும், இரு வரிசைகள் அமைத்து நிற்கிறார்கள். அதே போல் டிரெயினில், ஒருவரோடு ஒருவர் பேச வேண்டுமே. மூச். எல்லாருடய கையிலும், புத்தம் புதிய மாடல்களில் மொபைல் போன்கள். ஆனால், யாருமே பயணத்தின் போது பேசுவதில்லை. பெரும்பாலோர், மொபைல் போனில் கேம்ஸ் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். எல்லா வெளி நாடுகளையும் போலவே, அடுத்து வரும் ஸ்டேஷன் என்னவென்று, அழகாக அறிவுப்பு செய்கிறார்கள். நாங்கள் இறங்க வேண்டிய ஸ்டேஷனது பெயர், தக்கனோடபாபா. முதல் நாள், தக்கனோடபாபா, தக்கனோடபாபா என்று சொல்லிச் சொல்லிப் பார்த்ததில், முதன் முறையாக நாக்கு சுளுக்கிக் கொண்டது.

நாங்கள் வேலை செய்து அலுவலகம் மிக ஒழுங்குடன் இருந்தது. சீனியாரிட்டிப்படி சீட்ட்ங் அரேஞ்மென்ட் இருந்தது. வாரம் ஒரு முறை தலைவர், பொதுவான விஷயங்களை எல்லோருக்கும் சொல்லுவார். இதற்காக யாரும் மீட்டிங் ரூமுக்குச் செல்வதில்லை. அவரவர், அவரவர் இடத்திலேயே நிற்க, தலைவர் 5 முதல் 10 நிமிடங்கள் பேச, வாரந்திர மீட்டிங் சுருக்கமாய் முடிந்துவிடும்.

இந்தியாவில் புதிது புதிதாய்க் கிடைக்கும் ரெடிமேட் சப்பாத்தி, பரொத்தா, குருமா வகையறாக்கள் கொண்டு போயிருந்தோம். அவற்றை எப்படிச் சுட வைத்துச் சாப்பிடுவது என்று முழித்துக் கொண்டிருக்கும் போது, மார்க்கெட்டிங் மானேஜர், எங்களைத் தரதரவென அருகிலுள்ள மினி சூப்பர் மார்க்கெட் ஒன்றிற்குக் கூட்டிச் சென்று, எலெக்ரிகல் தவா ஒன்று வாங்கிக் கொடுத்தார். அதனைக் கொண்டு வந்து மதியம் ஆபீசிலேயே ஆன் செய்து சுரேஷ் மலபார் பரோட்ட்டாவும், எம்.டி.ஆர் மசாலாவும் சுட வைக்க ஆரம்பித்தான். அலுவலகத்திலுள்ள அனவரும் எட்டிப் பார்த்தனர். இண்டியன் கறியின் வாசனை, அவர்களின் கவனத்தைக் கவர்ந்த்தில் ஆச்சரியமில்லை. முதல் ஒரிரு வாரங்களிலேயே, கொண்டு வந்த்திருந்த சரக்கு அனைத்தும் தீர்ந்துவிட, இப்போது இண்டியன் ரெஸ்டாரென்டுகளைத் தேடிப் படையெடுத்தோம். நியூ டெல்லி, ஜ்யோதி பொன்ற பல இண்டியன் ரெஸ்டாரென்டுகள் இருந்த்தன. எல்லா இடங்களிலும், ஒரே மெனுதான். அரிசிச் சாப்பாடு மற்றும் கறி அல்லது டால். சாப்பாடுக்குப் பதில் "நான்" வேண்டுமானால் கேட்கலாம்.

ஒரே ஒரு வாரக் கடைசியில், ஷிஞ்சுகுக்கு என்ற இடத்தைச் சுற்றிப் பார்த்து விட்டு வந்தோம். நான் பார்த்தவரை, மற்ற நாட்டினரை விட, ஜப்பானியர், மரியாதையுடனும், அன்பாகவும் இருக்கிறார்கள். குமார் ஸான், ராமன் ஸான், என்று எல்லோரையும் ஸான் சேர்த்துக் கூப்பிடுகிறார்கள். இவர்களுக்கு ஏனோ, "ல" கரமே வருவதில்லை. கோகுல் என்பவரை, கோகுற் என்பார்கள். லைலாவை, றைறா என்பார்களோ?

அலுவலகத்திலிருந்து, பெரும்பாலும் 8 அல்லது 9 மணிக்கே கிளம்புகிறார்கள். எங்கே? வீட்டிற்கு மற்றும் பாருக்குதான். மறுநாள் காலை சரியான நேரத்திற்கு அலுவலகத்தில் ஆஜராகி விடுகிறார்கள். இரவில் எவ்வளவுதான் தண்ணி போட்டாலும், மறுநாள், ஹேங்கோவர் ஏதுமின்றி, அமைதியாக அலுவலகம் வந்து விடுகிறார்கள். பெரும்பாலோனோர் சிகரெட் புகைக்கின்றார்கள். பேஸிவ் ஸ்மோக்கிங்கினால் பொது இடங்களில் நிற்கவே முடியாத அளவிற்கு சிகரெட் புகை.

டெக்னாலஜியில் முன்னணியிலிருக்கும் ஜப்பானியர், புதிது புதிதாக ஏதேனும் கண்டு பிடித்துக் கொண்டேயிருக்கிறார்கள். சில பொருட்கள் உள் நாட்டு உபயோகத்திற்கு மட்டுமே. ஒரு புத்தக் கோயிலுக்கு, ஜப்பானிய நண்பரொருவருடன் சென்றிருந்தேன். மணியடித்து விட்டு, பிரார்த்தனை செய்கிறார்கள். ஓட்டைக் காலணா போண்ற, நாணயமொன்றை விசேஷமானது என்று சொல்லி கோவிலில் வீசி எறிகிறார்கள். அதன் மதிப்பு 5 யென் மட்டுமே. (என்ன போங்கு?)

சில மார்க்கெட்டுகளில், கம்ப்யூட்ட்டர் மற்றும் அதன் உதிரிப் பாகங்கள் விற்பதற்கான கடைகள் உண்டு. ஒவ்வொன்றும் 9 அல்லது 10 மாடிக் கட்டடங்களாக இருக்கும். பேக்ஸ் மெஷினுக்கென்று ஒர் தளம். வீடியோ கேம்ஸ்க்கன ஒர் தளம் என்று. பெரும்பாலான கடைகளின் வாசலில், மெகபோன் வைத்து, கம்ப்யூட்டரைக் கூவிக் கூவி விற்கிறார்கள்.

இகேபுகரோ மற்றும் ஷிஞ்சுகுக்கு போன்ற இரயில் நிலையங்கள், சிக்கலானதும், நெருக்கடியானதுமாகும். இந்த இரயில் நிலையங்களுக்கு, குறைந்தபட்சம், பத்து தெருக்களிலாவது நுழைவாயில்கள் உள்ளன. ஆனால் டோக்கியோ வரை சென்ற எங்களுக்கு புல்லட் ட்ரெயினில் செல்ல வாய்ப்புக் கிடைக்கவில்லை.

ஒரு நாள் தெருவில் நடந்து போகும் போது, இந்தியர் ஒருவரைப் பார்த்து விசாரிக்க, அவர், இந்திய தூதகரகத்தில் பணி புரியும் தெலுங்குக்காரர் என்று தெரிந்தது. ஸ்ரீகாந்த் அவருடன் தெலுங்கில் மாடலாடி மகிழ்ச்சி கொண்டான்.

இறுதியாக, இந்தியா திரும்புமுன் ஒர் சம்பவம். ஹோட்டலிலிரிந்து, விமான் நிலையம் செல்ல ஷட்டில் பஸ்ஸில் அமர்ந்தேன். போகும் வழியில்லுள்ள இயற்கைக் காட்சிகளைப் படம் பிடித்து, பிலிம் காட்ட வேண்டுமென்று, டிஜிட்டல் கேமிராவை பையிலிருந்து எடுத்து வைத்துக் கொண்டேன். இரண்டு மணினேரப் பயணத்தில் அசந்து தூங்கிவிட்டேன். காமிராவை மறந்து இறங்கி விட்டேன். நாரிட்டா விமான நிலையத்தின், இன்டீரியர் டெகொரேஷனால் கவரப்பட்டு, காமிராவின் மூலம் படம் எடுக்க எண்ணிய எனக்கு அதிர்ச்சி. ஷட்டில் பஸ்ஸிலேயே, காமிராவைத் தவற விட்டிருப்பதை உணர்ந்தேன்.

காமிரா கிடைக்குமா, கிடைக்காதாவெறு எண்ணியபடியே, இன்பர்மேஷன் கவுண்டரை அணுகினேன். புகார் ஒன்று கொடுக்க்கப்பட்டது. எங்கிருந்து வந்தேன், எந்தப் பஸ்ஸில், எந்த சீட்டில் உட்கார்ந்தேன் போன்ற விபரங்கள் பெறப்பட்ட்டன. கவுண்டரிலிருந்த பெண்மணி, " தகவல் அனுப்பியுள்ளேன்; காத்திருங்கள்" என்ராள். ஐந்து நிமிடல் கழித்து,

"உங்கள் காமிரா கிடைத்து விட்டது; அது மேல் தளத்திற்கு ஐந்து நிமிடங்களில் வந்து சேரும்; சென்று வாங்கிக் கொள்ளுங்கள்" என்றாள்.

வியப்புடன் மேல் தளத்திற்குச் சென்றேன். ஐந்து நிமிடம் காத்திருந்தேன். ஒன்றும் நடக்கவில்லை. பின்னர், பத்து நிமிடங்கள் கழித்து, ஒர் ஊழியர், எனது காமிராவைக் கொண்டு வந்து கொடுத்தார். "கால தாமதத்திற்கு வருந்துகிறோம், மன்னிய்ங்கள்." என்று அவர் வந்து சொன்ன போது, வியப்பு மீண்டும் அதிகமானது.

மேற்கண்ட காமிரா சம்பவத்தை, இங்கு வந்து எல்லோரிடமும் சொன்ன போது, "ஜப்பான்னா, ஜப்பான் தான்; இங்கே நடக்குமா இப்படி" என்று சொல்லி வைத்தார் போல ஒரே மாதிரி கூறினார்கள்.

நடு ராத்திரி சென்னை வந்திறங்கிய, எனது லக்கேஜ்களைப் பார்த்த எனது மனவிக்கு அதிர்ச்சி. "லேப்டாப் எங்கே?" என்றாள். பகீரென்றது. லேப்லாப் பையில், லேப்டாப், அலுவலகம் குறித்த முக்கிய காகிதங்கள். பாஸ்போர்ட், அலவன்ஸாகக் கொடுக்கப்பட்ட அமெரிக்க டாலர்கள் அனைத்தும் அல்லவா வைத்திருந்தேன். டாக்ஸியில் விட்டு விட்டேன் போலிருக்கிறதே என்று எண்ணி, நானும், பையனும், புறப்பட்டுக் கொண்டிருந்த் டாக்ஸியத் துரத்தத் தொடங்கினோம். பெட்ரோலின் வேகத்துடன், மனித சக்தியால் போட்டி போட முடியவில்லை.

வந்த டாக்ஸீ, ப்ரீ பெய்ட் டாக்ஸியாக இருந்ததால், சிறிது நம்பிக்கை இருந்தது. பில்லை வைத்து, நம்பரைக் கண்டு பிடித்து, விமான நிலையத்திலிருக்கும் அந்த அலுவலகத்திற்குப் போன் செய்து விஷயத்தைச் சொல்லி, " இப்போதே வருகிறோம்" என்றோம்.

நடு இரவில், காரை எடுத்திக் கொண்டு, விமான நிலையம் சென்று, ப்ரீ பெய்ட் டாக்ஸியின் அலுவலகத்து நபரை விசாரிக்க, அவர், "இதோ டிரைவர் வந்து விட்டார்," என்றார். பத்து நிமிடத்தில் டிரைவர், லேப்டாப்பை அதிலுள்ள பொருட்களுடன் கொண்டு வந்து கொடுத்தார். போன உயிரே வந்தது போலிருந்தது. அவருக்கு நன்றிகளைத் தெரிவித்து, சன்மானமும் கொடுத்து விட்டு வந்தோம்.

ஜப்பானில் காமிரா தொலைந்து கிடைத்த சம்பவத்தை, நண்பர்களிடம் பகிர்ந்த்து கொள்ளும் போதெல்லாம், அவர்களிடமிருந்து,

"என்ன இருந்தாலும் ஜப்பான்காரன்னா, ஜப்பான்காரன் தான். அவன மாதிரி இங்கு வருமா?"

என்ற கமெண்ட்ஸ் கேட்கும் போதெல்லாம்,

"இல்லை, இல்லை, இங்கேயும் நேர்மை உண்டு; இதெல்லாம் இங்கேயும் நடக்கும்; தொலந்து போன லேப்டாப் கூடக் கிடைத்திருக்கிறது"

என்று சொல்ல நினைத்தாலும்,

"பொருட்களைத் தொலைப்பதே உம் வழக்கமோ; லேப்டாப் கூடத் தொலப்பீரோ"

என்று யாரேனும், கேலி பேசுவார்களோ என்ற அச்சத்தினாலும்,

"எல்லாச் சாமான்களையும் நான் எடுத்துக் கொண்டு இற்ங்கினேனா என்று அந்த டாக்ஸி டிரைவர் பார்த்திருக்க வேண்டாமோ?: மற்ந்து விட்ட லேப்டாப்பை அப்படியே அமுக்கி விடலாமா; வேண்டாமா என்ற குழப்பத்திலிருந்து, விற்கப் போய் மாட்டிக் கொண்டு விடப்போகின்றோம்; ஆகவே கொடுத்து விடலாம்" என்ற எண்ணத்தில்தான் திருப்பிக் கொடுத்திருப்பானோ என்ற எணணமும் ஏற்பட்டாதாலும்,

"ஆமாம்; ஆமாம்; ஜப்பான்காரன்னா, ஜப்பான்காரன் தான். அவன மாதிரி இங்கு வருமா" என்றே சொல்லி வருகிறேன்.

அனைவரையும் கவரும் ஐயப்பன் ஆலயம்



சமீபத்தில் திருச்சி சென்ற போது, அங்குள்ள கன்டோன்மென்ட் ஐயப்பன் ஆலயத்திற்குச் சென்றிருந்தோம். இந்த ஆலயத்தில் என்னையும் மற்றும் பெரும்பாலோனரையும் கவர்ந்த அம்சங்கள் வருமாறு:-

1. எந்த மதத்தினரும் ஆலயத்தில் நுழையலாம்.

2. ஆண்டவன் பெயரிலே மட்டுமே அர்ச்சனை செய்யப்படுகிறது.

3. அமைதிக்கு முக்கியத்துவம் தந்து, "அமைதியாய் இருக்கலாமே!", "மெளனமாய் தரிசிக்கலாமே!" என்று ஆங்காங்கே பலகைகள். இப்படிப் பல்வேறு அறிவுரைப் பலகைகள். ஆனால் எதுவுமே வலிந்து பேசாதவை. உ-ம்;"அருகம்புல் கூட அனுமதி பெற்றே பறிக்கலாமே".

4. காமிரா, மொபைல் போன் அனுமதியில்லை.

5. குறிப்பிட்ட இடம் தவிர,எந்த இடத்திலும் சூடம், விளக்கு எற்றக் கூடாது.

6. உண்டியல் கிடையாது.

7. தட்டில் காசு போடுதல் கிடையாது.

8. கேசட், ஸ்பீக்கர் கொண்டு பாடல்களை அலற வைக்கும் வழக்கம் இல்லை. மென்மையான சங்கீதம் காற்றில் தவழ்ந்து வருகின்றது.

9. புல்வெளிகளும், பூங்காக்களும் பச்சைப் பசேலென்று பராமரிக்கப்படுகின்றன.

10. மலஜலம் கழித்துவிடக் கூடிய கைக்குழந்தைகளைத் தவிர்க்குமாறு தாய்மார்கள் வேண்டப்படுகின்றார்கள்,

11. பக்தர்கள் தாங்கள் விரும்பும் நேரம் வரை அமைதியாய் அமர்ந்து தியானம் செய்ய, தியான மண்டபம் உள்ளது.

12. பக்தர்கள் அனைவரும் கண்ணியமான உடை அணிந்து வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆண்கள் பெர்முடாஸ், லுங்கி, ஜீன்ஸ் முதலியனவற்றைத் தவிர்க்க வேண்டும். பெண்களும் அவ்வாறே. துப்பட்டாவுடன் கூடிய சூடிதார் மட்டுமே அணிய வேண்டும். துப்பட்டா இல்லாதவற்கு, ஆலயத்தின் வாயிலில் துப்பட்டா வழங்கப்படுகின்றது. இதனையும் கண்ணியமாக அணிவது எப்படி எனவும் ஓர் பலகை விளக்குகின்றது.

Wednesday, February 22, 2006

அரசு ஆவணம்-1846

1. சந்த்ரமா, பாங்க், டிளா பட்டியைக் கட்டக் கூடாது.
2. புடவை, ஸாடி, பந்தளம் இவைகளுக்குக் கூட முந்தாணிக்கு ஜாலர் தைக்கக் கூடாது.
3. குசூம்பா நாடா போடக் கூடாது.
4. நாடாவுக்கு துய்யா தைக்கக் கூடாது.
5. மக்தாபீ ரவிக்கை போட்டுக் கொள்ளக் கூடாது.
6. பூ ராக்கடிக்கு பஞ்ஜ்யாவையும் களைகளையும் போட்டுக் கொள்ளக் கூடாது.
7. க்ருஷ்ண கொண்டை, முத்துவின் கொத்தைப் போடக் கூடாது.
8. சடையின் நுனியில் தங்கத்தில் குஞ்சத்தைத் தவிர பட்டுக்குஞ்சலத்தைப் போடக் கூடாது.
9. புத்தியை வாங்கக் கூடாது.
10. துப்பட்டாவைப் புழங்கக் கூடாது.
11. தாண்டாவிற்கு எலுமிச்சம்பழம் போடக் கூடாது.
12. குங்குமம் நெற்றியின் குறுக்கே தடவிக் கொள்ளக் கூடாது.

ஜபாணி குப்பண்ணா ஜாதவ்.

அரசு ஆவணம்-1846

1846 ஆம் ஆண்டு அரசு வெளியிடப்பட்ட மேற்க்காணும் ஆவணம் ஒன்றில், தேவதாசிகள் எவ்விதம் நடக்க வேண்டுமென விளக்குகின்றது.

ஆதாரம்

மரபு தந்த மாணிக்கங்கள்
தஞ்சாவூர் பி.எம். சுந்தரம்
டாக்டர் வே.ராகவன் நிகழ் கலை மையம்
சென்னை - 20

படித்தால் சிரிப்பு வரவழைக்கும் இந்த ஆவணத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. குறைந்த பட்சம், இதில் உள்ள தமிழ்(?) வார்த்தைகளுக்காவது யாரேனும் பொருள் கூற முடியுமா?

ஹிந்தி தேசிய மொழியானது எப்படி?

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும் தமக்கென்று ஒரு தாய் மொழியைக் கொண்டுள்ளன. உதாரணமாக...

தமிழ் நாடு - தமிழ்
புதுச்சேரி - தமிழ்
கேரளம் - மலையாளம்
லட்சத் தீவுகள் - மலையாளம்
கர்னாடகா - கன்னடம்
ஆந்திரப் பிரதேசம் - தெலுங்கு
ஒரிஸ்ஸா - ஒரியா
மஹாராஷ்டிரம் - மராட்டி
குஜராத் - குஜராத்தி
தாத்ரா மற்றும் நாகர் ஹாவேலி - குஜராத்தி
டாமன் மற்றும் டையூ - குஜராத்தி
கோவா - கொங்கணி
பிகார் - மைதிலி
ஜார்க்கண்ட் - சந்தாலி
ஜம்மு மற்றும் காஷ்மீர் - உருது, காஷ்மீரி மற்றும் டோக்ரி
அஸ்ஸாம் - அஸ்ஸாமீஸ், போடோ
மேற்கு வங்கம் - பெங்காலி
திரிபுரா - பெங்காலி
மணிப்பூர் - மணிப்புரி
சிக்கிம் - நேபாலி
டார்ஜிலிங் - நேபாலி
அருணாசலப் பிரதேசம் - நேபாலி
பஞ்சாப் - பஞ்சாபி, டோக்ரி
ஹிமாச்சலப் பிரதேசம் - டோக்ரி
ராஜஸ்தானி - மார்வாரி

இந்த எல்லா மொழிகளையும் நாடு முழுவதற்கும் ஆட்சி மொழியாக்குவது என்பது இயலாத காரியம்தான். ஆனால், இவ்வளவு மொழிகள் இருக்க, ஹிந்தி ஆட்சி மொழியானது எப்படி என்று தெரிந்து கொள்ள ஆவல். (நான் அறிந்த வரையில், ஸம்ஸ்க்ருதமும், ஹிந்தியும் ஆட்சி மொழிக்குப் போட்டி போட, முன்னாள் குடியரசுத்தலைவர் ராஜேந்திரப் பிரசாத்தின் ஒரு ஓட்டு வித்தியாசத்தில்தான் ஹிந்தி ஆட்சி மொழியானதாக அறிகின்றேன்.) மேலும் விபரமறிந்தவர்கள் ஹிந்தி தேசிய மொழியான வரலாறு சொல்லவும்.

Tuesday, February 21, 2006

தூண்டுதல்

ஏறத்தாழ ஒன்பது ஆண்டுகள் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராகத் திறம்பட நிர்வகித்தவர் திரு.வி.ஆர்.தீனதயாளு. அவர் ஒருமுறை அமுதசுரபி பத்திரிகை ஆசிரியர் திரு.விக்கிரமன் அவர்களுடன் உரையாடும் போது, தனது ஆலையிலுள்ள எழுத்துச் சிற்பிகளின் எழுத்தோவியங்கள் கொண்ட ஒரு சிறப்பிதழ் வெளியிட வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். அவர் வேண்டுகோளுக்கிணங்க அவ்வாறே ஒரு சிறப்பிதழ் எங்களுக்கென ஒதுக்கப்பட்டது. எனது கதை ஒன்றும் அதில் பிரசுரமானது. வெளிவந்த காலம் - ஆகஸ்ட் 1990.








Saturday, February 18, 2006

தமிழ்த் தாத்தா உ.வே.சா

காவேரி வாய்ப்படவும், கறையான் வாய்ப்படவும், இருந்த கடைக்கழக நூல் ஏட்டுச் சுவடிகளை, ஊரூராகவும், தெருத்தெருவாகவும், வீடு வீடாகவும், திரிந்து தேடியும், விறகுத் தலையன்போல் தலையிற் சுமந்து கொணர்ந்தும், அல்லும் பகலும் கண்பார்வை ¦கெடக் கூர்ந்து நோக்கிப் படித்தும், அரிய ஆராய்ச்சிக் குறிப்புகளும், ஒப்புமைப் பகுதிகளும் வரைந்தும், ஆராய்ச்சியாளர்களுக்குப் பேருதவியாகவும், பிறர்க்குப் பெரும் பயன்படவும், வெளியிட்டவர் தென்கலைச் செல்வர் பெரும்பேராசிரியர், பண்டாரகர், உ.வே.சாமினாதயரே (1855-1942) என்று தமிழ்ப் பேராசிரியர் தேவநேயப் பாவாணர் எழுதி இருந்த போதும், "தமிழ்த் தாத்தா" என்ற பெயருக்கான காரணம் புரிபடவில்லை, அன்னாரின் தமிழ் பதிப்புப் பணிப் பட்டியலைப் பார்க்கும் வரை.




ஆண்டு வயது பதிப்பு
------ ----- ------
1878 23 வேணுவனலிங்க விலாசச் சிறப்பு (க.தொ)
1885 30 மத்தியார்ச்சுன மான்மியம் (உ)
1887 32 சீவக சிந்தாமணி
1889 34 பத்துப் பாட்டு
1892 37 சிலப்பதிகாரம்
1894 39 புறநானூறு
1895 40 புறப்பொருள் வெண்பாமாலை
1897 42 திருப்பெருந்துறைப் புராணம்
1998 43 மணிமேகலை
பௌத்த மும்மணிகள் (உ)
மணிமேகலைக் கதைச் சுருக்கம் (உ)
1999 44 மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.2)
1900 45 பௌத்த மும்மணிகள் (ப.2)
1901 46 மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.3)
1902 47 பௌத்த மும்மணிகள் (ப.3)
1903 48 ஐங்குறுநூறு
வீரவனப் புராணம்
சீகாழிக் கோவை
திருவாவடுதுறைக் கோவை
1904 49 பதிற்றுப் பத்து
சூரை மாநகர்ப் புராணம்
திருக்காளத்தி நாதருலா
திருப்பூவண நாதருலா
1905 50 திருவாரூர்த் தியாகராஜ லீலை
மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.4)
1906 51 திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம்
திருவிளையாடற் புராண பயங்கர மாலை
திருவுசாத்தான நான்மணி மாலை
கடம்புவன புராணம் (ஒரு பகுதியுடன்)
1907 52 சீவக சிந்தாமணி (ப.2)
தனியூர்ப் புராணம்
மண்ணிப் படிக்கரைப் புராணம்
தேவையுலா
1908 53 பௌத்த மும்மணிகள் (ப.4)
1909 54 மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.5)
1910 55 திருவாரூருலா
மகாவித்துவான் திரிசிபுரம் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளை
அவர்கள் பிரபந்தத் திரட்டு
1911 56 பௌத்த மும்மணிகள் (ப.5)
மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.6)
1912 57 திருக்காளத்திப் புராணம்
1913 58 திருக்காளத்திப் புராணம் (ப.2)
1914 59 திருத்தணிகை திருவிருத்தம்
1915 60 புறப்பொருள் வெண்பாமாலை (ப.2)
1917 62 மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.7)
1918 63 பத்துப் பாட்டு (ப.2)
பரிபாடல்
திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம்
நன்னூல் மயிலை நாதருரையுடன்
1919 64 திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் (ப.2)
1920 65 சிலப்பதிகாரம் (ப.2)
ஐங்குறுநூறு (ப.2)
பதிற்றுப்பத்து (ப.2)
பெருங்கதை
1921 66 மணிமேகலை (ப.2)
1922 67 சீவக சிந்தாமணி (ப.3)
1923 68 மணிமேகலைக் கதைச் சுருக்கம் (ப.8)
1924 69 புறநானூறு (ப.2)
1925 70 நன்னூல் சங்கர நமச்சிவாயர் உரையுடன்
1926 71 உதயணன் கதைச் சுருக்கம்
மகாவித்துவான் திரிசிபுரம் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளை
அவர்கள் பிரபந்தத் திரட்டு
1927 72 சிலப்பதிகாரம் (ப.3)
பூண்டி அரங்கநாத முதலியார் (உ)
1928 73 கமலை ஞானப் பிரகாசர் (உ)
1929 74 சங்கத் தமிழும் பிற்காலத் தமிழும் (உ)
பௌத்த மும்மணிகள் (ப.6)
1930 75 மதுரைச் சொக்கநாதர் தமிழ்விடு தூது
திரிமயிலை திரிபந்தாதி
தக்கயாகப் பரணி
கோபாலகிருஷ்ண பாரதியார் (உ)
1931 76 பத்துப் பாட்டு (ப.3)
மணிமேகலை (ப.3)
மதுரைச் சொக்கநாதருலா
ஆனத்தருத்ரேசர் வண்டு விடுதூது
1932 77 கடம்பர் கோயிலுலா
பத்மகிரிநாதர் தென்றல் விடுதூது
கொட்டையூர் ஸ்ரீசிவக் கொழுந்து தேசிகர் பிரபந்தங்கள்
மதுரை மும்மணிக்கோவை
பழனி இரட்டைமணி மாலை
பழனி பிள்ளைத் தமிழ்
1933 78 சங்கர நயினார் கோயில் சங்கரலிங்க உலா
திருக்கழுக்குன்றச் சிலேடை வெண்பா
மயிலை யமக அந்தாதி
பாசவதைப் பரணி
மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் -
சரித்திரம் (முதற்பாகம்) (உ)
1934 79 விளத்தொட்டிப் புராணம்
ஸ்ரீதியாராஜ செட்டியார் பிரபந்தங்கள்
சங்கர நயினார் கோயிலந்தாதி
வலிவுல மும்மணிக் கோவை
சத்யவாசகர் இரட்டை மணிமாலை
புறப்பொருள் வெண்பா மாலை (ப.4)
மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் -
சரித்திரம் (இரண்டாம்பாகம்) (உ)
1935 80 புறநானூறு (ப.3)
பரிபாடல் (ப.2)
பெருங்கதை (மூலம் குறிப்புரை மட்டும்)
ஆற்றூர்ப்புராணம்
திருஇலஞ்சி முருகனுரை
பழமலைக் கோவை
கலசைக் கோவை
உதயண குமார காவியம்
நன்னூல் சங்கர நமச்சிவாயம் உரையுடன் (ப.2)
1936 81 புறநானூறு (மூலம் அரும்பத உரையுடன்)
மண்விடு தூது
கோபால கிருஷ்ண பாரதியார் (உ)
மகாவைத்யநாதையர் (உ)
நான் கண்டதும் கேட்டதும்
பழையதும் புதியதும் (உ)
திருவள்ளுவரும் திருக்குறளும் (உ)
1937 82 குறுந்தொகை
சிராமலைக் கோவை
திருவாரூர்க் கோவை
தமிழ் நெறி விளக்கம்
நல்லூர்க் கோவை (முதற்பாகம்) (உ)
1938 83 திருக்கழுக்குன்றத்து உலா
அழகர் கிள்ளை விடு தூது
சிவசிவ வெண்பா
திருமலை ஆண்டவர் குறவஞ்சி
திருக்காளத்தி நாதர் இட்ட காம்ய மாலை
நல்லுரைக் கோவை (இரண்டாம் பாகம்) (உ)
1939 84 தணிகாசலப் புராணம்
புகையிலை விடுதூது
ஸ்ரீகுமர குருபர் சுவாமிகள் பிரபந்தங்கள்
திருப்பேரை மகர நெடுங் குழைக் காதர் பாமாலை
1940 85 வில்லைப் புராணம்
திருக்குற்றாலச் சிலேடை வெண்பா
நினைவு மஞ்சரி (உ)
1951 86 பதிற்றுப் பத்து (ப.3)
மணிமேகலை கதைச் சுருக்கம் (ப.10)
1952 87 வித்துவான் தியாகராஜச் செட்டியார் (உ)
நினைவு மஞ்சரி (இரண்டாம் பாகம்)
செவ்வைச் சூடுவார் பாகவதம் (பதிப்புப் பணி ஏற்பு மட்டும்)
சீவக சிந்தாமணி (ப.4)
ப - பதிப்பு
உ - உரை நடை நூல்

Friday, February 17, 2006

விடையவன் விடைகள்

1. "விடையவன் விடைகள்" என்ற தலைப்பில் கேள்விகளுக்குப் பதில்
சொல்லி வந்தார் தமிழறிஞர் ஒருவர்; அவர் யார்? அவருக்கு வந்த சில
கேள்விகளுக்கு உங்களுக்குப் பதில் தெரியுமா?;-

2. கொய்யாக் கனி என்ற பெயர் அக்கனிக்கு ஏன் எற்பட்டது?

3. அருணகிரி நாதர் முருகனை, "சூர்க்கொன்ற ராவுத்தனே" என்று
சொல்கிறார். ராவுத்தர் என்ற சொல்லுக்குப் பொருள் என்ன?

4. பேட்டி என்பது தமிழ்ச் சொல்லா?

5. சீதக்காதி என்ற முஸ்லிம் வள்ளலுக்கு அதுவே இயற்பெயரா?

6. செங்கல்வராயன் என்ற பெயர் எந்தக் கடவுளைக் குறிப்பது?

7. உம்மாச்சி என்று குழந்தைப் பேச்சில் கடவுளைக் குறிக்கிறார்கள். அது
எப்படி வந்தது?

8. தேவகுசுமம் என்பது என்ன?

9. சங்கம் என்பது தமிழ்ச் சொல்லா?

(மரத்தடியில் ஏற்கெனெவே நான் பிரசுரித்த மேற்காணும் கேள்விகளை எனது இந்தப் பதிவில் மீண்டும் பிரசுரம் செய்கின்றேன்)

இழிது இழிது ஈயெனெ இரத்தல் இழிது; அதனினும் இழிது.....

நியூயார்க் 'பென்' (Penn) ஸ்டேஷனில், ஆங்காங்கு அறிவிப்புப் பலகைகளில், "தட்டு ஏந்துபவர்களை ஊக்குவிக்காதீர்கள்; அவர்களைக் கவனித்துக் கொள்ள தொண்டு நிறுவனங்கள் உள்ளன" (Do not encourage pan-handlers; Charities are there to take care of them), என்று எழுதி வைக்கப்பட்டிருக்கும். இந்த அமெரிக்கவாசிகள், மாதா மாதம் ஒரு தொண்டு நிறுவனத்திற்கு, டாலர்களை நன்கொடையாகக் கொடுத்து விட்டுக் குற்ற உணர்ச்சியிலிருந்து தப்பித்து விடுகிறார்கள். ஆனால், நம்ம பாடு கஷ்டம்தான். அது போன்ற ஒழுங்குடன் உருப்படியாக அமைப்புகள் ஏதும் இருக்காது. எங்கு திரும்பினாலும், பிச்சைக்கார்கள் மயம்தான். கோவில் வாசலில் பிச்சை, ஹோட்டல் வாசலில் பிச்சை, டிராபிக் சிக்னலில் பிச்சை. அவர்களுக்குப் பிச்சை போடாவிட்டால், மனித நேயம் இல்லாத மனிதனா நீ என்று மனசாட்சி கேள்வி கேட்க ஆரம்பித்து விடும். போடுவது ஒரு ரூபாயோ, ஐம்பது பைசாவோ பிச்சை இட்டாலோ, பிச்சைக்காரர்களை ஊக்குவித்து ஒரு சோம்பேறிச் சமுதாயத்தை வளர்க்க நாமும் ஒரு காரணகர்த்தாவாக இருக்கிறோமோ என்ற ஒரு குற்ற உணர்ச்சி ஏற்படும்.

டிராபிக் சிக்னலில், பாதுகாப்பு விதிகளை மீறி, வண்டிகளுக்கு நடுவே பூந்து புறப்பட்டுப் பிச்சையெடுப்பவர்களைப் பார்த்தால் பற்றிக் கொண்டு வரும். ஒரு வாரக் கடைசியில் குடும்பத்துடன், ஹோட்டலுக்குச் சென்று ஒரு பிடி பிடித்துவிட்டு, வெளியே வந்தவுடன், உடனே ஹோட்டல் வாசலில், நாலைந்து கைகள் நீளும். இதில் எந்தக் கை உண்மையிலேயே தானம் பெறத் தகுதியான கை என்று உங்களுக்குத் தெரியாது. உண்மையாலுமே பசியால் வாடும் பார்ட்டியாக இருக்கலாம். அல்லது, உழைக்காமலே சோம்பேறித்தனமாகவே உட்கார்ந்து சாப்பிடப் பிறந்த ஜென்மமாகக்கூட இருக்கலாம். ஒவ்வொரும் முறையும், பிச்சை போடக் கூடாது என்று முடிவு செய்து, பின்னர், அவர்களின் பாவப்பட்ட முகங்களப் பார்த்தவுடன், பிச்சை போட்டு விடுவது வழக்கம்.

கமல் நடித்த 'பேசும் படம்' என்ற ஒரு படத்தில் ஒரு பிச்சைக்காரனது பாத்திரம் வரும். இறுதியில்தான் தெரியும், கோஷ்டி, படு வெயிட்டான பார்ட்டி ஒன்று என்று. இது போல, புகழ் பெற்ற கோவில்களின் வாசல்களில், பிச்சை எடுப்பதையே வாழ்நாள் முழுவதும், முழுநேரத் தொழிலாகக் கொண்டோர் பல பேரைப் பார்த்திருக்கின்றேன். இவர்களுக்கு ஒருக்காலமும் உதவி செய்வதில்லை என்று தீர்மானித்ததுண்டு. ஆனால் இதே கோவில் வாசல்களில், உண்மையிலேயே பரிதாபத்துக்குரிய சிலரைப் பார்க்கலாம். அவர்களுக்கு உதவி செய்யாமலிருக்க மனசு வராது.

பெரும்பாலான மதங்கள், தானம் கொடுப்பதை, (பிச்சை போடுவதை) ஊக்குவிக்கின்றன. ஆனால் அது, அந்தக் காலத்துக்கு ஏற்றதாக இருந்திருக்கலாம்.தற்காலத்தில் இது சரியா? தெரியவில்லை. பசியோடு வந்து பிச்சை கேட்கும் ஒரு சிறுவனிடம், "ஏண்டா, உழைத்துச் சம்பாதிக்க மாட்டேங்கிறாய்? நான் வேலை வாங்கித் தரட்டா?", என்று சில பேர் ப்ளேடு போட்டுக் கொண்டிருப்பார்கள். அதில் எனக்கு உடன்பாடு இல்லை.

"போடுவது ஐம்பது பைசாவோ அல்லது ஒரு ரூபாயோ. இதற்காகவென்று ஒரு பதிவு வேறு தேவையா?" என்று நீங்கள்கூடக் கேட்கலாம். பிரச்னை அதுவல்ல. பிச்சைக்காரர்களை ஊக்குவிக்கலாமா அல்லது கூடாதா என்பதுதான் இங்கு வாதம். உங்கள் கருத்து என்னெவென்று சொல்லுங்கள்.

Thursday, February 16, 2006

கச்சா எண்ணெய்க்கு ஒரு வாழ்த்து




(வலைப்பதிவு இல்லாத காலமாயிருந்தாத்தான் என்ன. வாய்ப்பு கிடைச்சா விடுவமா (கிறுக்க).)

கச்சா எண்ணெய் நாயகியே,
கறுப்புத் தங்கக் காதலியே,
மண்மகளின் பொன் மகளே,
மணலி ஆலையின் மருமகளே!
காலமெல்லாம் பொன்னாக
களிப்புடன் வாழி எந்நாளும்.

வளைகுடா நாடுகளில்
வனப்புடனே வளைய வந்தாய்
அரவிக்கடல் முதல் அஸ்ஸாம் வரை
அழகுடனே பவனி வந்தாய்- இன்றோ
எம்தமிழர் மகிழும் வண்ணம்
எழில் நதியாம்
காவேரிப் படுகைதன்னில்
களிப்புடனே விளைகின்றாய்!

சுத்திகரிப்பு ஆலைதன்னில்
பக்குவமாய் பல உருவம் பெறுகின்றாய்.
எந்தனை வடிவம் எடுத்தாலும்
அத்தனையும் அகிலமெங்கும்
அடைந்து நன்மை செய்வதற்கே!

சடுதியில் சமையல் செய்ய
அடுப்படியில் எரிகின்றாய்,
எல்பிஜி எனும் பெயரில்!

உரத் தொழிற்சாலை, உந்து வாகனம்
உனதருளின்றி
உண்மையிலே இயங்கிடுமோ,
விளக்கெரிக்கும் மண்ணெண்ணையாக
விமானம் ஓட்டும் ஜெட் எண்ணெயாக
சிந்தை மகிழும் வண்ணம்
விந்தைகள் செய்கின்றாய்.
வந்தனங்கள் செய்திடுவேன்
வாழ்த்துப்பா பாடிடுவேன்.
கச்சா எண்ணெய் நாயகியே,
களிப்புடன் வாழி எந்நாளும்.

(எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் பணி புரிந்த காலத்தில், house magazineக்கு எழுதியது.)

Monday, February 13, 2006

தலித் முன்னேற்றத்தில் தமிழக அந்தணர்கள்

தலித் முன்னேற்றத்தில் தமிழக அந்தணர்கள்

1. பி.எஸ்.கிருஷ்ஸ்வாமி ஐயங்கார்
2. மதுரை.ஏ.வைத்தியனாத ஐயர்
3. எல்.என்.கோபால்சாமி ஐயர்
4. னீதிபதி.வி.பாஷ்யம் ஐயங்கார்
5. கல்லிடைக்குறிச்சி பு.யக்ஞேஸ்வர சர்மா
6. கல்லிடைக்குறிச்சி சங்கர ஐயர்
7. கல்லிடைக்குறிச்சி லஷ்மி சங்கர ஐயர்
8. ஜி.மகாதேவன்
9. தேவகோட்டை எம்.ஜி.முகுந்தராஜ ஐயங்கார்
10. மானாமதுரை எஸ்.ராமஸ்வாமி ஐயர்
11. எஸ்.ராஜம் ஐயங்கார்
12. தேவகோட்டை ரங்கண்ணா
13. டாக்டர். ஆர்.காளமேகம் ஐயர்
14. மாயனூர்.கே.ஜி.சிவசாமி ஐயர்
16. ஜே.நடராஜ ஐயர்
17. பெரம்பலூர் நரசிம்ம ஐயங்கார்
18. அன்பில் ராஜகோபால ஐயங்கார்
19. டாக்டர். ராமச்சந்திர ஐயர்
20. டாக்டர்.பி.வி.முத்துகிருஷ்ண ஐயர்
21. டாக்டர் வி.வி.நாகநாத ஐயர்
22. தஞ்சை வி.பூவராக ஐயங்கார்
23. டாக்டர் எம்.கே.சாம்பசிவ ஐயர்
24. நாராயண ஐயர்
25. சின்னசேலம் கே.வெங்கடேச ஐயர்
26. டாக்டர் .பி.எஸ்.சீனிவாசன்
27. டாக்டர் .பி.எஸ்.ரகுராமன்
28. எஸ்.சோமசுந்தரம் ஐயர்
29. சேலம் வாஞ்சிநாத ஐயர்
30. திருச்செங்கோடு தியாகராஜ ஐயர்
31. நாமக்கல் ஏ.ரங்காச்சாரி
32. கோத்தகிரி ஜி.மகாதேவ ஐயர்
33. பி.என்.சங்கரநாராயண ஐயர்
34. கோபி ஸ்ரீகண்ட ஐயர்
35. கோபி வி.ராம ஐயங்கார்
36. மாயனூர் சாம்பசிவ ஐயர்
37. வை.சங்கரன்

புதிரோ புதிர்... விடைகள்

1. 1927-28களில் தொழிலதிபர்களான சேஷசாயி சகோதரர்கள் செய்த ஒர் காரியத்தால், தமிழகத்தின் பல வீடுகளில் ஒளி வீசத் துவங்கியது? அவர்கள் செய்த காரியம் என்ன?

- 1927ல் தேவகோட்டையில், ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் மின்சார சப்ளை கார்பொரேஷன் என்ற நிறுவனைத்தையும், 1928ல் திருச்சி ஸ்ரீரங்கம் மின்சார சப்ளை கார்பொரேஷன் என்ற நிறுவனைத்தையும்ஏற்படுத்தி மின்சார வினியோகம் செய்ய ஆரம்பித்தனர். தனியார் மின்சார வினியோகத்தில் அவர்களே முன்னோடிகள்.

2. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.எஸ்.ராதாக்கிருஷ்ணன் அவர்கள் பிறந்த ஊர் எது?

- திருத்தணி

3. பி.ஏ பட்டம் பெற்று, சட்டமும் சிறிது காலம் படித்து, 150 படங்களுக்கும் மேல் கதானாயகனாக நடித்த தமிழ் நடிகர் யார்?

- ஜெய்சங்கர்

4. 1968ஆம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மானாட்டுக்கு, அப்போதைய முதல்வர் அண்ணாதுரை அவர்களுக்கு உதவி செய்து மானாட்டை வெற்றிகரமாக முடிக்க உதவி செய்த திரைப்படப் பிரபலம் யார்?

- எஸ்.எஸ்.வாசன்

5. பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண ஸாஸ்திரியார்) அவர்கள் எத்தனை காலம் உயிர் வாழ்ந்தார்?

- 32 வருடங்கள்

6. தஞ்சையில் மருத்துவம் பயின்று, மலேசியாவில் அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர்.சிவசுவாமி, பின்னாளில் வேறு ஒரு பெயருடன் புகழ்பெற்றார். அவரது பின்னாள் பெயர் என்ன?

- ஸ்வாமி.சிவானந்தா

7. பட்டிமன்றம் போலவே, தமிழில் வழக்காடு மன்றம் என்ற ஒரு புது னிகழ்ச்சியினை கண்டு பிடித்து, அறிமுகப்படுத்தியவர் யார்?

- புலவர் கீரன்

8. தமிழின் தொன்மையான, தொல்காப்பியத்தினை, "பயப்படாதீர்கள்" என்ற தலைப்பில், ஒரு எளிய நூலாக எழுதியவர் யார்? அவருக்கு 'ஜோதி' என்ற புனை பெயரும் உண்டு.

- வாகீசகலானிதி. கி.வா.ஜகன்னாதன்

9. சுவாமி சித்பவானந்தர், எந்தப் பிரபல அரசியல்வாதியின் சிறிய தகப்பனார்? இந்தப் பிரபலம் ஒரு பாரத்ரத்னா கூட.

- முன்னாள் நிதியமைச்சர் பாரதரத்னா.சி.சுப்பிரமணியம்.

10. "மகாதேவ்லைட்" என்றால் என்ன? எங்குள்ளது?

- புவியியல் விஞ்ஞானி டாக்டர்.மகாதேவன் அவர்கள் ஆந்திரப் பிரதேசத்தில், நரசிம்மராவ் பேட்டை என்ற இடத்தில் கண்டு
பிடித்த ஒரு தாதுப் பொருள் (mineral finding).

11. பாரத்ரத்னா விருதினை முதன்முதலில் பெற்ற தமிழ்னாட்டைச் சேர்ந்தமூவர் யார் யார்?

- ராஜாஜி
- டாக்டர்.எஸ்.ராதாக்கிருஷ்ணன்
- டாக்டர்.சர்.சி.வி.ராமன்

12. வைஸ்ராய் இர்விங் பிரபு, 1927ஆம் ஆண்டு, கோவை மாகரிலுள்ள இந்த இடத்திற்குச் சென்ற போது, "இது போன்ற அதிசயத்தை னான் எங்கும் கண்டதில்லை" என்றார். அது எந்த இடம்?

- கலப்பினக் கரும்புப் புரட்சி செய்து வந்த கரும்பு இனப் பெருக்க ஆய்வு நிலையம்

13. விற்பனை வரி என்ற ஒரு வரியினை முதன்முதலில் அறிமுகப்படுத்தி, அரசாங்கத்தின் வருவாயினைக் கணிசமாக உயர்த்திய
முதலமச்சர் யார்?

- ராஜாஜி

14. ஜவுளிக்கடை, வேர்க்கடலைக் கடை, மோட்டார்க் கம்பெனி ஆகிய இடங்களில் வேலை, ஹோட்டலில் சர்வர் வேலை, ஆயுர்வேத மருத்துவரிடம் வேலை, குதிரைப் பந்தய சூதாட்டக் கிளப்பில் வேலை என்று பல்வேறு இடங்களிலும் சிற்சில காலங்கள் பணி புரிந்த புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர் யார்?

- பி.எஸ்.ராமையா

Saturday, February 11, 2006

புதிரோ புதிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்............

1. 1927-28களில் தொழிலதிபர்களான சேஷசாயி சகோதரர்கள் செய்த ஒர் காரியத்தால், தமிழகத்தின் பல வீடுகளில் ஒளி வீசத் துவங்கியது? அவர்கள் செய்த காரியம் என்ன?

2. முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர்.எஸ்.ராதாக்கிருஷ்ணன் அவர்கள் பிறந்த ஊர் எது?

3. பி.ஏ பட்டம் பெற்று, சட்டமும் சிறிது காலம் படித்து, 150 படங்களுக்கும் மேல் கதானாயகனாக நடித்த தமிழ் நடிகர் யார்?

4. 1968ஆம் ஆண்டு, சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழ் மானாட்டுக்கு, அப்போதைய முதல்வர் அண்ணாதுரை அவர்களுக்கு உதவி செய்து மானாட்டை வெற்றிகரமாக முடிக்க உதவி செய்த திரைப்படப் பிரபலம் யார்?

5. பரிதிமாற் கலைஞர் (சூரிய நாராயண ஸாஸ்திரியார்) அவர்கள் எத்தனை காலம் உயிர் வாழ்ந்தார்?

6. தஞ்சையில் மருத்துவம் பயின்று, மலேசியாவில் அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிந்த டாக்டர்.சிவசுவாமி, பின்னாளில் வேறு ஒரு பெயருடன் புகழ்பெற்றார். அவரது பின்னாள் பெயர் என்ன?

7. பட்டிமன்றம் போலவே, தமிழில் வழக்காடு மன்றம் என்ற ஒரு புது னிகழ்ச்சியினை கண்டு பிடித்து, அறிமுகப்படுத்தியவர் யார்?

8. தமிழின் தொன்மையான, தொல்காப்பியத்தினை, "பயப்படாதீர்கள்" என்ற தலைப்பில், ஒரு எளிய நூலாக எழுதியவர் யார்? அவருக்கு 'ஜோதி' என்ற புனை பெயரும் உண்டு.

9. சுவாமி சித்பவானந்தர், எந்தப் பிரபல அரசியல்வாதியின் சிறிய தகப்பனார்? இந்தப் பிரபலம் ஒரு பாரத்ரத்னா கூட.

10. "மகாதேவ்லைட்" என்றால் என்ன? எங்குள்ளது?

11. பாரத்ரத்னா விருதினை முதன்முதலில் பெற்ற தமிழ்னாட்டைச் சேர்ந்த மூவர் யார் யார்?

12. வைஸ்ரால் இர்விங் பிரபு, 1927ஆம் ஆண்டு, கோவை மாகரிலுள்ள இந்த இடத்திற்குச் சென்ற போது, "இது போன்ற அதிசயத்தை னான் எங்கும் கண்டதில்லை" என்றார். அது எந்த இடம்?

13. விற்பனை வரி என்ற ஒரு வரியினை முதன்முதலில் அறிமுகப்படுத்தி, அரசாங்கத்தின் வருவாயினைக் கணிசமாக உயர்த்திய முதலமச்சர் யார்?

14. ஜவுளிக்கடை, வேர்க்கடலைக் கடை, மோட்டார்க் கம்பெனி அகிய இடங்களில் வேலை, ஹோட்டலில் சர்வர் வேலை, ஆயுர்வேத மருத்துவரிடம் வேலை, குதிரைப் பந்தய சூதாட்டக் கிளப்பில் வேலை என்று பல்வேறு இடங்களிலும் சிற்சில காலங்கள் பணி புரிந்த புகழ் பெற்ற சிறுகதை எழுத்தாளர் யார்?

Wednesday, February 08, 2006

அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள் - புதிர்கள்

1. "அருந்தொண்டாற்றிய தமிழக அந்தணர்கள்" புத்தகத் தொகுப்பினைத் தலை மீது வைத்து நடந்த்து வந்த ஐந்து வயது அருண்குமாரின் அப்பா ஆச்சரியப்பட்டார். ஏன்?

2. உஷாஸ்ரீயும், தேவாவும் பஸ் ஸ்டாண்டில் தமது பெண் குழந்தைகளுடன் பஸ்ஸ¤க்காகக் காத்திருந்தனர். தேவாவையும், குழந்தைகளைªயும், 'மகளிர் மட்டும்' பஸ்ஸில் ஏற்றி விட்டு, அடுத்த பஸ்ஸில் தான் வருவதாகச் சொல்கிறார் உஷாஸ்ரீ. எப்படி?

3. 1988ல் ரகுராமையா கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியில், வெற்றி பெற்றிருந்த அணியில், தானும் இருந்தாக, வினோத் காம்ப்ளி சொன்ன போது, சச்சின் டெண்டுல்கர், விழுந்து விழுந்து சிரித்தார். ஏன்?

4. கார்ப்பொரேஷன் மைதானத்தில் கால்பந்து ஆடிக் கொண்டிருந்த்த, கோல் கீப்பர் கண்ணனுக்கு, பந்து தலையில் பட்டு, மண்டை உடைந்தது. எப்படி?

5. ராம் யாதவ் வளர்த்து வந்த ஒரு கருப்பு ஆடு, கிருஷ்ண யாதவ்வின் கருப்பு ஆட்டு மந்தைக்குள் நுழைந்து விட்டது. ஊனம் ஒன்றுமில்லாத தனது ஆட்டை, நொடியில் கண்டுபிடித்துக் கொண்டு வந்துவிட்டான் ராம் யாதவ். எப்படி?

Saturday, January 28, 2006

சுட்ட அப்பளம்

A47ல் வந்து அடையாறு ஸிக்னலில் இறங்கி பத்து நிமிடமாக நடந்து வந்து கொண்டிருக்கிறேன். இன்னமும் வீடு வந்து சேரவில்லை. மற்ற பஸ்களில் ஏறினால் வீட்டிற்குப் பக்கத்திலுள்ள நிறுத்தத்தில் இறங்கலாம். இருந்தாலும், குறைந்த இடங்களிலேயே இந்தப் பஸ் நிற்பதனால் அண்ணாநகரிலில் நான் வேலை செய்யும் வங்கியிலிருந்து வீட்டிற்கு அரை மணியில் வந்து சேர முடிகின்றது.

நான் குடியிருக்கும் நேருநகர் 3ஆம் தெரு முனையில் இருக்கும் காலி மனையினைத் தாண்டி வரும் போது இன்றும் அந்த வாசனை அடித்தது. வாசனை என்று சொல்லலாமா? இல்லை. நாற்றம் என்றே சொல்லலாமா? எதோ ஒன்று. அப்பளம் சுடும் போது வருமே, அதே வாசனைதான். இப்போதெல்லாம் வீட்டில் அப்பளம், வடாம் செய்வதேயில்ல. அண்ணாவுக்கு கொலஸ்ட்ரால் என்று சொல்லி எண்ணெய்ச் செலவையும் கட்டுப்படுத்திவிட்டோம். சின்ன வயதில் அம்மா அடிக்கடி அப்பளம் பொரிப்பாள். சுடுவாள். அப்போது கூட எதுவும் தோன்றியதில்லை.

ஆனால், ஒரு வாரம் முன்பு, இதே வழியாக, சந்துருவுடன் நடந்து வரும் போது அவன் சொன்னது இந்த வழியில் வரும் ஒவ்வொரு முறையும் நினவுக்கு வருகின்றது.

"இந்த இடத்தில் பாம்புகள் நிறைய உள்ளன. அதனால்தான் இந்த வாசனை" என்றான் சந்துரு.

"அப்படியா! நான் கேள்விப்பட்டதே இல்லை. அப்கோர்ஸ் நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் குவார்ட்டர்ஸ் பக்கம். அங்கேயெல்லாம் நாங்கள் பாம்பே பார்த்ததில்லை."

"நம்ம ஏரியாவிலே கூட இத்தனை நாளே இல்லை. இப்பத்தான் கொஞ்ச நாளா."

"சந்துரு, நாம யாராவது ஆட்களைக் கூட்டிக் கொண்டு வந்து இந்தப் புதரையெல்லாம் வெட்டிப் பாம்பை அடிச்சா என்ன?"

"நமக்கெதுக்கு இந்த வேலையெல்லாம். வேகன்ட் லான்ட் ஓனர், ட்ரெஸ் பாஸிங்னு சொல்லிக் கேஸ் போட்டுட்டான்னா; இரண்டாவது நாம வம்புக்குப் போகாத வரைக்கும் பாம்பு நம்மை ஒண்ணும் பண்ணாது. நாமளா வெணும்னே அதை அடிச்சா பாவம். அந்தப் பாவம் நம்மளோட போகாது. தலைமுறை, தலைமுறையா வருமாம்."

"இருந்தாலும் இந்தத் தெருவிலே எத்தனை குழந்தைங்க இங்கெல்லாம் வந்து விளையாடறாங்க. கொஞ்சம் கூட பாதுகாப்பே இல்லையே!"

"கல்யாண். எனக்குத் தெரிஞ்சு ஆறு மாசமா இங்கே பாம்புகள் இருக்கு. இத்தனை நாள் இல்லாம இன்னிக்கி ஒண்ணும் ஆகாது. சும்மா கண்டதுக்கெல்லாம் பயப்படாதே."

சந்துருவின் வார்த்தைகளால் தற்காலிகமாக சமாதானம் ஏற்பட்டாலும், ஒவ்வொரு முறை இந்தத் தெருவைக் கடக்கும் போதும், ஒவ்வொரு முறை இந்த வாசனை வரும் போதும் எனக்கு மனக்கலக்கம் ஏற்படும்.

இன்று ஏதெனும் செய்தே ஆக வேண்டும் என்று நினைத்தேன். பொதுவாகவே, தெருவிளக்கு எரியவில்லை என்றாலோ, சாக்கடை அடைத்துக் கொண்டு விட்டது என்றாலோ, புகார் கொடுக்கக் கூடிய முதல் பொது சேவகனாக எங்கள் தெருவில் இருந்து வந்தேன். இந்தப் பாம்பு விவகாரத்தில், யாரிடம் போய், என்ன புகார் கொடுப்பது என்று தெரியவில்லை. பாம்பைக் கொல்வது வேறு தலைமுறை பாவம் என்று சந்துரு சொன்னதும் நினவுக்கு வந்தது.

என்னதான் செய்வது என்று யோசித்துக் கொண்டே இருந்தேன். இறுதியாக ஒரு யோசனை தோன்றியது. பாம்புப் பண்ணைக்குத் தொடர்பு கொண்டால் என்ன. அவர்கள் ஆட்களை அனுப்பி பிடித்துச் செல்வார்கள் அல்லவா என்று தோன்றியது. நாளை ஆபீஸிலிருந்து போன் செய்து விட வேண்டும். அப்படியே அவர்கள் ஒத்துக் கொண்டாலும், வந்து பிடித்துச் செல்லும் வரை பாதுகாப்பாக இருக்க என்ன செய்வது?

"நாய்கள் ஜாக்கிரதை" என்ற போர்டுகள் பார்த்திருப்பீர்கள். அதைப் போல "பாம்புகள் ஜாக்கிரதை" என்று எழுதி வைத்தால் என்ன? என்று தோன்றியது. சனிக்கிழமை காலை ஓய்வாக இருக்கும் போது "பாம்புகள் ஜாக்கிரதை" என்று ஒரு பெரிய அட்டையில் எழுதி, அந்த மனைக்கு அருகே உள்ள விளக்குக் கம்பத்தில் மாட்டி விட வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.

வெள்ளிக் கிழமை மாலையின் சந்தடிகளை மீறி, அடையாறுக்குள் நுழைய மணி ஆறாகி விட்டது.

தெருவில் நுழையும்போதே மௌனமான பரபரப்பு ஒன்று தென்பட்டது. எதிரில் கணேசன் ஸ்கூட்டரில் வந்த்தார். என்னைப் பார்த்தவுடனே வேகத்தைக் குறைத்தார்.

"என்ன சார் கூட்டம்? ஏதாவது விசேஷம்?"

"அந்தக் கோரத்தை ஏன் சார் கேக்கறீங்க. நம்ம ப்ளாட்டுக்கு எதிரிலே இருக்கும் ஒர் சின்ன வீடு.

அங்கே புதுசா குடி வந்தாரே எலெட்ரிசிடி போர்டு ஏ.இ. அவரோட பொண்ணு தவறிடுச்சு"

"யாரு ரம்யாவா?"

"இல்ல சார். லதான்னுட்டு ஒரு சின்னக் குழந்தை. நாலு வயசிருக்கும். லதாக்குட்டின்னு சொல்வாங்களே. பாவம். மூணு மணிக்கு சைக்கிள் விளையாடிக்கிட்டே வந்துருக்கு போல இருக்கு. திடீர்னு ரோட்ல மய்க்கமா கிடக்கான்னனு பசங்க வந்து சொன்னாங்க. நம்ம செக்ரட்டரி, வாட்ச்மேன் எல்லோரும் ஒடிப் போய்ப் பார்த்தாங்க. அதுக்குள்ளே உடம்பு நீலமா மாறி, வாயிலே நுரை தள்ளிருச்சு. கட்டு விரியனோ. நல்ல பாம்போ தீண்டியிருக்கு போல இருக்கு. வி.எச்.எஸ்ஸ¤க்குத் தூக்கிட்டுப் போனாங்க. ஒண்ணும் பிரயோசனம் இல்லை. அப்படியே கே.கே.நகருக்குப் பாடியை அவங்க தாத்தா வீட்டுக்கு எடுத்திட்டுப் போயிட்டாங்க. விதி பாருங்க. எப்படி வருது."

"சரி வர்றேன் சார். பையனை ஸ்கூல்லேர்ந்து கூட்டிட்டு வரணும்"

நான் எதனைத் தடுக்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேனோ அது நடந்தே விட்டது.

அபார்ட்மென்டில் நுழைந்த்தவுடன் ஒவ்வொருவரும் சோகமாய் தங்கள் அனுதாபங்களையும், அனுபவங்களையும் பறிமாறிக் கொண்டார்கள். எங்கள் வீட்டிலும் ஒரே அமைதிதான். டி.வி கூட ய¡ரும் போடவில்லை. இதே எண்ணங்களே நினைவுக்கு வரும் என்பதால், ஒன்பது மணிக்கே சீக்கிரமாய்ச் சாப்பிட்டுவிட்டுப் படுக்கையை விரித்தோம்.

அஞ்சு நிமிஷம் கூட ஆகியிருக்காது. காலிங் பெல் அடித்தது. வியூ பைண்டரில் எட்டிப் பார்த்தேன். விஜியும், அத்திம்பேரும் தெரிந்த்தனர்.

கதவைத் திறந்து, "வாங்கோ அத்திம்பேர்", என்றேன். களைப்பாய் நுழைந்தனர் இருவரும்.

"மாப்ளை வாங்கோ! என்னடி திடீர்னு" என்றாள் அம்மா.

"இல்லம்மா. மஹாபலிபுரம் போயிட்டு வர்றோம். நேரமாய்டுத்து. இங்கே தங்கிட்டு, கார்த்தால ஆத்துக்கு வர்றோம்னு போன் பண்ணிட்டோம்."

படுக்கைகள் மூலையில் ஒதுக்கப்ட்டன. அத்திம்பேருக்கு ஈஸிசேரைப் போட்டுவிட்டு, வேஷ்டி எடுத்துத் தர உள்ளே சென்றேன்.

"சாம்பார் கொஞ்சமா இருக்கு; நிமிஷத்லே அதைப் பெருக்கிடறேன். உருளக் கிழங்குக்கறியும் ஒடனே பண்ணிடறேன்."

"சாம்பார் இது போதும்மா. கறிகிறியெல்லாம் ஒண்ணும் வேண்டாம். ஒரு நாலு அப்பளத்தச் சுட்டுப் போடு. எங்களுக்கு ஒண்ணும் அவ்வளாப் பசியில்லே." என்றாள் விஜி.

எங்கள் ப்ளாட்டில் பால்கனி பின்புறம். பால்கனிக்குச் சென்றாள் அம்மா. பக்கத்து வீட்டு சாந்தா மாமியிடம், பால்கனி வழியாகவே கிசுகிசுத்தார். பின்னர் புடவைத் தலைப்பில் என்னவோ மறைத்துக் கொண்டு சமையலறைக்குள் நுழைந்தார்.

என்னவாய் இருக்கும் என்று யோசித்துக் கொண்டே, அத்திம்பேரிடம் வேஷ்டியை நீட்டினேன்.

சில நிடங்களில் சமையலறையிலிருந்து, அப்பளம் சுடும் வாசனை வரத் தொடங்கியது.

-------000-------

- (சிமுலேஷன்)

Monday, January 23, 2006

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு.......

பத்துக்குள்ளே நம்பர் ஒண்ணு நெனைச்சிக்கோ..

ஓ.கே.

அந்த நம்பரை இரண்டாலே பெருக்கு.

உம்.

இப்போ வந்த விடையுடன் இரண்டைக் கூட்டு.

சரி.

இப்ப அஞ்சாலே பெருக்கு..

அப்புறம்.

வந்த விடையுடன் அஞ்சைக் கூட்டு.

பிறகு.

அதனை பத்தாலே பெருக்கு.

சரி.

வந்த விடையுடன் பத்தைக் கூட்டு.

அப்புறம்..

கடைசியா ஒரு விடை வந்ததல்லவா?

ஆமாம்.

அந்த விடையயும் மனசுக்குள்ளே வச்சுக்கோ. வர்றட்டா.. எல்லாம் சும்மா டைம் பாஸ¤க்குத்தான்.

Sunday, January 22, 2006

தமிழிசை

சுமார் பத்துப் பதினைந்து வயதிருக்குமென்று நினைக்கின்றேன். குடும்பத்துடன் பழனி சென்றிருந்தோம். இரவு நேரத்தில் சுவாமி தரிசனம். சுவாமியைப் பள்ளி கொண்டு செல்லும் நிகழ்ச்சி. அப்போது யாரோயொருவர் வந்து என் அப்பாவிடம்,."நீ£ங்களும் கலந்து கொள்ள வருகின்றீர்களா?" என்று கேட்டார். அவரும் சம்மதித்தார். குடும்பத்துடன் அனவரும் சுவாமியின் பின்னே உட்பிரகாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தோம். அப்போது ஒர் ஓதுவார் காம்போதியில் ஒர் விருத்தம் பாடினார் பாருங்கள். 'மடையில் வாழை பாய' என்று நினைக்கிறேன். அந்த இரவில் சுருதி சுத்தமாகவும், மொழி சுத்தமாகவும் காதில் வந்து விழுந்த காம்போதியை இன்னமும் மறக்க முடியவில்லை. அதுவே தமிழிசை பற்றிய எனது முதல் அனுபவம். அதன்பின் எத்தனையோ தமிழ்ப் பாடல்களைக் கேட்டிருக்கின்றேன். ஒவ்வொன்றும் ஒரு விதத்தில் கவர்ந்துள்ளன. மனதைக் கவர்ந்த தமிழிசையை பதிவு செய்யும் எண்ணத்திலேதான் இந்தக் கட்டுரை. தமிழிசை என்று நான் சொன்னலும், அது தமிழிசைக் கச்சேரியைப் பற்றியே பெருமளவு இருக்கும். நான் ஒர் இசைவாணன்(musician) அல்ல; ஒர் இசை பற்றிய விபரங்கள் (musicology) அறியும் ஓர் ஆர்வலன் மட்டுமே. அந்தக் கோணத்திலேயே இந்தக் கட்டுரையினை எழுதியுள்ளேன்.

தொல்காப்பியர், சீத்தலைச்சாத்தனார், இளங்கோவடிகள், காரைக்காலம்மையார், அப்பர், சுந்தரர், சம்பந்தர், மாணிக்கவாசகர், சேக்கிழார், அகத்தியர், திருமூலர் உள்ளிட்ட பதினெண் சித்தர்கள், பட்டினத்தார், ஆண்டாள் உள்ளிட்ட பனிரெண்டு ஆழ்வார்கள், அறுபத்து மூன்று நாயன்மார்கள், அருணகிரி நாதர், குமரகுருபரர், தாயுமானவர், முத்துதாண்டவர், மாரிமுத்தா பிள்ளை, அருணாசலக் கவிராயர், கவி குஞ்சர பாரதியார், கோபால கிருஷ்ண பாரதியார், மாயூரம் வேத நாயகம் பிள்ளை, அண்ணாமலை ரெட்டியார், இராமலிங்க அடிகளார், சுப்பிரமணிய பாரதியார், பாரதி தாசன், ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகள், இலட்சுமணப் பிள்ளை, பொன்னையா பிள்ளை, பாபனாசம் சிவன், தண்டபாணி தேசிகர், பெரியசாமித் தூரன் போன்ற எண்ணற்ற மாமனிதர்கள் தமிழிசைக்கு தங்கள் பங்கை ஆற்றியிருக்கிறார்கள். இருந்த போதும், வெகு காலத்திற்கு முந்தியவை என்பதாலும், மெட்டுப் போடாத காரணத்தாலும், போட்ட மெட்டைப் பரப்பப் போதிய சீடர்கள் இல்லாத காரணத்தாலும், ஏற்கெனவே சில பாடல்கள் மேடையிலே தமக்கென்று ஒர் இடத்தை பெற்றுவிட்ட காரணத்தாலும், மேலே குறிப்பிட்ட இந்த அருந்தமிழர்களின் பாடல்கள் அனைத்துமே, மேடைக் கச்சேரிகளிலே புகழ் பெறவில்லை.

"தமிழிசை பெரும்பாலும் தமிழ் தெரிந்தவர்களைக் கவர்கிறது; ஏன்?' என்று கேட்டால் விடை எளிது. மொழி புரிகின்றது. பொருள் புரிகின்றது. எனவே பாடலின் பொருளுடன் ஒன்றிப் பாடலை இரசிக்க முடிகின்றது. மொழி புரிகின்றது என்று சொன்னவுடனே, பாடல்களின் வரிகள் எளிமையானவையாக இருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்று புரிகின்றது அல்லவா? வரிகள் மட்டும் எளிமையாக இருந்தால் போதுமா? மெட்டும் மனதைக் கவர வேண்டுமல்லவா? இவையனைத்தும் கொண்டு தனது பாடல்களால், தமிழிசையுலகை ஆண்டவர்களில் பெரும்பங்கு வகித்தவர், தமிழ்த் தியாகைய்யர் என்றழைக்கப்பட்ட பாபனாசம் சிவன் அவர்கள்தான். அவரது பல்வேறு பாடல்கள் எல்லொரையும் கவர்ந்தவை. அவரது பெயர் பெற்ற சில பாடல்கள் வருமாறு:-

கருணாநிதியே தாயே - பௌளி
நம்பிக் கெட்டவர் எவரெய்யா - ஹிந்தோளம்
தேவி நீயே துணை - கீரவாணி
என்ன தவம் செய்தனை - காபி
பதுமநாபன் மருகா - நாகஸ்வராவளி
கா வா வா கந்தா வா வா - வராளி
நானொரு விளையாட்டு பொம்மையா - நவரஸகன்னடா
காபாலி, கருணை நிலவு பொழி - மோகனம்
கற்பகமே, கண் பாராய் - மத்யமாவதி

இதில் எனக்கு மிகவும் பிடித்த பாடல், மோகனத்தில் அமைந்துள்ள 'காபாலி, கருணை நிலவு பொழி' யாகும். இது வரை கேட்காதவர்கள் இதனைக் கேட்டுப் பார்க்க வேண்டும். சரணத்தில், சந்தத்துடன் மயிலைநாதன் பல்லக்கில் பவனி வரும் காட்சியை கண்முன்னே தத்ரூபமாகக் கொண்டு வந்து நிறுத்துகிறார் பாருங்கள். சொல்லழகிலும், பொருளழகிலும் சிறந்த பாடல் இது என்றால் மிகையாகாது. அடுத்தபடியாக, 'என்ன தவம் செய்தனை' என்ற பாடல். இந்தப் பாடலைக் கேட்ட யாராவது அந்தக் குட்டிக் கண்ணனை மனதில் கொண்டு வந்து நிறுத்திப் பாராமல் இருந்ததுண்டா?

ஊத்துக்காடு வெங்கட சுப்பையர் அவர்கள் தமிழ்ப்பாடல்கள் பல இயற்றி மக்கள் மனதைக் கவர்ந்தவர். கானடா இராகத்தில், 'அலை பாயுதே கண்ணா', சிம்மேந்திரமத்யமத்தில், 'அசைந்தாடும் மயிலொன்று காண' மற்றும் மத்யமாவதியில்,' ஆடாது அசங்காது வா கண்ணா' போன்ற பலரும் விரும்பும் பாடல்களை அவர் பாடியுள்ளார். இந்தப் பாடல்களில் எதனைக் கச்சேரியில் பாடினாலும், இரசிகர்கள் உற்சாகத்துடன் எழுந்து கேட்பது நிச்சயம்.

அடுத்தபடியாக மேடைக் கச்சேரிகளிலே புகழ் பெற்று மக்கள் மனதைக் கவர்ந்த பாடல்களென்றால் அவை பெரியசாமித்தூரன் அவர்களது பாடல்களாகும். ஸாவேரியில் 'முருகா, முருகா', ப்ருந்தாவன ஸாரங்காவில், 'கலியுக வரதன் கண்கண்ட தெய்வமாய்' ஆகிய பாடல்கள் புகழ் பெற்றவையாகும். கேட்கக் கேட்கத் திகட்டாதவையாகும். பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான, சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்தின் உடனுறை தேவியாம் திரிபுரசுந்தரி மேல் பாடப்பெற்ற, சுத்தஸாவேரியில் அமைந்த, 'தாயே திரிபுர சுந்தரி', பெரியசாமித்தூரன் அவர்களின் ஒரு அழகான பாடலாகும். இந்தப் பாடலை இந்த ஆலயத்திலேயே, யாரேனும் பாடக் கேட்பது என்பது ஒரு தனி மகிழ்ச்சியாகும்.

இராஜாஜியின் 'குறை ஒன்றுமில்லை; மறை மூர்த்தி கண்ணா', தற்காலத்தில் அனைவரும் விரும்பும் ஒரு பாடலாகும். ஆண்டவனை வேண்டும்போது, எதுவும் கேட்கத் தேவையில்லை; குறையொன்றுமில்லை என்று மனமுருக வேண்டினால் மட்டும் போதும் என்ற கருத்தே இங்கு அனவரையும் பெரிதும் கவர்கின்றது.

சேதுமாதவராவ் என்பார் 'சாந்தி நிலவ வேண்டும்" என்ற பாடலை இயற்றி, டி.கே.பட்டம்மாள் அவர்களை பாடுமாறு வேண்டிய போது, அவர்கள்தம் குரலிலே வந்த இந்தப் பாடலின் வெற்றிக்குக் காரணம் என்னெவென்று யாரேனும் யோசித்ததுண்டா? வார்த்தைகளின் எளிமையும், மெட்டின் கவர்ச்சியும், திலங் இராகத்தின் இனிமையும் சேர்ந்த ஒர் அரு¨மான சேர்க்கையே, வெற்றிக்குக் காரணம் என்று தோன்றுகின்றது.

நீங்கள் நினைக்கலாம். ஏன் புகழ் பெற்ற கவிஞர்களது பாடல்கள், இசைக் கச்சேரிகளிலே பிரபலம் அடையவில்லையென்று. ஏனென்றால் அவர்கள் கவிஞர்கள்; அவர்கள் எழுதியவை கவிதைகள் மட்டுமே. கவிதைகளுக்கும், பாடல்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து கொள்ள வேண்டும். கவிதைகளிலேயே எத்தனையோ வகைகள் உண்டு. பொருளை இரசிப்பதற்காக சில; உணர்ச்சியைத் தூண்ட சில; சந்தத்தை இரசிப்பதற்காக சில. எனவேதான், பாடலாக்கும் எண்ணத்தில் இயற்றப்படாத எந்தக் கவிதையையும் எளிதில் பாடலாக்க முடிவதில்லை.

பாடல்களில் பிரபலமானவை என்று எடுத்துக் கொண்டால் அவை பெரும்பாலும் வாக்கியேயக்காரக்கள் எனப்படும் 'பாடலும் எழுதி, அதனைப் பாடவும் தெரிந்த' பாடகர்கள் எழுதிய பாடல்கள்தான். ஏனென்றால் அவர்களுக்கு அந்தப் பாடலை எப்படிப் பாடினால் நன்றாக இருக்கும் என்றறிந்து அதற்குத் தக்கவாறு மெட்டமைத்திருப்பார்கள். ஆனால் கவிஞர்களுக்கோ அல்லது புலவர்களுக்கோ, இசை குறித்த அறிவு இல்லாமலிருந்திருப்பின், அதனைப் பாடல் எனப்படும் ஸாஹித்யமாக மாற்றத் தெரிந்திருக்காது. மற்றபடி இசை தெரிந்தவர்கள் அதற்கு மெட்டுப் போட்டுப் பிரபலப்படுத்துவது என்பது முடியும். ஆனால் கடின உழைப்பின் மூலம் நல்லதோர் மெட்டுப் போட்டு, புகழ் வாய்ந்த பிரபலம் மூலம் மக்களிடம் எடுத்துச் செல்வதன் மூலமே இது சாத்தியமாகக் கூடும். அவ்வாறு செய்யாமல், ஏன் இந்தக் கவிஞரது பாடலை (கவிதையை!) கச்சேரிகளில் பாடுவதில்லை என்று கேள்வி கேட்டுக் கொண்டேயிருப்பதால் பலன் ஏதும் கிட்டாது.

அரியக்குடி இராமானுஜையங்கார் அவர்களே, கச்சசேரி பத்ததி என்ற ஒன்றினை உருவாக்கியவர் என்பது சங்கீத விபரங்கள் தெரிந்த அனவரும் அறிந்தவொன்றே. பலரும் தனிப்பாடல்கள் போல பாடி வந்த காலத்தில், அவரே, முதலில் வர்ணம், பிறகு கிருதிகள், இறுதியில் தில்லானா போன்ற ஒர் ஒழுங்குடன் பாடினால் கேட்பவருக்கு இனிமையாக இருக்கும் என்று கண்டுபிடித்து கச்சேரி பத்ததி என்ற ஒன்றினை உருவாக்கியவர். எனவே, தமிழில் பாடினாலும், இந்த வரிசையில் பாடினால் மட்டுமே நன்றாக இருக்கும். இது ஒரு நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். கேட்க வருபர்களுக்கு 'வெரைட்டி' என்று சொல்லப்படும், ஒர் கலவை தேவை. இதனைச் சரியாகப் புரிந்து கொண்டு, சரியான கலவை கொடுப்பவர்களே வெற்றி பெருகிறார்கள். அது தமிழிசையாக இருந்தாலும் சரி; அல்லது வேறு எந்த இசையாக இருந்தாலும் சரி.

சரி. இறுதியாகத் தமிழிசை வளர வேண்டுமென்றால் செய்ய வேண்டியது என்னெவெண்று பார்க்கலாம்.

இசை நிகழ்ச்சி கேட்பவர்கள் செய்ய வேண்டியது:-
---------------------------------------------------------------
இசை (music) என்பது ஒர் கலை (art); கர்னாடக இசை மேடைக் கச்சேரி (concert) என்பது ஒர் நுண்கலை (fine-art). முதலாவதை எல்லோராலும் இரசிக்க முடியும். இரண்டாவதனை ஒரளவு விவரம் தெரிந்தவர்கள் மட்டுமே இரசிக்க முடியும். இசைக் கச்சேரிகளில் ஆலாபனை, ஸ்வரப்ரயோகங்கள், நிரவல் என்று பல்வேறு அம்சங்கள் உள்ளன். இவற்றையெல்லாம் இரசிக்க வேண்டுமென்றால், இரசிகர்கள் முதலில் தங்களது கேள்வி ஞானத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். இசையார்வமுள்ள எவருக்கும் இது முடியும். ஒவ்வொரு முறை கச்சேரிக்குப் போகும் போதும், அன்னியப்பட்டுப் போகாமல் புதியதாக ஒரு விஷயத்தைத் தெரிந்து கொண்டு வர வேண்டும்.

தமிழிசையை கேட்பதற்கு முன்பாக, எந்த மொழிப்பாடலாக இருந்தாலும், இரசிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும். கேள்வி ஞானம் எனப்படும் இரசனை அப்போதுதான் வளரும். தமிழில் பாடினாலும், 'எது ஸ¤ரமாக ஒலிக்கிறது' என்றும் 'எது அபஸ்வரமாக ஒலிக்கிறது' என்றும் காது கண்டு பிடிக்க, இந்தக் கேள்வி ஞானம் மிகவும் அவசியமாகும்.

தமிழிசையை இரசிக்க, தமிழின்பால் இருக்கும் பற்றினைவிட, இசையின்பால் இருக்கும் பற்று சற்றே அதிகமாக இருக்க வேண்டும்.

கேட்ட இசையினை, ஒத்த இரசனையுடைய நண்பர்களுடன் விவாதித்து குறிப்பிட்ட பாடலின் அழகை இரசிக்க வேண்டும். மேலும் பத்திரிகைகளிலும் வரும் சங்கீத விமர்சனங்களயும் படிக்க வேண்டும்.

தமிழிசை என்றாலும் தனக்கு எது தேவை என்று தெரிந்து அந்த சபை (forum) சென்று இரசிக்க வேண்டும். உதாரணமாக, திருப்புகழ் சபைதனிலே சென்று, கீர்த்தனைகள் தேடக் கூடாது. தேவாரம் ஓதப்படும் இடத்தில், பாசுரங்களை எதிர்பார்க்கக் கூடாது. பாடகர் அவர் கற்று வந்து கொடுக்கும் இசைக் கச்சேரிகளிலே, "ஏன் இந்தக் கவிஞரது பாடல் பாடப்படவில்லை?' என்று விவாதம் செய்யாமல், அவர்தம் இசையினை அலசக் கற்றுக் கொள்ள வேண்டும்.

பாடுபவர்கள் கவனிக்க வேண்டியது:-
----------------------------------------------
பாட்டு கற்றுக் கொள்ளும்போதே, ஆசிரியரிடம், தமிழ்ப் பாடல்களை விரும்பிக் கற்க வேண்டும். இல்லயெனில், ஒலி நாடாக்கள் துணை கொண்டு கற்றுக் கொள்ள வேண்டும்.

யாரும் வற்புறுத்தாமல் தானே வலிய வந்து, தமிழ்ப்பாடல்கள் பாட வேண்டும். இவ்வாறு பாடும்போது, தமிழ்நாட்டின் இரசிகர்களுக்கும் தங்களுக்குமுள்ள இடைவெளி பெரிதும் குறைந்து வரும் என்பதனை உணர வேண்டும்.

ஏற்கெனெவே கூறியபடி அனவரையும் கவரும்படியான மெட்டில், சொல்லழகும், பொருளழகும் கொண்ட எளிமையான பாடல்களைத் தேர்வு செய்து பாட வேண்டும்.

புதிதாக ஒரு புகழ் பெற்ற கவிஞரின் ஒரு பாடலுக்கு மெட்டுப் போட்டு அரங்கேற்றும் எண்ணம் இருந்தால், மெனக்கெட்டு உழைத்து அதனை வெற்றிப் பாடலாக்கும் முயற்சியில் இறங்கிய பின்னரே, அதனை மேடையேற்ற வேண்டும். அதனை விடுத்து அரை குறை முயற்சியுடன் இறங்கினால், அது அந்த புகழ் பெற்ற கவிஞரை அவமதிப்பது போலாகும்.

மொழி தெரிந்த தமிழ் இரசிகர்கள் முன்பு, தமிழிலே பாட இருப்பதனால், ஒரு முறைக்கு இரண்டு முறை, அட்சரங்களை சரி பார்த்து, சொல், பொருள் ஏதும் மாறிவிடாமல் பாட வேண்டும்

நிகழ்ச்சி அமைப்பாளர்கள் செய்ய வேண்டியது:-
--------------------------------------------------------------
நிகழ்ச்சி அமைப்பளர்களுக்கு தமிழ் பொழிப் பற்றிருந்தால் மட்டும் போதாது. இசையின்பால் உண்மையான ஆர்வமும், ஓரளவு இசையறிவும் தேவை. இசையறிவு இல்லாமல், ஆர்வம் மட்டும் இருக்கும் பட்சத்தில், இசை ஞானம் கொண்ட நண்பர்களைச் சேர்த்து கொள்ளலாம்.

பாடகர்களிடம், நிகழ்ச்சியில் குறைந்த பட்சம் இத்தனை தமிழ்ப்பாடல்கள் பாட வேண்டும் என்ற கோரிக்கை வைக்க, இவர்களே சரியான உந்து சக்தி. இவர்கள் கோரிக்கை வைக்கும் பட்சத்தில், பாடகர்கள் கண்டிப்பாக, தமிழ்ப்பாடல்கள் பாட முயற்சி செய்வார்கள். அப்போது, புதியதாய் தமிழ்ப் பாடல்களுக்கு இசையமைக்கும் முயற்சியும், அதன் தாக்கத்தால் இசைக் கச்சேரிகளிலே, தமிழ்ப் பாடல்களின் எண்ணிக்கை பெருகும் நிகழ்தகவும் (probability) அதிகமாகக் கூடும்.

பள்ளிகளிலே இசை ஒரு கட்டாயப் பாடமாக இல்லாத காரணத்தினால், தமிழிசைப் போட்டிகள் அடிக்கடி நடத்த வேண்டும். போட்டியில் வெற்றியாளருக்கு கொடுக்கப்படும் பரிசுகள் அவர்கள் ஆர்வத்தைத் தூண்டும் வகையிலே அமைய வேண்டும். மாவட்ட அளவினிலே கூடப் போட்டிகள் நடத்தலாம். இதில் பங்கு பெறுவது என்பதனை மாணாக்கர்கள் ஒரு கௌரவமாகக் கருதும்படி, அதற்கான உயர்வு நிகழ்சிகளில் (promotion programs) ஈடுபட, வர்த்தக நிறுவனங்களின் துணையை நாட வேண்டும். இப்படியெல்லாம் முழுமுனைப்புடன் ஈடுபட்டால், வருங்காலத் தலைமுறையினர், தமிழில் பாடுவதனைப் பெருமையாகக் கருதுவர்.

Wednesday, January 11, 2006

கிறுக்கல்-01

புது யுகம்
--------
கப்பல் காரின் கண்ணாடி இறக்கிக்
காரித் துப்பினான்.
காதில் 'ப்ளூ டூத்'

- சிமுலேஷன்

Monday, January 09, 2006

"திசைகள்" புத்தாண்டு இதழில் தமிழிசை

"திசைகள்" புத்தாண்டு இதழ், இசைச் சிறப்பிதழாக மலர்ந்துள்ளது. இதில் தமிழிசை பற்றிய எனது கட்டுரையும் பிரசுரமானது குறித்து, ஆசிரியர் குழுவினற்கு மகிழ்ச்சி கலந்த நன்றியினைச் சமர்ப்பிக்கின்றேன்.

http://thisaigal.com/

- சிமுலேஷன்.

Friday, December 30, 2005

இரட்டை வயலினில் இராகப் ப்ரவாகம்

இரட்டை வயலினில் இராகப் ப்ரவாகம்
-------------------------------------------------

எம்.ஜி.ஆர் அவர்கள் ஒர் சிறந்த இசை இரசிகர் என்பது அவர்தம் படப் பாடல்களினாலேயே விளங்கும். ஒரு முறை அவர் தூரதர்ஷனில் வயலின் இசைக் கச்சேரி ஒன்று கேட்டுவிட்டு, அந்த வயலின் கலைஞர்களுக்கு ஓர் பாராட்டுக் கடிதம் எழுதினார். சில நாட்களில் அவர்களை தமிழக அரசின் அரசவைக் கலைஞர்களாகவும் நியமனம் செய்தார். அப்புகழுக்குரியவர்கள் யாரென்றால், பிறவிக் கலஞர்களான (prodigy) கணேஷ், குமரேஷ் சகோதரர்ளாகும்.

னேற்றைய தினம், நாரத கான சபாவில், கணேஷ், குமரேஷ் இரட்டை வயலின் கச்சேரி சென்னை இரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியது. னாட்டை. கௌளை, ஆரபி, வராளி, ஸ்ரீராகம் அடங்கிய பஞ்சராக மாலிகா வர்ணத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. எக்ஸ்ப்ரஸ் வேகத்தில் துவங்கிய இந்த வர்ணத்தை இயற்றியவர் குமரேஷாம். இரண்டாவதாக சிந்துனாமக்ரியாவில் 'தே
வாதி தே சதாசிவா' என்ற பாடலும், அதனையடுத்து சுப்பராய ஸாஸ்திரியின் முகாரி இராகப் பாடலும் தொடர்ந்தது.

மூன்றாவது பாடலுக்குப் பிறகு, முப்பது பேர் கலையத் துவங்க, கணேஷ், Good night to all the friends who are leaving என்று சிரித்துக் கொண்டே சொன்னது இரசிக்கும்படி இருந்தது. அடுத்ததாக வந்தது 'இராஜராஜேஸ்வரி திரிபுர சுந்தரி' என்ற பூர்ணசந்த்திரிகா இராகப் பாடல்.

ஐந்தாவதாக இவர்கள் வாசித்தது ஒரு புதுமையான உருப்படியாகும். ஸாஹித்யம் ஏதுமின்றி, இராகம் மட்டுமே வாசித்தனர். எடுத்துக் கொண்ட இராகம் தர்மவதி. தாளம் கண்டசாபு. இதற்கு 'இராக ப்ரவாகம்' என்று பெயரிட்டிருந்தனர். தர்மவதியின் எல்லாப் பரிமாணங்களையும் எடுத்துக்காட்டும் வண்ணம் அமைந்திருந்திருந்தது இது. மிருதங்கமும், கடமும், கஞ்சிராவும் ஒ
வ்வொன்றாக, கை கோர்த்து வந்த அமைப்பு அமர்க்களமாக அமைந்திருந்தது. சபையில் நிலவிய பரிபூரண அமைதி, இரசிகர்கள் தர்மவதியில் ஒன்றிவிட்டார்கள் என்பதற்கு சாட்சியாய் இருந்தது.

பின்னர் வாகதீஸ்வரியில் பாடிய ஒர் பாடலுக்கு தனி ஆவர்த்தனம் கொடுக்கப்பட்டது. அடுத்தாக அகிலமும் அறிந்த, 'அகில¡ண்டேஸ்வரி ரட்சமாம்". ஜுஜாவந்தியில். ரேவதி, சிவரஞ்சனி, நாட்டை, வாஸந்தி, குந்தளவராளி அடங்கிய இராக மாலிகாவின் வித்தியாசமான பிடிப்புகள் கணேஷ், குமரேஷ் அவர்களுக்கே உரித்தானது.

கணேஷ் அவர்களிடம் ஒர் குணம். திடீரென்று வயலினை ஓரம் கட்டி விட்டு, பாட்டுப் பாட ஆரம்பித்து விடுவார். இரசிகர்களுக்கும் இது ஓர் எதிபாராத விருந்தாகவே அமைந்து விடுகின்றது. 'பள்ளி பள்ளி இராமா' என்ற பாடலை அவர் முழுமையாகப் பாடியதை சபை இரசிக்கவே செய்தது.

பெஹாக்கில் ஒரு அருமையான பாடல். அருமையான வாசிப்பு. நடனம் தெரிந்த எவரேனும் இருந்திருந்தால் அவர்கள் வாசித்த பெஹாக்கிற்கு நடனமாடத் துடித்திருப்பர்கள். சிந்து பைரவியில் ஒரு வித்தியாசமான வாசிப்புடன் வாசித்து, நிகழ்ச்சியை நிறைவு செய்தனர் கணேஷ்,குமரேஷ் சகோதரர்கள்.

இரவு ஒன்பது மணி முப்பது நிமிடங்களுக்கு முடிந்த இரட்டை வயலின் நிகழ்ச்சியில், இளைஞர்கள் பலர் இறுதி வரை இருந்து இரசித்தது ஓர் ஆரோக்கியமான விஷயம்.

நடு இரவில் இசை - புத்தாண்டை வரவேற்க

கர்னாடிகா.காம் மற்றும் ம்யூசிக் அகாடெயின் ஆதரவில் இன்று இசை நிகழ்ச்சிகளுடன், புத்தாண்டு வரவேற்கப்படவிருக்கின்றது.
குழு இசையும், ஒலி, ஒளிக் காட்சிகளும், வினாடி வினா போன்ற நிகழ்ச்சிகளும் இடல் பெறும் இந்த இசை நிகழ்ச்சியில், கிட்டத்தட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட பிரபலங்கள் பங்கேற்பதாகக் தெரிகின்றது.

இடம்: சென்னை ம்யூசிக் அக்கடெமி
னேரம்: 11 pm. - 1 am
மேலதிக விபரங்களுக்கு: 42124130 / 98400 15013

இது ஒரு ALL AR WELCOME நிகழ்ச்சி

Tuesday, December 27, 2005

கர்னாடக இசைக் கலைஞர்களை வைத்து ஒரு ஆர்கெஸ்ட்ரா

கர்னாடக இசைக் கலைஞர்களை வைத்து ஒரு ஆர்கெஸ்ட்ரா யாராவது செய்தால் எப்படி இருக்கும் அன்று அடிக்கடி எண்ணிக் கொள்வேன். வெற்றிகரமாகவும், புதுமையாகவும், ஏதேனும் செய்து வரும் முத்ரா பாஸ்கர் உபயத்தால் நேற்று அந்த ஆசை நிறைவேறியது. நேற்று வள்ளுவர் கோட்டம் அருகேயுள்ள ப்ரீடம் ஹாலில் நடைபெற்ற இந்த கர்னாடிக் ஜுகல் பந்தி நிகஷ்ச்சியில், குழல், கீ போர்ட், சிதார், தபலா உதவியுடன் 8 பாடகர்கள் திரு.எல்.கிருஷணன் இசை அமைத்த 24 பாடல்களை பாடினர். உங்களில் பலருக்கும் தெரிந்த பாடல்கள்தான். பாடல்களின் விபரமும், பாடியவர்கள் பெயரும் தருகின்றேன்.

1. பச்சை மாமலை போல் மேனி - பூபாளம் - சாருலதா மணி
2. ஜகஜ்ஜனனி சுகவாணி கல்யாணி - ரதி பதிப்ரியா - தர்ஷினி
3. கண்ணா வா - மதுவந்தி - டாக்டர்.ராதா பாஸ்கர்
4. ஆறுமுகம் (திருப்புகழ்) - folk tune - ஸ்ரீகாந்த்
5. ஸ்திரதா நஹி நஹி - சாருகேசி - சைந்தவி
6. தந்¨தை தாய் - ஷண்முகப் ப்ரியா - கீதா ராஜா
7. அமைதியில் - பௌளி - சுபிக்ஷா
8. வந்தேஹம் - யமன் கல்யாணி - டாக்டர்.கணேஷ்
9. வானத்தின் மீது மயிலாடக் கண்டேன் - மாண்டு - சாருலதா மணி
10. திக்கெட்டும் - ராகேஸ்ரீ - தர்ஷினி
11. ஸர்வம் ப்ரம்ஹ மயம் - பஸந்த் பஹார் - டாக்டர்.ராதா பாஸ்கர்
12. விட்டு விடுதலை - கீரவாணி - ஸ்ரீகாந்த்
13. ராமநாம - சாலக பைரவி - சுபிக்ஷா
14. கனிகள் கொண்டு வரும் - மத்யமாவதி - சைந்தவி
15. நாதவிந்து கலாதி - நாத நாமகிரியா - கீதா ராஜா
16. துன்பம் நேர்கையில் - தேஷ் - டாக்டர்.கணேஷ்
17. எத்தனை இன்பங்கள் - தர்ஷினி
18. கூவி அழைத்தால் - வலஜி - டாக்டர்.ராதா பாஸ்கர்
19. ரகுவர தும்கோ - காபி - ஸ்ரீகாந்த்
20. கேலதி மம ஹ்ருதயே - சைந்தவி
21. கலியுக வரதன் - ப்ருந்தாவன் சாரங்கா - கீதா ராஜா
22. சந்தன சர்ச்சித - பஹாடி - சுபிக்ஷா
23. போ சம்போ - ரேவதி - டாக்டர்.கணேஷ்
24. சாந்தி நிலவ வேண்டும் - திலங் - கோரஸ்

எல்.கிருஷணன் அவர்களை உன்னிக் கிருஷ்ணண் மோதிரம் அணிவித்துக் கௌரவித்தார். விழாவிற்கு வந்த மற்ற முக்கியமானவர்கள் பின்னணிப் பாடகர்கள் பி.பி.ஸ்ரீனிவாஸ் மற்றும் ராஜ்குமார் பாரதி.

வழக்கம் போலவே டாக்டர்.ராதா பாஸ்கர் அவர்களும், முத்ரா பாஸ்கர் அவர்களும், நிறைவான ஒர் நிகழ்ச்சி வழங்கி, பார்வையாளர்களப் பரவசப்படுத்தினர். மதுசூதனன் தபேலாவில் பூந்து விளையாடி விட்டார். ராமானுஜம் புல்லாங்குழலில் கானடா மற்றும் ப்ருந்தாவன சாரங்காவில் கலக்கினார். கீ போர்ட் சத்யா ஒரிரு பாடல்களுக்கு மட்டுமே முழுமையாக வாசித்தாலும், கூட்டத்தின் கவனத்தைத் தன் பக்கம் ஈர்த்தார். ஆண்களில் டாக்டர்.கணேஷ¤க்கும் பெண்களில் சைந்தவிக்கும் மானசீகமாக முதல் பரிசைத் தாராளமாகத் தந்தோம். சம்பிரதாயக் கச்சேரி அல்ல என்றாலும், எல்லாத் தரப்பினரையும் கவர்ந்தது னிகழ்ச்சி.

சங்கீத நிகழ்ச்சிகளில் பாரம்பரியம் கெடாமல் புதுமை புகுத்தி வரும், முத்ரா தம்பதியினருக்கு, 'சங்கீத நவீன கலா போஷகா' போன்ற விருதுகள் யாரேனும் தந்தால் ஆச்சரியப்படத் தேவையில்லை

- சிமுலேஷன்

Sunday, December 25, 2005

பாமரனுக்கும் இசை சேர வேண்டுமா?

புரிந்து கொள்வது என்பது வேறு. இரசிப்பது என்பது வேறு. புரிந்து கொண்டால் மேலும் இரசிக்க முடியும் என்பதும் உண்மை.

"கர்னாடக இசை எனக்குப் புரியவே மாட்டேன் என்கிறது. ஏன் பாமரனை அடையும் படியாக பாட யாரும் பாட முயற்சி செய்ய மாட்டேன் என்கிறார்கள்" என்று பலரும் அடிக்கடி கூறுகிறார்கள்.

எதற்காக இந்த உயர்ந்த கலை மட்டும் பாமரனைச் சென்றடைய வேண்டும், அந்தப் பாமரன் தனது அறிவையும், இரசனைத்தன்மையயும் உயர்த்திக் கொள்ள மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கும் பட்சத்தில்.

னேர் நேர் தேமா; நிரை நேர் புளிமா; நேர் நிரை கூவிளம்; நிரை நி¨ரி கரு விளம் என்றெல்லாம் அலகிட்டு வாய்பாடு கூறி, குறட்பாக்களையும், வெண்பாக்களயும் இரசித்துக் கொண்டிருக்கும் புலவர்கள் கூட்டத்திலும், அவர்தம் பாக்களை இரசிக்கும் மக்களிடமும் சென்று, யாராவது, "தலிவா; "செல் அடிச்சா ரிங்கு; சிவாஜி அடிச்சா சங்கு'ன்னு புரியராமாறி சொல்லு; நேர் நேர் தேமா அப்படீ இப்படீன்ன்னு சொல்லிக் கிட்டேயிருந்தா, இந்த எலக்கியமெல்லம் அழிஞ்சிடும்" என்று சொன்னால் அவர்கள் என்ன சொல்லுவார்கள்.

மௌனியிடமோ, சு.ராவிடமோ, ஆதவனிடமோ சென்று, நீங்கள் எழுதுவது எனக்கு ஒன்றும் புரியவில்லை. பாமரனைச் சென்று அடையுமாறு, ராஜேஷ் குமார் போலவோ, பட்டுக் கோட்டை பிரபாகர் (no offence meant; they are for a diffrent audience) போலவோ ஏன் எழுத மாட்டேன் என்கிறீர்கள் என்று சொன்னால் அவர்கள் என்ன சொல்லக்கூடும்.

பரதத்திலும் கூடப் புதுமையாக என்று செய்தாலும், ஒரு சில கருத்துக்கள்தானே செய்ய முடியும். என்னுடையது மிகவும் புதுமையானது மற்றும் இளஞர்களுக்கானது என்று கூறி, ISO 9000, CMM LEVEL-5, BIO-DIESEL என்ற தலைப்புகளில் ஆட ஆரம்பித்தால் எப்படி இருக்கும்?

மாற்றங்கள் தேவைதான்; ஆனால் ஒரு எல்லைக் கோட்டுக்குள்ளேயே ஆட்டத்தை மாற்றி விளையாட முடியும். இவ்வாறும் புதுமைகள் செய்தவர்கள் பலர் உண்டு. உதாரணாம் வருமாறு:-

டி.வி.கோபாலகிருஷ்ணன அவர்கள் ஒரே கச்சேரியில் முதல் பாதியில் கர்னாடிக் கச்சேரியும், இடை வேளைக்குப் பிறகு ஹிந்துஸ்தானியும் செய்வார். இதில் இன்னுமோர் விஷெசமென்றால், முதல் பாதியில் சட்டை, வேஷ்டியுடன் வரும் அவர் அடுத்த பாதியில், பைஜாமா குர்தாவுடன் வருவார்.

சமீபத்தில் ஒரு வீணைக்கலஞர் சொன்னார். "புதுமையாக ஏதாவது பண்ணுங்கள்; புதுமையாக ஏதாவது பண்ணுங்கள்" என்று நச்செரிக்கிறார்கள். "வீணையைத் தலை கீழாக வேண்டுமென்றால் பிடித்துக் கொண்டு வாசிக்கலாமோ என்னவோ" என்றார். அவர் ஏற்கெனவே வீணையில் திரைப் பாடல்கள் வாசித்து வருபவர்தான். அதற்காக, கர்னாடக இசையில் அதை எதிர்பார்க்க முடியுமா? உன்னி, பாம்பே ஜெயஸ்ரீ, ஜேஸ¤தாஸ் போன்றோர் சினிமாவில் பாடுபவர்கள்தான். அதற்காக, கர்னாடக இசையில் சினிமாப் பாடலை எதிர்பார்க்க முடியுமா?

எனக்கு ஒரு கலை புரிவதில்லை என்று சொல்லுவது கலையின் குற்றமா? கலஞனின் குற்றமா? இரசிகனின் குற்றமா? "எனக்குப் புரியவில்லை; ஆகவே விடுகின்றேன் சாபம் ; உங்கள் கலை அழிந்து விடும்" என்பது னியாமா?

-சிமுலேஷன்

Saturday, December 24, 2005

கர்னாடக இசையில் தமிழ்த் திரைப் பாடல்கள்

கர்னாடக இசையில் தமிழ்த் திரைப் பாடல்கள்

தமிழ்த் திரைப் பாடல்களில் கர்னாடக இசை இராகங்கள் என்ற கருத்தைக் கொண்டு,
'ராகசிந்தாமணி" என்ற தலைப்பில் நான் வெளியிட்டிருந்த புத்தகம் குறித்து, திரு.சுஜாதா அவர்கள், இந்த வார ஆனந்த விகடனில் 'கற்றதும் பெற்றதும்" கட்டுரையில் குறிப்பிட்டது அறிந்து வாழ்த்திய நண்பர்களுக்கு நன்றி.

தமிழ்த் திரைப் பாடல்களில் கர்னாடக இசை ஒரு புறமிருக்க, கர்னாடக இசையில் தமிழ்த் திரைப் பாடல்கள் பற்றிப் பார்ப்போம்.

கர்னாடக இசையில், பாரதி பாடல்கள், பாரதிதாசன் பாடல்கள், சிலப்பதிகாரப் பாடல்கள் அதிகம்
பாடப்பட வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர். ஆனால், டி.கே.தியாகராஜ பாகவதர்,
பி.யூ.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள் பாடல்கள் பாடினால் எப்படி இருக்கும்? நன்றாகவே
இருந்தது. நேற்றைய தினம், ஸ்ரீ பார்த்தசாரதி சபா ஆதரவில் நடை பெற்ற, திரு.சூர்யபிரகாஷ்
(ரிசரிவ் வங்கியில் வேலை) அவர்கள் தனது நிகழிச்சியில், ஒரு மணி நேரம் வழக்கமான
பாரம்பரியக் கச்சேரி நிகழ்த்தி விட்டு, அடுத்த ஒன்றரை மணி நேரம் 40-50களில் வெளிவந்த
பழம்பெரும் திரைப்பாடல்களைப் பாடி அசத்தினார்.

திருனீலகண்டர் படத்தில் இடம் பெற்ற, "ஒரு நாள் ஒரு பொழுதாகினும்" என்ற கமாஸ் இராகப்
பாடலுடன் இந்தப் பகுதியைத் துவங்கினார். அடுத்தாக, அஷோக் குமார் படத்திலிருந்து,
ஜோன்புரி இராகத்தில், "ஞானக்கண் ஒன்று" என்ற பாடல். ப்ருகாக்கள் அமர்க்களம். பின்னர்,
ஸ்ரீரஞ்சனி இராகத்தில், நத்தனார் படல் பாடலான, "வீணில் உலகைச் சுற்றி". அதன்பின்,
அனைவரும் அறிந்த, "தீன கருணாகரனே நடராஜா". கூட்டத்தினர் தன்னை மறந்து இரசித்தனர்.

அடுத்ததாக, "கோடையிலே இளைப்பாறி" என்ற ஓர் அருமயான விருத்தம். பி.யூ.சின்னப்பா
பாடல் என்று நினைக்கின்றேன். உச்சஸ்தாயியில் பாடத் துவங்க, கேன்டீன் ஊழியர்கள் உட்பட,
அனவரும் அரங்கில் குவிந்து, ஆவென்று வாய் பிளந்து இரசித்தனர். "பாற்கடல் அலை மேலே,
பாம்பணை மேலெ" என்ற இராக மாலிகையும் நன்றாகவே இருந்தது. ஆனால், சற்றே பெரிய
பாடல். சிவகவியின் புகழ்பெற்ற, "அம்பா மனம் கனிந்து" இரசிகர்கள் மனதைக் கவர்ந்த்தில் ஐயம் இல்லை. மீண்டும் ஒரு ஜோன்புரி, அஷோக் குமாரிலிருந்து, "சத்வ குண போதன்". அருமையான பாடல் என்பதனால், அதே இராகம் மீண்டும் இடல் பெற்றதில் தவறில்லை என்று
நினைத்திருந்திருப்பார்.

மொத்ததில் நிகழ்ச்சி புதுமையாகவும், இனிமையாகவும் இருந்தது. ஆனால் சூர்யப் பிரகாஷே
குறிப்பிட்டபடி, அளவுக்கு மீறினால், பாரம்பரிய இரசிகர்கள், அமிர்தமும் நஞ்சே என்பார்கள்.


- சிமுலேஷன்

Friday, December 09, 2005

புயலுக்குப் என்ன பெயர்?

புயலுக்குப் என்ன பெயர்?

மேற்கத்திய நாடுகளின் மரபை ஒட்டி, நாமும் புயலுக்குப் பெயர் வைக்க ஆரம்பித்துவிட்டோம். ஆனால் பெயரில் என்ன? (What is in a name?) என்று அசட்டையாக இருந்து விடக் கூடாது. பாஜ் என்றும் பனூஸ் என்றும் யோசனையின்றிப் பெயர் வைப்பது ஆபத்தையே விளைவிக்கும். fanoos என்பதன் கூட்டுத் தொகை 6 ஆகும். இதனால் அதிக சேதங்கள் ஏற்படல்லாம். அதற்குப் பதிலாக fanoosh என்று ஒரு h சேர்த்துக் கொண்டால் சேதங்கள் குறைய வாய்ப்புண்டு.

அமெரிக்காவில் ரீட்டா என்ற புயல்லால் ஏற்பட்ட சேதங்கள் ஏராளம். காரணம் புயலுக்கு மட்டும் ர, ரா, ரி, ரீ என்று ரன்னகரத்தில் துவங்குமாறு பெயர் வைக்கவே கூடாது. அடித்த முறை புயலுக்குப் பெயர் வைக்கும் போது அடியேனிடம் ஒரு யோசனை கேட்டுவிட்டு வையுங்கள்.

Sunday, November 27, 2005

தமிழ்த் திரைப்படப் பாடல்களில் இராகங்கள்

சங்கீத சீசன் துவங்கி விட்டது. தமிழ்த் திரைப்படப் பாடல்கள் மூலம் கர்னாடக இசையின் இராகங்களை எப்படி இரசிப்பது என்ற எண்ணத்தில் "ராகசிந்தாமணி" என்ற தலைப்பில் (ஆங்கிலத்தில்) ஒர் புத்தகம் பதிப்பித்துள்ளேன். இதில் 1800 பாடல்கள் 160 இராகஙளில் வகைபடுத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு இராகதிற்கும், ஆரோகணம், அவரோகணமும் மற்றும் பல சுவையான விஷயஙளும் கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், ஒவ்வொரு பக்கத்திலும் குவிஜ் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது.

மேற்படி புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்ற 20ம் தேதி ஞாயிறு காலை பத்து மணியளவில் சென்னை, மயிலாப்பூரிலுள்ள பாரதீய வித்யா பவன் மினி அரங்கில் நடை பெற்றது. புத்தகத்தை வெளியிட்டவர்: வீணைக்கலைஞர். கலைமாமணி.திருமதி.ரேவதி கிருஷ்ணா அவர்கள். முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டவர். சன் தொலக்காட்சி செய்திகள்/சப்தஸ்வரங்கள் நிகழ்ச்சி நடத்தும் திரு.டி.எஸ்.ரங்கனாதன் அவர்கள்.

மேலதிக விபரங்களளுக்கு http://www.geocities.com/ragachintamani/ என்ற சுட்டியைச் சொடுக்கவும்.

மேற்கண்ட புத்தகம் கீழ்க்காணும் இடங்களில் கிடைக்கும்.

www.giritrading.com
www.kutcheribuzz.com
www.tkmbc.org
www.anyindian.com
www.sapthaswara.com
www.shanthitailors.com

Tuesday, November 01, 2005

கிழவரும், சிறுவனும், கழுதையும்

'முயலும் ஆமையும்' கதை படித்ததின் பாதிப்பு:

ஒரு கிழவர் தனது பேரனுடனும், தனது கழுதை ஒன்றுடனும் ஒர் கிராமத்தின் வழியே சென்று கொண்டிருந்தார்.

வழியிலே இவர்களைப் பார்த்த சிலர், "இந்தச் சிறுவனை வெயிலிலே நடத்திக் கூட்டி கொண்டு செல்கிறார் பார், இந்தப் பெரியவர்". என்று சொன்னார்கள்.

பேரன் கழுதை மீது அமர்ந்து கொண்டு செல்லலானான்.

வழியிலே இவர்களைப் பார்த்த சிலர், "வயதான மனிதரை நடக்க விட்டு, சிறுவன் சவாரி செய்து கொண்டு செல்கின்றானே", என்று சொன்னார்கள்.

உடனே, சிறுவன் கீழிறங்கித் தாத்தாவை, கழுதை மீது அமர வைத்தான்.

சிறிது நேரம் சென்றது.

இவர்களையே பார்த்துக் கொண்டிருந்த நபர் ஒருவர், "இரண்டு பேரும், கழுதை மீது ஏறிச் செல்லலாமே. எதற்குக் கஷ்டப்படுகிறீர்கள்?, என்றார்.

உடனே, இருவரும் கழுதை மீது பயணிக்கத் துவங்கினர்.

சிறிது நேரம் கூட ஆகியிருக்காது. ஜீவ காருண்யம் மிக்க நபர் ஒருவர், இவர்களைப் பார்த்து, "இந்த
அனியாயத்தை கேட்பார் இல்லையா? ஒரு வாயற்ற ஜீவனை இப்படித் துன்புறுத்தலாமா?", என்று புலம்பினார்.

கிழவரும், சிறுவனும், உடனே பதறிப் போய் கழுதையை விட்டுக் கீழே இறங்கினார்கள்; புதியதோர் யோசனை செய்தார்கள். பெரிய மூங்கில் ஒன்றினை எடுத்து, கழுதையை அதில் கட்டி, மூங்கிலின் இரு முனைகளையும் இருவரும், தத்தம் தோள்களின் மீது வைத்துக் கொண்டு கழுதையை சுமந்து கொண்டு சென்றார்கள்.

இவர்கள் ஒரு குறுகலான பாலத்தின் வழியே செல்ல வேண்டியிருந்தது. பாலத்தின் மீது செல்லும்போது, நிலை தடுமாறினார்கள். கழுதை பாலத்திலிருந்து துள்ளி, கீழே ஒடிக் கொண்டிருந்த ஆற்றில் விழுந்தது. இருவரும் செய்வதறியாது திகைத்து நின்றார்கள்.

கதை இத்துடன் முடியவில்லை...

பாலத்தின் மீது வந்து கொண்டிருந்த சிலர், கிழவரையும், சிறுவனையும், கண்டபடி திட்டினார்கள், "கழுதை ஆற்றில் அடித்துக் கொண்டு போகிறது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்களே!", என்று.

சிறுவன் உடனே, பாலத்திலிருந்து, ஆற்றில் குதித்தான். ஆற்றில் நல்ல வெள்ளம். சிறுவனும் அடித்துக் கொண்டு செல்லப்படுகிறான்.

கதை இன்னமும் முடியவில்லை...

உடனே, மக்கள், கூச்சலிட்டார்கள். "கிழவா, பையனை வெள்ளம் அடித்துக் கொண்டு செல்கிறது. என்ன பார்த்துக் கொண்டிருக்கிறாய்?",

கிழவர் வேட்டியை வரிந்து கட்டிக் கொண்டு, பாலத்திலிருந்து குதித்தார், தண்ணிருக்குள். ஆற்று வெள்ளம் அவரையும் அடித்துக் கொண்டு சென்றது.

கதையை இன்னமும் முடிக்க மனமில்லை.

ஐந்து, பத்து நிமிடங்கள் கழித்து, தட்டுத் தடுமாறி, நீந்திக் கரையேறிய கழுதை நிம்மதிப் பெருமூச்சு விட்டது. "அப்பாடி, ஒழிஞ்சாங்க, இரண்டு பேரும்!!".

கதை போதிக்கும் நீதி யாது?

முட்டாள்களிடம் வேலை பார்ப்பதை விட, ஆற்றில் குதிப்பதே மேல்.

Monday, August 22, 2005

அஸ்ஸாம் அனுபவங்கள்

இந்தியாவின் வடகிழக்கிலுள்ள ஏழு சகோதரிகளில் மூத்தவள்தான் அஸ்ஸாம்.
கௌஹாத்தியிலிருந்து கோலாகாட் செல்லும் வழியில் நுமாலிகார் எண்ணை
சுத்திகரிப்பு ஆலை உள்ளது. அனைத்து அஸ்ஸாம் மாண்வர்கள் சங்கமும் (AASU),
ராஜீவ் காந்தியும் செய்து கொண்ட ஒப்பந்ததின் அடிப்படையில் உருவானதால்
"ஒப்பந்த ஆலை" (Accord Refinery) என்ற பெயருமுண்டு இதற்கு. பார்
புகழும் பாரத் பெட்ரோலியம் கார்ப்போரேஷனின் கூட்டு முயற்சிதான் இந்த
நிறுவனம். இங்குதான் எங்களுக்கு ப்ரோஜெக்ட்.

ஹரியும் நானும் சென்னையிலிருந்து கொல்கத்தாவிற்கு 'ஜெட்'டில் பயணித்து,
பின்னர் அங்கிருந்து "இண்டியன் ஏர்" பிடித்து, கௌஹாத்திக்கு பயணித்து,
கோலாகாட்டிற்கு காரில் சென்றோம். கோலாகாட், கௌஹாத்தியிலிருந்து
12 மணி நேரம். எனவே அங்கு போய்ச் சேர காலை மணி ஆறு ஆகி விட்டது.
இப்பொது நுமாலிகார் செல்ல, மீண்டும் வந்த வழியே 2 மணி பயணிக்க
வேண்டும். அகால வேளை பாதுகாப்பு கருதி இந்த ஏற்பாடு.

இப்போது எங்கள் பயணம் டாக்சி மூலம். டிரைவர் பெயர் எதேனும் ஒரு "பரூவா"
வாகவோ, அல்லது "போரா" வாகவோகத்தான் இருக்க வேண்டும், என்றெண்ணிப்
பெயர் கேட்டேன். நான் நினைத்தது சரிதான். அவர் பெயர் பரூவாதான். இது
இரண்டு மணி நேரப் பயணம் என்றாலும், இந்த டாக்சியில் சொல்லத்தக்க
அம்சங்கள் பல இருந்தன. பின் சீட்டில் இருவரும் உட்கார்ந்தோம். என்னுடைய முன்
சீட்டில், அதாவது டிரைவர் சீட்டின் மறுபுறம் ஆதாரம் ஏதுவுமில்லாமல்
தொங்கிக் கொண்டிருந்த சீட்டின் அடியில், ஆறு செங்கற்கள் அடுக்கப்பட்டிருந்தன.
அந்தச் செங்கற்கள் ஏதேனும் காலில் விழுந்து விடுமோ என்றெண்ணிப் பயந்து
கொண்டிருக்கும் போது. சடேறென்று ப்ரேக் அடித்தார், டிரைவர். ப்ரேக்
அடித்தவுடன், ஏர் பேக் (air bag) போல உடனே, முன் சீட்டின் பின்
புறத்திலிருந்து நான்கைந்து ஸ்பிரிங்குகள், தேங்காய் நார் சகிதம் வந்து
எட்டிப் பார்த்து, ஹலோ என்றன. ஸ்பிரிங்குகளைக் கையால் பிடித்துக் கொண்டே
பயணத்தைத் தொடர்த்தோம்.

சிறிது நேரத்தில் மழை தூரத் தொடங்கியது. வைப்பர் என்று சொல்லப்படும்
உதிரிப் பாகம் வேலை செய்ய மறுத்ததால், இந்தப் பரூவா, இடது கையால்
ஸ்டீயரிங்கைப் பிடித்துக் கொண்டே, வண்டியை லாவகமாக ஓட்டிக் கொண்டு,
வலது கையால் ஒரு துணியை எடுத்து, கையை காரின் வெளியே விட்டு,
கண்ணாடியைத் துடைத்துத் தன் திறமைதனை வெளிப்படுத்தினார். இன்னம் சிறிது
நேரத்தில், காரின் குறுக்கே ஒர் ஆட்டு மந்தை குறுக்கிட்டது. டிரைவர்
இப்போது ஹார்ன் அடிக்கப் போகின்றார் என்று எதிர் பார்த்தோம். ஆனால்
மாறாக, அவர் டேஷ் போர்டிலிருந்து ஒரு பச்சை நிற வயரையும், வலது
புறமிருந்து ஒரு மஞ்சள் நிற வயரையும் இழுத்தார். இரண்டு முனைகளையும்
இணைத்துப் பிடித்தார். ஒரு சிறு தீப்பொறியுடன் ஹார்ன் சப்தம் அழகாகக்
கேட்க, ஆட்டு மந்தை வழி விட்டது. அந்தக் கற்காலக் காரை எண்ணிப்
புலம்பிக் கொண்டிருக்காமல், ஒரே ட்ரிப்பில் 350 ரூபாய் கறந்த பரூவா
சாகிப்பின் விடா முயற்சியையும், நம்பிக்கையையும் எண்ணி வியக்காமலிருக்க
முடியவில்லை.

நுமாலிகார் ஆலை அமைந்துள்ள இடம் ஓர் அற்புதமான ஆக்சிஜன் ஆலைக்கு நடுவே.
ஆம், தூய்மையான, சில்லென்ற காற்று சுற்றிலுமிருந்த பச்சைப் பசேலென்ற
தேயிலைத் தோட்டங்களிலிருந்து வந்து கொண்டிருந்தது. டவுன்ஷிப் இருப்பது
ஆலையிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தள்ளி, ஒரு குன்றின் மேலே. குன்றின்
மேலமைக்கப்பட்ட இந்த டவுன்ஷிப் அமைத்த கட்டுமானக் கம்பெனி, இந்தப்
ப்ரொஜெக்ட்டிற்காக தேசிய விருது வாங்கியுள்ளது என்று கேட்ட போது
ஆச்சரியம் ஏற்படவில்லை. அவ்வளவு அழகு. இந்த முதல் விஜயத்தில் எங்கள்
வேலை மூன்றே நாட்களில் முடிந்து விட, தற்காலிமாக "டாட்டா, பை பை"
சொல்லி விட்டுத் திரும்பி வந்தோம்.

கிட்டத்தட்ட பத்து மாதங்கள் கழிந்தபின், எடுத்துக் கொண்ட ப்ரொஜெக்ட்டை
முடிக்க இம்முறை மீண்டும் வந்தோம் அஸ்ஸாமுக்கு. இம்முறை
கொல்கத்தாவிலிருந்து, ஜோர்ஹாட்டிற்க்கு விமானம் மூலம் வந்து, பின் ஒரு
மணி நேரம் பயணித்து நுமாலிகார் அடைந்தோம். இப்பொது விருந்தினர்
விடுதியும் கட்டி முடிக்கப்பட்டிருந்தது. இந்தியாவிலேயெ முதன் முறையாக ஒர்
பட்டாம்பூச்சிப் பூங்காவும் அமைக்கப் பெற்றிருந்தது என்றும் கேள்விப்பட்டோம்.

விருந்தினர் விடுதி நன்றாகவே இருந்தது. கான்டீனில் சாப்பிட்டு விட்டு,
காலையில் வேலைக்குச் செல்வோம். திரும்புவதற்கு இரவு மணி ஒன்பது
ஆகிவிடும். நாங்கள் வந்த மறு நாள், விடுதி திரும்பிய போது, அறையின்
கதவில் அறிவிப்பு ஒன்று ஒட்டப்பட்டிருந்தது.

அந்த நோட்டீஸ் டவுன்ஷிப் மேனெஜரால் கையெழுத்திடப்பட்டு ஒட்டப்பட்டிருந்தது.
அதிலிருந்த வாசகம் வருமாறு.

"நேற்றிரவு காட்டு யானை ஒன்று டவுன்ஷிப்பிற்குள் வந்து விட்டதாக
நம்பப்படுகிறது. அந்தக் காட்டு யானையைப் பிடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு
வருகின்றன. அதுவரை, டவுன்ஷிப் வாசிகள் அனைவரும் கவனத்துடன் இருக்கும்படி
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்."

இந்த அறிவிப்பைப் படித்தவுடன் ஒரே த்ரில்லாக இருந்தது. ஊருக்கும் போன்
போட்டுச்
சொன்னதுதான் விவகாரமாகிப் போய்¦விட்டது. உடனே கிளம்பி வந்து
விடும்படி இடை விடாத வேண்டுகோளும், பத்திரமாகத் திரும்பவேண்டி,
பக்கத்துத் தெரு பிள்ளையாருக்கு அபிஷேக ஏற்பாடுகளும் நடந்தன. இரண்டு
நாட்களில் யானை பிடிபட்ட்டதாகக் கூறிய பின்புதான், வீட்டில் அமைதி
ஏற்பட்டது. அஸ்ஸாம் நண்பரொருவர், "இதற்கே இவ்வளவு அலட்டிக்
கொள்கிறாயே!. மூன்று மாதம் முன்பு, புலி ஒன்று பிடிபட்டது. காட்டிலாகா
அதிகாரிகள் வந்து மீண்டும் அதனைக் கொண்டுக்
காட்டில் கொண்டு போய் விடும் வரை, குன்றின் உச்சியில் ஒர் கூண்டில்தான்
வைத்திருந்தார்கள்.

நாங்கள் அனைவரும் போய் போய்ப் பார்த்துவிட்டு வந்தோம்", என்றார். ஓரிரு
நாட்கள் கழித்துக் காரில் ஆலைக்குச் சென்று கொண்டிருந்தோம். டிரைவர் காரை
நிறுத்தி விட்டார் திடீரென்று. என்னெவென்று கேட்டதற்கு, "அங்கே பாருங்கள்.
யானைக் கூட்டமொன்று, சாலையைக் கடக்கின்றது" என்றார். யானைக் கூட்டம்
சென்ற பின் எங்கள் சவாரியைத் தொடர்ந்தோம்.

நான் முன்னமே கூறியபடி இந்த ஆலை இருப்பது, நாகரீகமே இல்லாத ஒரு
வனப்பகுதி. எனவெ, ஒவ்வொரு முறையும் இ-மெயில் பார்க்க வேண்டுமென்றால்
ஒரு மணி நேரம் பயணம் செய்து கோலாகாட் செல்ல வெண்டும். பெரும்பாலான
நாட்கள் ப்ரௌசிங் சென்டர் உரிமையாளர், "இன்டெர்நெட் நஹி ஹை; சர்வர்
டவுன் ஹை" என்று சிரித்தபடியெ கூறுவார். கடுப்போ கடுப்புடன் திரும்ப
வேண்டியிருக்கும். இன்டெர்நெட்தான் வேலை செய்யவில்லை என்றால், டெலிபோன்
நெட்வொர்க்கும் படுத்தோ படுத்தியெடுக்கும் சூழல் அது. இது போதாதென்று,
ஆசு, உல்பா, போடோ, போன்றோர் விடுக்கும் பந்த் வேறு இருக்கும். இந்த
பந்துக்கள், சாதாரணமாக, 12, 24, 36, 48 என்று 12ஆம்
வாய்ப்பாட்டையே, ஒட்டி அமையும். 12 மணி நேர பந்த் என்றால் நாம்
அதிர்ஷ்டசாலிகள். பந்தின்போது, நம்ம ஊர் போல அலம்பல் பண்ணிக்
கொண்டிருந்தால், தோட்டாவினால் உயிர் போகும் வாய்ப்ப்புகள் அதிகம்.

அஸ்ஸாமில், இவர்கள் பேசும் ஆசாமியைத் தவிர, ஹிந்தி மற்றும் பீகாரி
பேசும் மக்கள் அதிகம். டவுன்ஷிப் தவிர, மற்ற இடங்களில் வசிப்பவர்கள்
பெரும்பாலோனோர் ஏழைகளாகவே இருக்கிறார்கள். ஆனால், ஏழையோ,
பணக்காரனோ, எல்லோரும் எதேனுமொரு கலையில் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.
வாய்ப்பாட்டு, வாத்யம், கைவேலை என்று ஒவ்வொருவருக்கும் ஒரு பொழுதுபோக்கு
உள்ளது.

ஒரு வாரக் கடைசியில், ஆலையின் டிரெயினிங் ஆபீசர், எங்களை, அவளுடைய
உறவினரின் தேயிலை எஸ்டேட் ஒன்றிற்கு அழைத்துச் சென்றாள். மேகங்கள்
மறைக்கும் அந்தத் தேயிலைத் தோட்டம் மிக ரம்மியமாக இருந்தது. நாங்களும்
சில னிமிடங்கள் தேயிலை பறித்தோம். தோட்டப் புத்துணர்ச்சி கொண்ட
தேனீர் அருந்துவது அந்த சூழலுக்கு ஒர் அருமையான அனுபவம். போன்சாய் மரங்கள்
போன்ற, இந்த தேயிலை செடிகள் ஒவ்வொன்றிற்கும், வயது சுமார் நூறு
இருக்கும்.
டாடா தேயிலை எஸ்ட்டெட்கள் பல இடங்களில் இருந்தன.

அஸ்ஸாம் பற்றிக் கூறிவிட்டு, காஸிரங்கா வன சரணாலயம் பற்றிக்
கூறாமலிருக்கக் கூடாது. ஆனால் கூறவும் முடியாது என்னால். ஏனென்றால்
நான்தான், அங்கு செல்லவேயில்லயே. நேரமின்மையால் இங்கு செல்ல முடியாதது
எனக்குப் பெரிய வருத்தமே. இயற்கைச் சூழலில், யானைச் சவாரி செய்வதும்,
காண்டாமிருகங்களைப் பார்ப்பதும் அரிதான நிகழ்ச்சியல்லவா. இதே மாதிரி
வாய்ப்பு தவற விட்ட வரிசையில் புகழ்பெற்ற "காமாக்கியா" ஆலயத்தையும்
சேர்த்து கொள்ளுங்கள்.

காண்டாமிருகம்தான் பார்க்க முடியவில்லை. குறைந்தது காண்டாமிருக வடிவம்
கொண்ட ஏதெனும் ஒரு நினைவுப் பொருளாவது வாங்கிச் செல்ல வேண்டும் என்று
தீர்மானித்தோம். வழக்கமாக கார் ஓட்டி வரும் அஜீத் அன்று வரவில்லை.
வேறொரு ஒரு டாக்சி பிடித்து, 40 கிலோமீட்டர் பயணம் செய்து,
கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் ஒர் இடத்திற்குச் சென்றோம். மரத்திலான
காண்டாமிருக பொம்மை எல்லொர் கவனத்தையும் கவர்ந்தது. கிட்டத்தட்ட ஐந்து
அல்லது ஆறு கிலோ எடை கொண்ட அந்த கைவினப் பொருளின் விலை ஆயிரம்
ரூபாயாம். ஆனால் பேரம் பேசி ஐனூறு ரூபாய்க்கு
வாங்கி விட்டோம். ஐனூறு ரூபாய்க்கு இது எப்படி சாத்தியமென்று, எங்கள்
முதுகை நாங்களே தட்டிக் கொண்டோம். மறுநாள் வேலைக்கு வந்த அஜீத், இந்த
காண்டாமிருக பொம்மை, தனது வீட்டினருகே இருனூறு ரூபாய்க்குக் கிடைக்கும்
என்றான். மேலும், காண்டாமிருகம், களையாக இல்லை என்றும், மூஞ்சி, நாய்
முகம் போல உள்ளது என்றும் வெறுப்பேற்றினான். இவனக் கூட்டிக் கொண்டு போய்
வாங்கவில்லை, என்று இவனுக்கு 'ஜே' என்று ஸ்ரீகாந்த் சொன்ன போது அனைவரும்
அதனை ஆமோதித்தோம்.

இந்த அஸ்ஸாம் மக்களின் staple food, அரிசி மற்றும் பருப்பு ஆகும்.
ஆனால், பாலும், பால் சார்ந்த பொருட்களான தயிர், மோர், வெண்ணை,
நெய் போன்றவை கிடைப்பதில்லை. காபி, டீ போடக்கூட பால் பவுடர்தான்
உபயோகிக்கின்றனர். காரணம் தெரியவில்லை. பச்சைக் கடுகு கொண்டு
செய்யப்படும் சட்னி பிரபலம். அதனைச் சாப்பிட்ட பிறகுதான், மன்னிக்கவும்,
சாப்பிட முயற்சி செய்த
பின்புதான், "கடுகு சிறுத்தாலும் காரம் போகாது" எண்ற்ற பழமொழியின்
அர்த்தம் புரிந்தது.

இரண்டு மாதங்கள் தங்கிய போதும், அஸ்ஸாம் என்பது இப்படித்தான் என்று
என்னால் கூற முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட சிறு சிறு அனுபவங்களை மட்டுமே
தொகுத்துக் கூறியுள்ளேன்.

அறிவுரை

"எங்கடா, இந்த செல்வனைக் காணலை. இன்னிக்கும் லீவா"

"ஆமா ஸார். ஊருக்கு போயிருக்கானாம்."

எனக்குப் பலத்த கோபம் வந்தது. இது முதல் முறையல்ல. வெள்ளிக்கிழமை லீவு எடுப்பது இது

மூணாவது முறை. வெள்ளி, சனி, ஞாயிறு என்று லீவு எடுக்க இவனுக்கு என்ன ராஜா வீட்டுக் கன்னுக் குட்டின்னு நினைப்பா?.

"குமார். நீதானப்பா, அந்த செல்வனை வேலைக்குச் சேர்த்து விட்டது. அவன் எங்க இருக்கான்?"

"ஸார். இங்கதான் மல்லிப்பூ நகர்ல.."

"என்னாச்சு அவனுக்கு? ஏன் வேலைக்கு வரலை?"

"என்னமோ, வீட்ல சண்டையாம். காஞ்சீபுரம் போய்ட்டானாம்."

"சரி. சரி. வரட்டும் திங்கக் கெழம. நான் பாத்துக்கறேன்"

திங்கட் கிழமையும் வந்தது. செல்வனும் வந்தான்.

"என்னப்பா, என்ன ஆச்சு? வெள்ளிக்கிழமை வரலை.."

தலையைக் குனிந்தபடி நின்றிருந்தான்.

"வீட்ல சண்டையாமே. ஸார் கோச்சிகிட்டு, காஞ்சீபுரம் போய்ட்டீங்களாமே. உனக்கு மீறி, மீறிப் போனா என்ன வயசிருக்கும். பதினஞ்சா, பதினாறா?

நீ ஆபீஸ¤க்கு லீவு போடறது பிரச்னை இல்லை. ஆனா வீட்ல அம்மா, அப்பா மனசு எப்படிக் கஷ்டப்படும். நீ பாட்டுக்கு ஊருக்குப் போய்ட்டென்னா, நீ எங்கெ போனேன்னு அவங்களுக்கு எப்படித் தெரியும்? இரண்டு நாளா, புள்ளயக் காணோம்னு தவிச்சுப் போயிட மாட்டாங்களா?" என்று அரை மணிக்கு அறிவுரை மழை பொழிந்தேன். (வாத்தியார்னு-தண்ணிர் தண்ணீர்- வீட்ல பட்டப் பேர் கொடுத்ததுக்குத் தகுந்தாப்லே நடக்க வேண்டாமா?)

அரை மணி நேரம் காய்ச்சியும், ஒரு வார்த்தை கூடப் பேசாமல், தலையைக் குனிந்தவாறு இருந்தான்.

"சரி சரி போ. இனிமேல் இப்படியெல்லாம் பண்ணாத"

குமார் மீதுதான் கோபமாக வந்தது. அவனை அழைத்தேன்.

"என்னப்பா ஆள் சேத்திருக்கே. அரை மணி நேரம் அட்வைஸ் பண்ணறேன். வாயைத் தொறக்கக் கூட மாட்டேங்கிறான். சரியான கல்லுளிமங்கன்"

"ஸார். நீங்க சொல்றதைக் கேட்டுக்கிட்டுதான் இருந்தேன். அவன் காஞ்சீபுரம் போனது உண்மை. அவன் வீட்ல சண்டை நடந்ததும் உண்மை. ஆனா, சண்டை போட்டது அவன் இல்லை. அவனோட அம்மாதான், அப்பாவோட சண்டை போட்டுகிட்டு, காஞ்சீபுரம் போயிட்டாங்களாம். இவன் போயி, அம்மாவைச் சமாதானப்படுத்திக் கூட்டிகிட்டு வந்திருக்கானாம்."

"யார் போனா என்னப்பா. சொல்லாம கொள்ளாம லீவு போடறது தப்புதானே. அதனாலதான் அட்வைஸ் பண்ணினேன்"

மொழிப் பிரச்னை

மொழிப் பிரச்னை என்றவுடன் ஏதோ, தனித்தமிழ் என்றோ, வழலைக்கட்டி போன்ற கனமான விஷயங்கள் பற்றியோ பேசப் போகிறேன் என்றெண்ணி பயந்து விடாதீர்கள். இது சும்மா நம்ம அனுபவங்கள்தான்.

ஒவ்வொரு மனிதனுக்கும் எத்தனை மொழிகள் தெரிகின்றதோ அத்தனை நல்லது என்று தெரிந்திருந்தும், எப்படியோ மற்ற மொழிகள் கற்றுக் கொள்ளும் ஆர்வம் இல்லாமலே, ஒரு ஜென்மம் வளர்ந்து விட்டேன். இதனால் எத்தனையோ சங்கடங்கள் வந்த போதிலும், நினைவலைகளைப் புரட்டிப் பார்க்கின், சுவாரசியமாய் சில விஷயங்கள் புலப்படத்தான்
செய்கின்றது.

தாய் மொழியாம் தமிழும், ஆண்டவர்கள் மொழியாம் ஆங்கிலமும் மட்டுமே தெரிந்த எனக்கு, ஒரு முறை மும்பையில் பயிற்சி. பயிற்சி முடித்த அன்று மாலை, அணுசக்தி நகரிலிருக்கும் எனது மாமா வீட்டிற்ற்கு செல்ல எண்ணினேன். ஆட்டோவைக் கூப்பிட்ட நான், சும்மா இல்லாமல், "அணுசக்தி நகர் சலோ" என்று புலமையைக் காட்டினேன்.

ஆட்டோ டிரைவரும் என்னை சந்தோஷமாக ஏற்றிக் கொண்டான்.

"அணுசக்தி நகர் மே ரிஷ்தேதார் ஹை" என்றான் அவன்.

அவன் சொன்னது எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் எனது மொழி அறியாமையக்
காட்டிக் கொள்ளாமல், நானும் "ஹை.. ஹை..." என்றேன்.

"இதர் ரோட் சப் சேஞ்ச் ஹோகயா"

"ஹை..ஹை..."

இப்படியே பத்து நிமிடம் சமாளித்து குதிரை ஓட்டிக் கொண்டே வந்தேன்.

"ஆப். கித்னே தின் இதர் ரஹ்தே ஹோ?"

"ஹை..ஹை..."

அவன் சற்று நிதானித்து, "மே துஜே பூச்தே ஹை கி ஆப் கித்னே தின் இதர் ரஹ் சக்தே ஹோ" என்றான்.

சரி இனி மேலும் தாங்காது என்றெண்ணி, "மை ஹிந்தி நஹி மாலும் ஹை" என்று சரண்டர் ஆனேன்.

அவன் படேரென்று, தனது தலையில் ஓங்கி அடித்துக் கொண்டு விட்டு, "க்யார்ரே. துஜே ஹிந்தி நஹி மாலும் ஹை. ****************************************************" என்றான்.

ஆட்டோவை விட்டு இறங்கும்போது, அவன் பார்த்த பார்வை, "ஹிந்தி தெரியாத ஜென்மமே. எதற்கு இங்கு வந்தாய்" என்று கேட்பது போல் இருந்தது. ஒருவேளை, ****** யில் சொல்லியிருப்பானோ.

அடுத்த முறை, பூனா சென்றிருந்தேன். இது ஒரு வித்தியாசமான அனுபவம். பஜ்ஜியானது நானல்லவே. மாலை வேளையில், பொழுது போக, காலாற நடந்து வந்து கொண்டிருந்தேன். எனக்கு பின்னே, ஒரு பத்தடி தள்ளி, ஒரு இளம் தம்பதியினர் நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் நடந்தபடியே, தமிழில் பேசிக் கொண்டு வந்தது என் காதில் துல்லியமாக விழுந்தது. எனது முகத்தை பார்க்காததால், எனது தமிழ்மூஞ்சி, அவர்களுக்குத் தெரியவில்லைபோலும். அடுத்தவர் பேச்சைக் கேட்பது அநாகரீகம் என்றாலும், பொழுதுபோக, அவர்கள் உரையாடலைக்
கேட்பது தவறில்லை என்று, என்னை நானே சமாதானம் செய்து கொண்டு, பேசுவதைக் கேட்டுக் கொண்டே நடந்தேன். மேலும், என்னை ஒரு மனிதனாக எண்ணாமல், ரோட்டில் சத்தமாக பேசி வருவது அவர்கள் தப்புதானே என்றும் எண்ணிக் கொண்டேன். அந்த மனைவியாகப்பட்டவள், கணவனிடம், தனது மாமியார் மற்றும் நாத்தனார் ஆகியோர் பற்றிப்
புலம்பியபடியே வந்தாள். அவனும், வேறு வழியின்றி, அதனை ஆமோதித்துக் கொண்டே வந்தான். சென்சார் செய்யப்பட வேண்டிய சிற்சில சிணுங்கல்கள் வேறு.

ஒரு நாலு மூலை சந்திப்பை அடைய சிறிது தூரம் இருக்கும் முன், அவர்கள் இருவரும் வேகமாக எட்டி நடந்து, என்னிடம் வந்து, "Excuse me. How to go to Venus Theatre?" என்று கேட்டனர். நானும், ஆங்கிலத்தில், "I dont know. I am new to this place" என்று
கூறியிருந்திருக்கலாம். ஆனால், நானோ, தமிழில், தெள்ளத் தெளிவாய், "எனக்குத் தெரியாது. நான் ஊருக்குப் புதுசு" என்றேன்.

அவர்கள் "ஙே" என்று விழித்தனர்.

முதன்முறையாக ப்ரான்ஸ் செல்லும் வாய்ப்பு கிடைத்தபோது, மனைவியயும் அழைத்துச் சென்றிருந்தேன். இருவரும் கிரனோப் என்னும் அழகிய ஊரில், டெம்பாலஜி என்னும் இடத்தில் தங்கியிருந்தோம். டெம்பாலஜி என்பது அப்பர்ட்மெண்ட் போல. வந்த அன்றே ஒரு வயதான பஸ் டிரைவரிடம், ஆங்கிலத்தில் வழி கேட்டு அவர்தம் கோபத்திற்கு ஆளானோம். பிரெஞ்சு
மக்களுக்கு ஆங்கிலத்தில் பேசினால் பிடிக்காது. குறிப்பாக வயசானவர்களுக்கு என்று மறுநாள் ஷாமா சொன்னாள். வெள்ளைக்காரர்கள் (foreigners) எல்லோருமே ஆங்கிலத்தில்தான் பேசுவார்கள் என்றெண்ணியிருந்த எங்களுக்கு இது செய்தியாகத்தான் இருந்தது.

டெம்பாலஜியிலிருந்து தினமும், ஒரு முறையாவது இந்தியாவிற்குப் போன் செய்து, குழந்தைகளிடம் பேசுவாள் என் மனைவி. வந்து சேர்ந்த ஒரே வாரத்தில் வாங்கிய அலவன்ஸ் அனைத்தும் ISDக்குப் போய்விடுமோ என்றெண்ணி, டெம்பாலஜி மானேஜரிடம் சென்று, டெலிபோனுக்கு இது வரை எவ்வளவு ஆகியுள்ளது என்று கேட்டு வருவதாகச் சொன்னாள். மறுநாள் மானேஜரைக் கண்டவளுக்குக் கலவரம். ஏனென்றால் அந்த மானேஜர் பெண்மணிக்கு அகவை இருக்கும் அறுபதற்கும் மேல். இவளிடம் ஆங்கிலத்தில் எப்படிப் பேசிப் புரிய வைப்பது என்று வியந்தாள். ஆனால், தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல், தான் பயின்ற பரதக்கலையின் அபிநயங்களை எடுத்து விடுவது என்று தீர்மானித்தாள்.

அபிநயப் பிரயோகம் செய்து கொண்டே, "my.. children..abroad... daily.. telphone..bill..." என்று ஆங்கில வார்த்தைகளையும் சின்க்ரொனைஸ் செய்து, இறுதியாக "கொபியான்?...கொபியான்?" என்றாள். (கொபியான் என்றால் எத்தனை, ஹௌ மச், கித்னே..) அந்த வயதான மேனேஜரோ உடனே, "You want to know how much you have spent on the telephone bill. Why dont you ask properly?" என்று நெத்தியடி போட்டாள்.

"உங்களுக்கு இங்கிலீஷ் தெரியும் என்று எனக்கு எப்படித் தெரியும்", என்று பின்னர் வழிந்தாள்.

சரி, இனிமேல் உஷாராக இருக்க வேண்டுமென எண்ணி, மெய்லோன் சென்றபோது, ஒரு நடுத்தர வயது ஆசாமியிடம் வழி கேட்கும் முன், "Can you speak English?" என்றோம். அந்தக் குசும்பு பிடித்த மனிதன், "Yes. I can speak; But I will get pimples" என்றான்.

அப்புறம். அந்த 'இண்டிக்கி' விஷயம் சொல்லி முடித்து விடுகிறேன். எனது மனவி சில வருடங்கள் ஒரு கிண்டர் கார்டன் பள்ளியில் டீச்சராக இருந்தாள். குழந்தைகளைக் கவனிக்க, ஒவ்வொரு வகுப்பிற்ற்கும் ஒரு ஆயாவும் உண்டு. பள்ளி திறந்த புதிதில், ஒவ்வொரு குழந்தையும் ஏதோவொரு காரணத்திற்காக அழ ஆரம்பிப்பது வழக்கம்.

இப்படித்தான் ஒரு நாள், சுதீர்பாபு, "இண்டிக்கிப் போத்தானு" என்று அழ ஆரம்பித்து விட்டான். உடனே, இவள், ஆயாவைக் கூப்பிட்டு, "ஆயாம்மா. இந்த சுதீர்பாபுவை, டாய்லெட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய்விட்டு வா" என்றாள். டாய்லெட் போய்விட்டு வந்த, சுதீர்பாபு, சிறிது நேரம் அமைதியாக இருந்தான். பிறகு சில நிமிடங்களில் மீண்டும், "இண்டிக்கிப் போத்தானு" என்று அழத் தொடங்கி விட்டான்.

"ச்சீ. சும்மாயிரு. இப்பத்தானே, இண்டிக்கி போயிட்டு வந்தே. எத்தனை முறை இண்டிக்கி போவே." என்று அதட்டினாள்.

ஆயாம்மா உடனே, "டீச்சர். அந்தப் பையன் தெலுங்கிலே பேசறது உங்களுக்குப்
புரியலையா? 'இண்டிக்கிப் போத்தானு'ன்னா, 'வீட்டிக்குப் போறேன்'னு அர்த்தம்." என்றாள்.

'நல்லவேளை. சுதீர்பாபுவின் அப்பாவிடம் ஏதேனும், உளராமல் இருந்தோமே' என்று னிம்மதிப் பெருமூச்சு விட்டாள்.

Sunday, August 21, 2005

இன்ஸ்பெக்டர் வர்றாருங்கோ

அந்தக் காலத்தில், பள்ளிக்கூட இன்ஸ்பெக்ஷன் என்பது மாணவர்களுக்கு தீபாவளிக்கு அடுத்தபடியான ஒரு முக்கிய நிகழ்ச்சியாகும். ஆசிரியர்களுக்கும் கூட. ஒரே வித்தியாசம் அவர்கள் பிதறலை வெளியே காட்டிக் கொள்ள மாட்டார்கள். மற்றபடி பள்ளிக்கூடத்தில் உள்ள அனைவரும் எக்சைட் ஆகி, எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்று திமிலோகப்படும் நேரமது.

இன்ஸ்பெக்ஷன் தொடங்க ஒரு வாரம் முன்னரே, பள்ளி களை கட்டி விடும். வகுப்பறைகள் சுத்தம் செய்யப்பட்டு வெள்ளை அடிக்கப்படும். அடுப்புக்கரி, ஊமத்தை இலை கொண்டு அரைக்கப்படும் கரும்பலகைக்குண்டான வர்ணக்கலவை (கரி), கரும்பலகையில் பூசப்படும். இந்த வேலையை, 'சி' பிரிவு மாணவர்கள், 'பி' பிரிவு மாணவர்களுக்கு 'அவுட் ஸோர்ஸிங்' செய்வதும் உண்டு. பொதுவாக மாணவர்கள் தாங்களே குழுக்களாக பிரிந்து கொண்டு, ஒவ்வொரு குழுவும்
ஒவ்வொரு வேலையச் செய்யும். ஒரு கோஷ்டி சார்ட் தயார் செய்யும். அடுத்த கோஷ்டி, மண்ணைப் பிசைந்து, தங்கள் திறமைகளைக் காட்டும். சட்டி, பானை, அம்மி, ஆட்டுக்கல், வீடு, போன்ற மினியேச்சர் மாடல்கள் செய்து அசத்துவார்கள். இவை வகுப்பிலுள்ள உத்தரத்தின்
மீதோ, கட்டுரை அலமாரியின் மீதோ வைக்கப்பட்டிருக்கும்.

இது தவிர, பல்வேறு மாலைகள் செய்யப்படும். இதற்கான் முக்கிய மூலப்பொருள் சிகரெட் பாக்கெட் அட்டையும், அதிலுள்ள வெள்ளிக் காகிதமுமேயாகும் (aluminium foil). குறிப்பிட்ட மாணவர்கள் இதனை ஒரே நாளில் மொபலைஸ் பண்ணிக் கொண்டு சேர்க்கும் திறனுள்ளவர்கள். மாணவர்கள் சரிகை காகிதத்தைச் உருட்டிக் கொடுக்க, மாணவிகள் ஊசி நூல் கொண்டு கோர்க்க, மாலைகள் உருவாகும் காட்சி பார்க்க நன்றாக இருக்கும்.

அடுத்தபடியாக சிகரெட் பாக்கெட் அட்டையக் குறுக்காக, சிறிய துண்டுகளாக வெட்டி, அவற்றை இரண்டாக மடக்கி, ஜிக்ஸா முறையில் கோர்க்கப்படும் மாலைகள் விஷேசமானவை. சிறிய வகுப்பு மாணவர்கள், ஸிஸர்ஸ், சார்மினார் பாக்கெட்டில் மாலைகள் பண்ண, எட்டாம்ப்பு மாணவர்கள் மட்டும் பாஸிங் ஷோ, னார்த் போல் அட்டைகளில் கலக்குவார்கள். சிகரெட் பாக்கெட் அட்டை மாலைகள், காந்தி, யேசு, புத்தர் படங்களுக்கு நேர்த்தியாக மாட்டப்படும். அரிசிப்பொரியிலும் மாலைகள் செய்யும் வழக்கமும் உண்டு. சில மாணவர்கள், வார்னிஷ் காகிதம்
கொண்டு, காற்றினால் இயங்கும் விசிறி, தவளை, பந்து, ஆகாய விமானம், ராக்கெட் போன்ற ஒரிகாமி ஐட்டங்களும் செய்வார்கள்.

இன்ஸ்பெக்டர் வரும்போது யாரிடம் கேள்வி கேட்கப்படும் என்றும், யார், யார் கையைத் தூக்கவேண்டுமென்றும் முடிவு செய்யப்பட்டு, செவ்வனே அமல்படுத்தப்படும். சொதப்பிய மாணவர்கள், ஆசிரியர்கள் என்ன செய்வாரோ என்றெண்ணியும், சொதப்பிய ஆசிரியர்கள், தலைமயசிரியர் என்ன சொல்வாரோ என்றெண்ணியும் அஞ்சி அஞ்சி சாவர். ஒவ்வொரு இடைவேளையின் போதும், 'உங்களுக்கு முடிசிருச்சாப்பா', கேட்கப்படும்.

இந்த காலத்தில் பள்ளிகளில் இன்ஸ்பெக்ஷன் நடக்கின்றதா என்று தெரியவில்லை. அல்லது கவனிக்கப்பட்டு விடுகின்றனரா என்றும் புரியவில்லை. ஆனால், இன்ஸ்பெக்ஷன் நடக்காவிட்டால், ஒரு பரபரப்பான விஷயத்தை இழக்கிறார்கள் என்பது மட்டும் உண்மை.

இரத்த தானம்

"ஸார். சீக்கிரம் கிளம்புங்க. கேப் ஏற்பாடு பண்ணிருக்காங்க பர்ஸ்ட் எய்ட் சென்டெரிலேர்ந்து."

அவசரமாக உடை மாற்றிக் கொண்டு வந்து ஏறினேன் அந்த அம்பாசடர் காரில். ஏற்கெனவே காரில் மூன்று AB+ உட்கார்ந்திருந்தனர். கார் கீழ்ப்பாக்கம் ஆஸ்பிட்டலை நோக்கி விரைந்தது. பவர் பிளான்ட்டில் வேலை செய்து கொண்டிருந்த முருகேசனுக்கு ஆக்சிடெட்டாம். வெல்டிக் செய்து கொண்டிருந்த மணுசன், கால் தவறி கான்டென்சேட் டாங்கில் விழுந்து விட்டானாம். அவனுக்கு இரத்த தானம் செய்யவே இப்போது சென்று கொண்டிருக்கின்றோம்.

இப்போதுதான் வாழ்க்கையில் முதல் முறையாக இரத்த தானம் செய்கின்றேன். என்னுடைய இரத்தம் அந்த மணுசனைக் காப்பற்ற வேண்டுமே என்று வேண்டிக் கொண்டே, நாலாவது மாடியில் இருக்கும் அந்த இரத்த வங்கியில் நுழைகின்றேன். கொடுக்கப்பட்ட விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து விட்டு என் முறை வரும் வரை காத்திருக்கின்றேன். இரத்த அழுத்தம் பரிசோதிக்கப் பட்ட பின், கட்டிலில் படுக்கும்படி பணிக்கப்படுகின்றேன். இருபது வருடங்களுக்குப் பிறகு, ஊசி கையைத் துளைக்கின்றது. ப்ளாஸ்டிக் பையில் சொட்டு சொட்டாக எனது இரத்தம் சேகரிக்கப்படுகின்றது. சிறிது நேரம் ஓய்வு எடுத்த பின் ஒரு டம்ப்ளர்
க்ளூக்கோஸ் தண்ணீரும், சில பிஸ்கெட்டுகளும் சாப்பிட்டபின், காரிலே வீடு வந்து சேர்ந்தேன்.

சாயங்காலம் மணி ஐந்து இருக்கும். அன்பு சுரேஷிடமிருந்து போன்.

"ஸார். விஷயம் கேள்விப்ப்ட்டீங்களா? முருகேசன் போய்ட்டானாம். ".

"என்னது? போய்ட்டானா? என்னப்பா சொல்றே. கார்த்தாலதானே இரத்தம் கொடுத்துட்டு வந்தேன்."

"என்ன பண்றது ஸார். பாவி கொடுத்து வச்சது அவ்வளவுதான். 80% சிவியரிட்டி இல்லையா? அப்புறம் முக்கியமான விஷயம். நாளைக்கி அந்த இரத்த வங்கியிலே உங்களை வரச் சொல்லியிருக்காங்க ஸார்."

"என்ன அன்பு. எதாவது பிரச்சினையா?"

"ஆமாம். உங்களையே நேரில் வரச் சொல்லியிருக்காங்க"

மறு நாள் எனக்கு ஆப்தான். குழப்பத்துடன் இரத்த வங்கி சென்ற என்னை, இரத்தம் எடுத்த ஸிஸ்டர் புன்முறுவலுடன் வரவேற்றாள்.

"ஸார். பாவம். நேத்திக்கு அட்மிட் ஆன உங்க கம்பெனி எம்ப்ளாயீ இறந்துட்டார். உங்க இரத்தம் அவருக்குக் கொடுக்க முடியலே. உங்க இரத்தம் வேற குரூப் ஸார். பேஷண்ட்டோட குரூப் AB+VE. ஆனா உங்களுது வந்து A-VE. இது ரொம்ப ரேர் குரூப் ஸார். இதை வேற ஒரு பேஷண்ட்டுக்கு கொடுத்துட்டோம். இத சொல்றதுக்குத்தான் நேரிலேயே வரச்சொன்னோம். உங்க சந்தேகத்திற்கு வேணும்னா னீங்க இன்னொரு முறை ப்ளட் டெஸ்ட் பண்ணிக்கோங்க ஸார்"

அதிர்ச்சியாக இருந்தது. முருகேசனைக் காப்பற்ற முடியவில்லையே என்று ஒரு புறம் வருத்தம். மறு புறம் தவறாக எனது இரத்தம் AB+VE என்றல்லவா நினைத்துக் கொண்டிருக்கின்றேன். ஐந்து வருஷமாக எனது இரத்தம் AB+VE என்றல்லவா ஐடென்டி கார்டை மாட்டிக் கொண்டு அலைந்திருக்கிறேன்.

"ஸிஸ்டர். O+VEவோ AB+VEவோ உள்ளவர்களை நிறை கொடையாளர்கள்னு (Universal Donors)சொல்றாங்களே. அப்புறம் எதுக்கு இந்த க்ரூப் வேணும்; அந்த க்ரூப் வேணும்னு கேக்கறீங்க?"

"ஸார். அதெல்லாம் எனக்குத் தெரியாது. டாக்டரிடம் கேளுங்க" என்றாள்.

சரிதான். கேட்க வேண்டிய இடத்தில் அல்லவா கேட்க வேண்டும்.

தவறாக ப்ள்ட் க்ரூப்பை சொன்ன அந்த அரும்பாக்கம் ஆஸ்பிடல் மீதும், அதை சோதனை செய்யாமல் ஐடென்டிட்டி கார்ட் கொடுத்த பெர்ஸனல் டிபார்ட்மென்ட் மீதும் கோபம் வந்தது. போய்க் கத்தி விடலாமென்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால் ப்ரொமோஷன் எதிர்பார்க்கும் இந்த நேரத்தில் எதற்கு வம்பு என்று அடக்கியே வாசிக்க முடிவு செய்தேன். அடுத்த விடுமுறையின்போது மீண்டும் இரத்தத்தைப் பரிசோதித்து புதிய ஐடியும் பெற்றேன்.

"ஸார். வணக்கம். வாழ்த்துக்கள். A-VEவாமே. இனிமேல் தான் உங்களுக்கு நிறைய டிமாண்ட்." டிராகுலா தேவராஜ் போன் செய்து வாழ்த்தினான். இருபத்து நாலு மணி நேரமும், இரத்த தானம் பற்றி சிந்தித்து, நாற்பத்தெட்டாவாது முறையாக இரத்த தானம் கொடுத்த ஜீவனுக்கு டிராகுலா என்று பட்டப் பெயர். நம்ம மக்களைத் திருத்தவே முடியாது.

இரண்டே மாதத்தில் மீண்டும் இரத்த தானம் செய்யும் வாய்ப்பு கிடைத்தது. இப்போது தமிழ்நாடு ஆஸ்பிடலில். போய் இரத்தம் கொடுத்து விட்டு அரை மணியில் வந்து விடலாமென்றால், அது நடப்பதாகத் தெரியவில்லை. அடையாறிலிருந்து அவர்களது பஸ்ஸில் கிளம்பி, சோழிங்கனல்லூர் சென்று திரும்ப நான்கு மணி நேரத்திற்கு மேலாகி விட்டது. இரத்தம் அவ்வளவு முக்கியமென்றால், ஆம்புலன்ஸ் வேனை, வீட்டிற்கே அனுப்பிச் செய்து இரத்தம்
எடுத்துக் கொள்ளச் சொல்லலாமே என்று அடையார் டைம்ஸ் பத்திரிக்கைக்கு ஆசிரியர் கடிதம் எழுத வேண்டுமென நினைத்துக் கொண்டேன். இரத்தம் பெற்றுக் கொண்ட அகர்வாலின் மகனிடமிருந்து நன்றிக் கடிதம் வந்தது மலேஷியாவிலிருந்து. சில நாட்கள் கழ்¢த்துதான் என்னுடைய இரத்த்ம் சிவப்பு அணுக்கள். வெள்ளை அணுக்கள், ப்ளாஸ்மா என்று பிரிக்கப்பட்டு மூன்று நான்கு பேர் பயனடைந்தார்கள் என்று அறிந்து மகிழ்ந்தேன். மற்றபடி வேறு
விசேஷமில்லை.

கிடைப்பதற்கரிய க்ரூப் என்பதால், (AB-VE தான் எல்லாவற்றையும் விட மிக அரியதென்றாலும் எல்லா -VE ப்ளட் க்ரூப்பும் அரிதுதான்.) ஒவ்வொரு நாற்பது நாளைக்கும் ஒரு முறையும் இரத்த தானம் செய்வது வாடிக்கையாயிற்று. ஆனால் ஒரு நாள் என்னுடைய மகனுக்கே நான் இரத்தம் கொடுக்க வேண்டியிருக்கும் என்று எண்ணியதில்லை.

சாதாரணக் காய்ச்சல் போலத்தான் இருந்தது சின்னவனுக்கு. ஆனால் இரண்டாம் நாள் 101, 102 என்று எறிக் கொண்டேயிருந்தது. இந்திரா நகரிலுள்ள நர்சிங் ஹோமில் அட்மிட் செய்தோம். மூன்றாம் நாள் ஹீமோக்ளோபின் சதவிகிதம் கிடுகிடுவென குறைய ஆரம்பித்து விட்டது என்றும், உடனடியாக ரத்தம் கொடுக்க வேண்டும் என்று தலைமை டாக்டர் கூறினார். அப்போதுதான்,
அவன் இரத்தம் என்ன க்ரூப் என்று பரிசோதிக்கப்பட்டது. அது A2-VE என்றும் கண்டுபிடிக்கப்பட்டது. நெருங்கிய உறவினர் கொடுப்பதே நல்லது என்று கூறினார்.

"என்னுடையது A1-VEதான். நான் கொடுக்கலாமா?"

"தாராளமா. ஆனா, அதுக்கு முன்னாடி மேட்சிங் பார்க்கச் சொல்லறேன்."

பொருத்தம் பார்க்கப்பட்டு, என்னுடைய இரத்தம் கொடுக்கலாமென்று முடிவு செய்யப்பட்டது.

"நுங்கம்பாக்கத்தில் இருக்கு ப்ளட் பாங்க். அங்கே போய் எடுத்து ப்ளட் எடுத்துட்டு செக் பண்ணிக் கொண்டு வந்து விடுங்க"

அடையாறிலிருந்து கிளம்பி, நுங்கம்பாக்கத்தில் உள்ள இரத்த வங்கிக்குச் சென்றேன். அரை மணியில் என்னுடைய இரத்தத்தை எடுத்து அதற்குண்டான பிரத்யேகமான பையில் போட்டுக் கொடுத்தார்கள். என் மகனுக்கு, என் இரத்தத்தை நான் கொடுக்க, ஐனூறு ரூபாய் கொடுக்க வேண்டியிருந்தது. டெஸ்டிங் சார்ஜாம்.

யமஹா பைக்கில், என்னுடைய இரத்தப் பையை எடுத்து கொண்டு நர்ஸிங் ஹோம் நோக்கி விரைந்தேன். வரும் வழியில் கொட்டும் மழை வேறு. என்னுடைய வருகையை அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தனர். உடனடியாக இரத்தம் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.

"இப்ப கொடுக்க ஆரம்பிச்சுட்டோமே. இனிமேல் கவலையில்லையே டாக்டர்?"

"பார்க்கலாம். நான் மத்தியானம் ரவுண்ட்ஸ் வருவேன். அப்பப் பார்க்கிறேன்."

குழந்தை எப்படி இருக்கிறான் என்று பார்க்கப் போன மனைவிக்கு அதிர்ச்சி.

"ஐயையோ. இங்கே வாங்களேன். இவன் மூஞ்சியிலே பாருங்களேன். சிவப்பு, சிவப்பா. முதுகுலியும் இருக்கு. ஸிஸ்டர். இதப் பாருங்க. ஏன் இப்படி?" திட்டு திட்டாக உடம்பு முழுவதும் சிவப்பு பேட்ச்.

"கொசுக்கடிதான் மேடம். வேற ஒண்ணும் இருக்காது."

அதற்குள் தலைமை டாக்டர் என்னவோ பிரச்சினை என்று ஓடி வந்து பார்த்தார்.

"உடனே, அந்த இரத்தம் கொடுக்கிறதை நிறுத்துங்கம்மா. இரத்தம் மிஸ்மேட்ச் ஆகி ஒத்துக்கலை."

"எப்படி டாக்டர்? மேட்சிங்தானே பார்த்தோமே."

"சொல்ல முடியாது. சில சமயம் இப்படித்தான் ஆகும்."

இப்படியாக இந்த முறை, எனது மகனுக்கு இரத்தம் தேவைப்பட்டும் கொடுக்க முடியாமற் போனது.

புது வீட்டிற்கு குடி வந்த அன்று, எல்லா வேலைகளையும் முடித்து, டிவிக்கும் இணைப்பு கொடுத்துவிட்டு, படுக்கைக்குப் போக எண்ணிய போது டெலிபோன் ஒலித்தது.

"ஸார். எம்பேர் ராம்தாஸ். எப்படியோ உங்களை போனிலே பிடிச்சுட்டேன் ஸார். அக்கா பொண்ணு, இங்க மலர்ல அட்மிட் ஆகியிருக்கா ஸார். கார்த்தால ஆபரேஷன். A1-VE ப்ளட் ஸார். யாருமே கிடைக்கலை. கடைசியா உங்க நம்பரை புடிச்சேன்."

"இப்போ என்னங்க பண்ண முடியும்? கார்த்தாலே 6 மணிக்கு வரேன்."

"இல்லை ஸார். இப்பவே வரணும். ப்ளட் தயாரா இருக்குன்னு சொன்னாத்தான், கார்த்தாலே பெரிய டாக்டர் வருவாராம்"

"சரி. இன்னும் பத்து நிமிஷத்திலே அங்கே வரேன்"

"என்னங்க. மணி பதினொண்ணாகுது. இது ஜெனியூன் கால்தானா? பாத்துக்குங்க."

"எல்லாம் கரெக்டாத்தான் இருக்கும். வேணுன்னா கார்லேயே போறேன்"

மலரில் நான் வந்து இறங்கும் போது மணி பதிணொண்ணரை.

"ஸார். நாந்தான் ராம்தாஸ். போன் பண்ணிப் பேசினது நாந்தாங்க. பாருங்க. அக்கா பொண்ணு. பத்து வயசுதாங்க. தாலசீமியா இருக்குது. இப்ப அப்பெண்டிஸ்ன்னு வேற சொல்றாங்க."

"கலை, ஸாருக்கு வணக்கம் சொல்லு. ஸார். கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. டாக்டர் வந்துகிட்டே இருக்காராம்."

சுமார் 45 னிமிடங்கள் கழித்தே டாக்டர் வந்தார். நாள் பூரா நாய் மாதிரி அல்லாடிவிட்டு, நடு இரவு 12.30 மணிக்கு மலரின் நான்காவது மாடியில் படுத்துக் கொண்டு இரத்த தானம் செய்து கொண்டிருக்கின்றேன்.

எதற்காக இப்படி செய்து கொண்டிருக்கின்றேன், தேவையா, என்றெல்லாம் எண்ணியபடியே
உடைகளை சரி செய்து கொண்டு கிளம்பத் தயாரானேன்.

திடீரெனெ ராம்தாஸ் வந்து காலில் சாஷ்டாங்கமாய் விழுந்தான். எப்படியும் என்னை விட சுமார் பத்து வயசாவது பெரியவனாக இருப்பான் (ர்). எனக்கு என்னாவோ போலாகி விட்டது. அவனை(ரை) எழுப்பி சமாதானப்படுத்துவதற்குள் போதும் பொதும் என்றாகி விட்டது.

"இல்லை ஸார். நீங்க தெய்வம்....." என்று அவன்(ர்)பாட்டுக்கு உணர்ச்சிவசப்பட்டு ஏதேதோ பேசிக் கொண்டிருந்தான்(ர்).

தானத்தில் சிறந்தது இரத்த தானம் என்பதை அன்றுதான் உணர்ந்து கொண்டேன்.

கடைசியாக ஒரு எபிசோட். பையனது பள்ளியில் இரத்த தான முகாமாம்.

"அப்பா, அப்பா, வெள்ளிக் கிழமை எங்க ஸ்கூல்லில் ப்ளட் டொனேஷன் கேம்ப். நீங்க வந்து ப்ள்ட் கொடுங்கோப்பா. யாருமே அவங்க அப்பாவைக் கூட்டிண்டு வர மாட்டாங்க. நான் என்னோட ப்ரெண்ட்ஸ் எல்லார்கிட்டேயும் சொல்லி விட்டேன், எங்க அப்பா கண்டிப்பா வருவாங்கன்னு."

"கண்டிப்பா வரேண்டா. இண்ணொண்ணு தெரியுமோ. இது வரைக்கும் 24 தடவை கொடுத்து விட்டேன். உங்க ஸ்கூல்ல கொடுத்தா, குவார்ட்டர் செஞ்சுரி."

வெள்ளியன்று பையனுடன் பள்ளி சென்றேன். அவனுக்கு ஒரே பெருமை. எனக்கும் சற்றே.

முதலில் மெடிகல் செக்கப் செய்ய அழைக்கப்பட்டேன்.

"ஸார். 24 முறை இரத்தம் கொடுத்திருக்கிறீங்க போலிருக்கு. கடைசியாக எப்போ கொடுத்தீங்க?" என்றார், அந்த ஹவுஸ் சர்ஜன் போன்றிருந்த இளம் டாக்டர். ஐடி கார்ட், டாக்டர்.பிரேம் என்றது.

"ப்ளட் கொடுத்து, ஒரு வருஷத்திற்க் மேலா ஆச்சு டாக்டர். ஆபீஸ் வேலை டைட்டாக இருக்கு"

"பை தி வே, நீங்க எதாவது மெடிசின்ஸ் சாப்ப்பிடுற்றீங்களா?"

"ஆமாம் டாக்டர். ஒரு சின்ன ப்ராப்ளம். அதுக்காக ஆறு மாசமா, சின்ட்ரோல் சாப்பிடறேன்."

"அதான பார்த்தேன். எனக்கு ஸ்லைட்டா டவுட் இருந்தது. நீங்க இனிமே இரத்தம் கொடுக்க வேண்டாம்."

"னிஜமாகவா?"

"னெறைய கொடுத்துவிட்டீங்களே. இனிமே உங்க ப்ரெண்ட்ஸைக் கொடுக்கச் சொல்லுங்க"

"ஓகே. நோ ப்ராப்ளெம். தாங்ஸ். வருகிறேன்."

பயங்கர ஏமாற்றத்துடன் காரிடாரில் வந்து கொண்டிருந்த போது, திடீரென்று எதோ தோன்றியது. ப்ள்ட் எடுத்துக் கொண்டிருந்த இடத்திற்கு ஒடினேன்.

"ஸிஸ்டர். இப் யு டோண்ட் மைண்ட், ஒரே ஒரு ப்ளாஸ்டர் கிடைக்குமா?"

ஸிஸ்டர் கொடுத்த அந்த சிறிய வட்ட ப்ளாஸ்டரை, பையன் பார்ப்பதற்குள் அவசரமாக புஜத்தில் ஒட்டிக் கொண்டேன்.